தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. கொஞ்சமாவது மரபு மேலே அல்லது தார்மீகமான நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் இந்த ஆளுநரும், அவரை தமிழ்நாட்டிற்கு அனுப்பிய மத்திய அரசும் ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு ஆளுநருக்கு இதை விட பெரிய கொட்டு கொடுத்திருக்க முடியாது. அதற்கு ஆர் என். ரரவிதான் காரணம் ஆவார். சில பதவிகள் மிகவும் பொறுப்பு வாய்ந்தவையாகும். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுஙகள் எனக்கு கவலை இல்லை என்று சொன்னவர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அவசியம் இல்லாத மசோதாவை, அவருக்கு அனுப்பிவைத்தார். பின்னர் அங்கே அனுப்பிவிட்டேன் நான் என்ன செய்வது என்று கேட்கிறார். அரசியல் நிர்வாகத்தில் இருந்துகொண்டு சிறுபிள்ளைத்தனமான செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு வந்தார். அனைத்து வழிகளிலும் ஒரு ஆளுநராக இருப்பதற்கு தகுதி அற்றவர் ஆர்.என்.ரவி. தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்புவது, தமிழகம் என்பதே சரியான பெயர் தமிழ்நாடு என்பது தவறானது என்று சொல்கிறார். இதனை சொல்வதற்கு அவர் என்ன தமிழறிஞரா? இவருக்கு என்ன தமிழ் தெரியும்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால் அந்த மசோதாவுக்கு இத்தனை நாட்களுக்குள் ஒப்புததல் அளிக்க வேண்டும் என சொல்லவில்லை என்பது உண்மைதான். 1948 – 1950 வரையிலான கால கட்டத்தில் நாம் உணர்ந்த பெரிய பிரச்சினை என்பது இந்தியா ஒருநாடாக இருக்க வேண்டும் என்பதுதான். 1947ஆம் ஆண்டிலேயே 3 இந்தியா இருந்தது. பிரிட்டிஷ் இந்தியா, பழங்கால முடியரசுகளின் இந்தியா மற்றும் பூர்வகுடிகளின் இந்தியா
என்று 3 இந்தியா இருந்தது.1950 ஜனவரி 26ல் அரசியலமைப்பு சட்டம் வந்த பிறகுதான் ஒன்றுபட்ட இந்தியாவாக மாறியது. அப்போது மாநில அரசுகள் தனியாக பிரிந்துசெல்ல விரும்பினால், உடனடியாக அனுமதி வழங்காமல் அவர்களுடன் ஒன்றிணைந்து இருக்க பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலாரை சனாதனவாதி என்று சொல்கிறார். கம்யூனிசம் வந்ததால் நாடு நாசமானதாக சொல்கிறார். என்ன இவருக்கு பொருளாதார அறிவோ, அரசியல் அறிவோ, சமுக பிரக்ஞையோ இருக்கிறது என்று தெரியாது. இப்படி எல்லாம் பேச யார் சொல்லி கொடுத்தது? இப்படி எல்லாம் பேசும் ஆளுநரை, உள்துறை அமைச்சர் கண்டித்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்யாததால்தான் இன்றைக்கு உச்சநீதிமன்றம் ரவியை கண்டித்துள்ளது.
7 பேர் விடுதலையும் அப்படி தான் விடுதலை செய்தார். சட்டத்தின் மாண்பை உணர வேண்டியவர்களே, சட்டத்தின் மாட்சியை மதிக்க வேண்டியவர்களே அந்த மாண்பை கெடுக்கும் சூழல் ஏற்பட்டால் அந்த நேரத்தில் சட்டத்தின் மாண்பு நிலை நிறுத்தப்படுவதற்காக உச்சநீதிமன்றத்திற்கு இந்த சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதை அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ஆளுநருக்கு என்று அரசியல் அமைப்பு சட்டம் சில அதிகாரங்களை வழங்கியுள்ளது. ஆனால் வேந்தர் பதவி என்பது அந்த அதிகாரம் இல்லை. ஆளுநர்கள் பெரிய மனிதர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரசுப் பல்கலைக் கழகங்களில் வேந்தர் பொறுப்பு ஆளுநருக்கு வழங்கப்பட்டது.

இன்றைக்கு கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகளை ஆளுநர் ரவி கிளப்பி கொண்டிருக்கிறார். தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கும்படி பல்கலைக்கழக துணை வேந்தர்களை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தை நடத்துவதற்கான எந்த அதிகாரமும் அவருக்கு கிடையாது. உயர் கல்வித்துறை அமைச்சர்தான் பல்கலைக்கழங்களுக்கு இணை வேந்தர். பல்கலைக்கழங்களின அன்றாட பணிகளை கவனிப்பது என்பது துணை வேந்தர் ஆவார். சிண்டிகேட், பதிவாளர் துணையுடன் அவர் பணிகளை மேற்கொள்வார். எல்லாவற்றிலும் அவர் தலையிட முயற்சித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் மீது குற்ற வழக்கு உள்ள நிலையில், அவர் மீது வழக்கு தொடர அரசு முயற்சித்தது. ஆனால் ஆளுநர், புகாருக்குள்ளான துணை வேந்தரை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனால் யார் சொல்வதை கேட்பது என்று துணை வேந்தர்களுக்கு தடுமாற்றம் ஏற்படும். இன்றைக்கு அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.
மாநில அரசுகள் ஒழுங்கீனாமாக நடந்தால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் ஒன்றிய அரசுககு அதிக அதிகாரங்களை அரசியலமைப்பு சட்டம் அளித்தது. அப்போது மத்திய அரசு ஒழுங்கீனமாக செயல்படும்போது யார் அவர்களை கட்டுப்படுத்துவது? இன்றைக்கு அதுதான் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேசிய புதிய கல்விகொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர மாட்டேன் என்று எச்சரிக்கிறார்கள். எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. நாங்க அப்படிதான் செய்வோம் என்று மத்திய அரசு செயல்படுகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று வழக்கறிஞர்களுக்கு பல லட்சம் செலவு செய் என்கிறார்கள். இப்படிதான் ஆட்சி நடைபெறுகிறது. அந்த கட்சியை சேர்ந்த ஆர்.என்.ரவி வேறு எப்படி இருப்பார். இறுதியில் உச்சநீதிமனறம் இந்த விஷயத்தில் சரியான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. நான் மேஜிஸ்திரேட்டாக இருந்தபோது கடவுளிடம் கேட்டுவிட்டு தீர்ப்பு சொன்னதில்லை. ஆனால் அப்படி சொன்னவர்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர் என்று கேள்விப்படுகிறோம். இந்த நிலைமையில இந்த தீர்ப்பு மிகமிக வரவேற்க தக்கது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் அரசியமைப்பு சட்டத்தின் அடிப்படையை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனால் இது வரவேற்க தக்க தீர்ப்பு ஆகும். குறிப்பாக 10 பல்கலைக்கழக சட்டங்கள் நிறைவேறி உள்ளது வரவேற்கத்தக்கதாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.