Homeசெய்திகள்கட்டுரை2026 தேர்தல் - வியூகம் வகுக்க தெரியாமல் குழப்பத்தில் மூழ்கி போன அரசியல் கட்சிகள்

2026 தேர்தல் – வியூகம் வகுக்க தெரியாமல் குழப்பத்தில் மூழ்கி போன அரசியல் கட்சிகள்

-

- Advertisement -

என்.கே.மூர்த்தி

2026ல் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகளுக்கு பல சவால்கள், நெருக்கடிகள் வரிசைக் கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவிற்கு கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதில் பெரும் சவால்கள் இருக்கிறது. திமுக நிர்வாகிகளிடையே உள்ள அதிருப்தி, தேர்தலுக்கு முன்பு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை என்ன செய்யப்போகிறதோ என்ற கவலை போன்ற நிறைய சவால்கள் எதிர்நோக்கி உள்ளது.

அதேபோன்று எதிர்கட்சியாக உள்ள அதிமுக – விற்கு கூட்டணியை கட்டமைப்பது, இரட்டை இலையை பாதுகாப்பது என்று பெரும் சவால்கள் எதிர்நோக்கி உள்ளது. அடுத்தது தேர்தல் ஆணையத்தில் அங்கிகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் வரிசையாக வெளியேறி வருகின்ற நெருக்கடியில் சீமான் இருந்து வருகிறார். தவெக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் 2025 தொடக்கத்திலேயே புதிய புதிய வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டார்கள் என்று சொல்வதா அல்லது செய்வதை தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களா என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

திமுக கட்சிக்குள் இருக்கும் சவால்கள்

திமுகவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு அடுத்தக்கட்ட பொறுப்பில் இருப்பவர்களை தவிர வேறு யாரும் சுபிட்சமாக இல்லை என்பது தலைமைக்கு தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு வட்டச் செயலாளர் ஏதாவது ஒரு கோரிக்கையை கொண்டு சென்றால் அதிகாரத்தில் உள்ளவர்கள் காது கொடுத்து கேட்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

நடப்பது திமுக ஆட்சி. ஆனால் பெரிய பெரிய டெண்டர்கள் அனைத்தும் அதிமுகவினர் தான் எடுத்து சம்பாதித்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில், மாநகராட்சியில் ஒப்பந்தங்களை எடுத்து சொகுசாக வாழ்ந்த அதிமுகவினர் தான் இந்த ஆட்சியிலும் கொடிகட்டி பறக்கிறார்கள். அவர்கள் கட்சிக்காரர்களை விட திமுக அமைச்சர்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடியப் போகிறது. இதுவரை ஒரு டாஸ்மாக் பார் கூட திமுக நிர்வாகிகளால் எடுக்க முடியவில்லை என்று புலம்பி தீர்த்து வருகின்றனர். பார் நடத்துபவர்கள் பெரும்பாலனவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்பது உலகம் முழுவதும் தெரிந்த ரகசியம்.

27 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. புதியதாக பேரூராட்சி, நகராட்சிகளை உருவாக்கியும், சில கிராம பஞ்சாயத்துகளை மாநகராட்சியுடன் இணைத்தும் அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான வார்டு வரையறைகளை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டிற்கு மேல் ஆகும். இந்த நிலையில் பதவியை இழந்துள்ள திமுக நிர்வாகிகள் சிலர் மனக் கசப்பில் இருந்து வருகின்றனர். திமுகவிற்கு இருக்கின்ற மிக முக்கிய சவால் சொந்தக் கட்சியினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் இருக்கிறது.

கூட்டணி கட்சிகள் கொடுக்கும் குடைச்சல்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிக முக்கியமான கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அந்த கட்சி கடந்த ஆறு மாதகாலமாக ஆதவ் அர்ஜுனாவை வைத்து திமுகவிற்கு குடைச்சலை கொடுத்து வந்தது. ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்று வெளிப்படையாக பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர். ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து விலகியப் பின்னர், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி வன்னியரசு திமுக கூட்டணியில் ஒற்றை இலக்கில் போட்டியிட மாட்டோம் என்று மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி திமுகவிற்கு நெருக்கடியை கொடுத்தார்.

திமுக கூட்டணியில் இருந்து வரும் மற்றொரு முக்கிய கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (CPIM). அந்த கட்சி சார்பில் சமீபத்தில் நடந்த மாநில மாநாட்டில் நாங்கள் திமுகவின் வெளிச்சத்தில் இல்லை என்று பகீரங்கமாக அறிவிக்கின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டே தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால் மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மீது அதிருப்தி ஏற்படும். அப்படி அதிருப்தி ஏற்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்திலே தான் பேசுகிறார்கள். இப்படி கூட்டணிக்குள்ளே இருந்து கொண்டு ஆளும் கட்சியை விமர்சனம் செய்து கொண்டே தேர்தலை சந்தித்தால் அந்த கூட்டணியை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அதனால் கூட்டணி கட்சிகளை ஒழங்குப்படுத்த வேண்டிய, கூட்டணியை பாதுக்காக்க வேண்டிய சவால் திமுகவிற்கு இருக்கிறது.

அதிமுக தவிப்பு

திமுகவில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதோ அதைவிட பல மடங்கு பிரச்சனைகள் அ.தி.மு.க- விலும் இருக்கிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக மீண்டும் ஒரு புது குழப்பம் உருவாகியுள்ளது. இரட்டை இலை தொடர்பாக ஓபிஎஸ், கே.சி.பழனிச்சாமி, புகழேந்தி என்று தேர்தல் ஆணையம் நிறைய பேரிடம் கருத்து கேட்டு வருகிறது. அதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டிய நெருக்கடிக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.மேலும் கூட்டணி தொடர்பான முயற்சியிலும் பெரிய அளவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைக்கொடுக்கவில்லை. அதிமுக என்னதான் வீரவசனம் பேசினாலும் தேர்தல் வெற்றி என்பது தொடர்ந்து அக்கட்சிக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று ஆட்சியை பிடிக்கிறதோ இல்லையோ குறைந்தப் பட்சம் தற்போது இருக்கின்ற 65 சட்டமன்ற உறுப்பினர்களையாவது மீண்டும் வெற்றிப் பெற்று வலுவான எதிர்கட்சியாக வரவேண்டும் என்கிற நிர்பந்தம் அதிமுக – விற்கு இருக்கிறது.

அதனால் “யார் அந்த சார்” என்ற ஒன்றுமில்லாத விசியத்தை கையிலெடுத்து பரப்பரப்பாக மாற்றினார்கள். கடைசியில் ஒன்றுமில்லாமல் போனது. அவர்களுக்கு எந்தப் பிரச்சனையை கையிலெடுக்க வேண்டும், எதை எடுக்கக் கூடாது என்று கூட தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி, ஆளுநர் சட்டப்பேரவையின் மரபுகளை மாற்றச் சொல்கிறார், பேரவையை அவமானப் படுத்திவிட்டு செல்கிறார். அதற்கு கூட குரல் கொடுக்க முடியாத பரிதாப நிலையில் தான் அதிமுக இருக்கிறது.

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுகளுக்கு எவ்வித பங்கும் இல்லை என்று ஒன்றிய அரசு அறிவிக்கிறது. மாநில அரசின் உரிமையை பறித்துக் கொண்டது. அதை எதிர்த்து திமுக குரல் கொடுக்கிறது. அதிமுக கண்டும் காணாமல் அப்படி ஒரு பிரச்சினை இருப்பதே தெரியாமல் கடந்து செல்கிறது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பான்மையான அரசியல் கட்சிகளுக்கு கொள்கை தலைவர் தந்தை பெரியார் தான். அந்த தலைவரை இழிவு படுத்தி சீமான் பேசுகிறார். அதற்கு கூட எதுவும் பேசாமல் அதிமுக மவுனம் காக்கிறது. கொள்கை பிரச்சனையாக இருந்தாலும், மாநில உரிமை பிரச்சனையாக இருந்தாலும் என்ன செய்வதென்று தெரியாமல் அதிமுக தலைமை திணறி வருகிறது.

2026 தேர்தல் திமுக – அதிமுக கட்சிகளுக்கு ஆட்சியை பிடிப்பதில் நீயா, நானா என்கிற போட்டியில் நிறைய சவால்கள் இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு அதைவிட கூடுதலான சவால் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தவெக தொடங்கி எங்கள் கொள்கை தலைவர் தந்தை பெரியார் என்று அறிவித்த பின்னர் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் 2010ல் கட்சியை தொடங்கியபோது எங்களுடைய கொள்கை தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்று பிரகடனம் செய்த சீமான், தற்போது அவருடைய கொள்கை தலைவர் மீதே பொதுத் தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார். அந்த அளவிற்கு குழம்பிப் போய் இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் என்ன நடக்கிறது? அந்த கட்சி 2026 தேர்தலில் போட்டியிடுமா? அல்லது அடுத்த தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று சொல்லிவிட்டு வழக்கம் போல் ஒதுங்கி நிற்கப் போகிறதா ? என்கிற சந்தேகம் அரசியல் தெரிந்த அனைவருக்கும் எழுந்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் விஜய், இன்னும் நடிகராகவே இருந்து வருகிறார். ஒரு தலைவராக எப்போது செயல்பட போகிறார் என்று தெரியவில்லை. அந்த கட்சிக்குள் மிகப்பெரிய மர்மம் நீடித்து வருகிறது. அதேபோன்று பா.ம.க விலும் உட்கட்சி பிரச்சினை எழுந்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் அப்பா ஒரு திசையிலும் மகன் அன்புமணி ஒரு திசையிலும் கட்சியை இழுக்கிறார்கள்.

இப்படி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் 2025ல் வியூகம் அமைப்பது போல் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பாஜக, பாமக போன்ற கட்சிகள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் தவித்து வருவது எதார்த்தமாக தெரிகிறது.

MUST READ