பாஜக உடன் தேர்தல் ஆணையம் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை குலைத்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி தொடர்பாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து தலைநகர் டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றுள்ளது. இது ஒரு அடையாள அரசியலாக இருக்காமல் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டு என்கிற பதற்றம் எல்லோருக்கும் வந்துள்ளது. வாக்குப்பதிவு மோசடி என்பது எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் கையில் எடுத்திருக்க வேண்டிய விஷயமாகும். தற்போதாவது ராகுல்காந்தி தலைமையில் அனைத்துக்கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதை பார்த்து பாஜக, டெல்லி எல்லோரும் பதறி உள்ளனர். எதிர்க்கட்சிகள் பேரணியை நகர விடாமல் இரும்பு தடுப்புகளை அமைத்து, அவர்களை கைது செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்பது ஒரு அகில உலக செய்தியாகும். அதற்கு காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவுக்கு எப்படி தேர்தல் நடத்துவார்கள் என்கிற ஒரு எள்ளல் பார்வை பிரிட்டிஷாரிடம் இருந்தது. அதை உடைத்து தான் 1952ல் பிரதமர் நேரு தேர்தலை நடத்தினார். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம் என்று வேறுபட்டு கிடந்த மக்களை வைத்து தேர்தல் நடத்தினார்கள். அது தேர்தல் ஆணையத்திற்கும், அன்றைய பிரதமர் நேருவுக்கும் கிடைத்த பெருமையாகும்.
இன்றைக்கு அந்த நேருவுடைய பேரன்தான், தேர்தல் முறையே இந்தியாவில் சிதைந்துவிட்டது. இனிமேல் இங்கு தேர்தல் நடத்துவதே கேலிக்கூத்தாகிவிடும் என்று குற்றம்சாட்டியுள்ளார். எப்படியாக இருந்தாலும் பாஜக வெற்றி பெறுவதற்கு அனைத்து வேலைகளையும் பார்த்துவிடுவார்கள் என்றால்? நாட்டில் எதற்காக தேர்தல் நடத்தப்பட வேண்டும்? தேர்தல் தேதி அறிவித்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து, கோடிக்கணக்கில் செலவு செய்து எதற்கு தேர்தல் நடத்த வேண்டும்? இப்படிதான் தேர்தல் நடைபெறும் என்றால் தேர்தலே நடத்த வேண்டாம். ஏனென்றால் மிகவும் தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. பாஜக வெற்றி பெறுவதற்காக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் எல்லாம் அண்டை மாநிலங்களில் இருந்து வந்து வாக்களித்துள்ளனர். அதற்கான ஆதாரங்களை கேட்டால் தேர்தல் ஆணையம் சிசிடிவி காட்சிகளை அழிக்கிறது. டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை கேட்டால் தர மறுக்கிறீர்கள். இவ்வளவு வெளிப்படையாக பாஜகவுக்காக நாங்கள் செயல்படுகிறோம் என்று தேர்தல் ஆணையம் இருக்கும்போது, உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீது என்ன பெயர் கிடைக்கும்?
மிகப்பெரிய போராட்டத்தை ராகுல்காந்தி முன்னெடுத்திருக்கிறார். இது தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்க வேண்டும். ஒரு தன்னாட்சி அமைப்பை நோக்கி, அனைத்துக்கட்சிகளுக்கும் நம்பிக்கையுள்ள ஒரு இடத்தை நோக்கி எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்றால், எவ்வளவு வேதனையான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஊடகங்கள், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்தும் பாஜகவின் கைகளில் உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக நடிகை கஜோல் கூட எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடவில்லை. சண்டைசெய்வோம் வா என்று வீதியில் நிற்கிறார். அதனை கண்டு திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் களத்தில் இறங்கிவிட்டன. அகிலேஷ்யாதவ், தடுப்பு அரண் மீது ஏறி குதிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதன் பிறகு சாலையில் அமர்ந்து அகிலேஷ் போராட்டம் நடத்துகிறார். அப்போது, அர்னாப் கோஸ்வாமி டிவியின் நிருபர் மைக்கை நீட்டி, SIR நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? உண்மையான குடிமக்களை கண்டுபிடிக்கும் முறையை எதிர்ப்பது ஏன்? என்று கேட்கிறார். அந்த கேள்வியை கேட்ட உடன் அந்த நிருபரை பார்த்த அகிலேஷ், மைக்கை பிடித்து பாஜகவின் தொலைக்காட்சி தானே, உங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் போங்க என்று சொன்னார்.
இந்த விவகாரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் எனில், ராகுல்காந்தியை பின்பற்றினாலே போதும். தனக்கு நாட்டை ஆள வேண்டும் என்கிற விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். நாட்டில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும், அங்கு நான் போய் நிற்பேன் என்கிறார். தற்போது தேர்தல் ஆணையம் பதறிப் போய் உள்ளது. அவர் பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில தேர்தல் விவரங்களை தான் கையில் எடுத்து இருக்கிறார். நாடு முழுவதும் தேடி எடுத்தால் வடஇந்தியாவில் 80 சதவீதம் நடைபெற்று இருக்கும் என்பதுதான் என்னுடைய கருத்து. இப்படியே சென்றால் தேர்தலை எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள். நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிறார்கள். அதைதான் ராகுல்காந்தியும் சொல்கிறார். 15 தொகுதிகளில் அவர்கள் முறைகேடு செய்து, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என்கிறார். இவர்கள் எப்போது தேர்தலை நேர்மையாக சந்தித்தவர்கள் கிடையாது. மக்களை சந்தித்தவர்கள் கிடையாது. மக்களுக்கான பிரச்சினைகளை பேசி வந்தவர்கள் கிடையாது. அவர்களை பொருத்தவரை கடவுள், மதம் அவ்வளவுதான். இவர்களுடைய நோக்கமே சாதிய அமைப்புகளை பேணி பாதுகாப்பது. மதத்தை வைத்து அரசியல் செய்வது. இந்தி உணர்வை வளர்த்துக்கொண்டே இருப்பது. இதை தமிழ்நாடு 100 வருடங்களுக்கு முன்பே உணர்ந்துகொண்டது. இன்றைக்கு உ.பி., மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் உணர்ந்துள்ளன. மற்ற மாநிலங்களும் கூடிய விரைவில் உணரும்.
ராகுல்காந்தியின் தலைமை, அவரது உழைப்புக்கு மரியாதை தந்து எதிர்க்கட்சிகள் செயல்பட்டார்கள் என்றால் அதற்கான விடிவு கிடைக்கு. இல்லை வழக்கமான கட்சி அரசியல் செய்வோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்போம் என்றால் கடந்த தேர்தலை போல தான் முடிவுகள் வரும். உண்மையான இந்தியா கூட்டணி என்கிற பெயருக்கு ஏற்றார்போல் இந்தியாவை திரட்டுகிற வேலையை ராகுல்காந்தி செய்கிறார். அவர் தலைமையில் தேர்தல் முறைகேடு பிரச்சினைகளை தொடர்ச்சியாக பேசினார்கள் என்றால்? இவர்கள் மிகப்பெரிய அளவுக்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் நீங்கள் தேர்தலே நடத்த வேண்டாம். பாஜக மட்டும் தான் ஆட்சிக்கு வரும். ஒரே நாடு ஒரே தேர்தலை பாஜக ஏன் கொண்டு வருகிறார்கள் என்றால், அவர்களால் எளிதாக முறைகேடு செய்ய முடியும். இதையே தான் தேர்தல் ஆணையமும் செய்துள்ளது உ.பி.யில் உள்ளவர்களுக்கு கர்நாடகாவிலும், கர்நாடகாவில் உள்ளவர்களுக்கு மகாராஷ்டிராவிலும் வாக்குகளை வழங்கியுள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.