2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் இலக்கு மேற்குவங்க மாநிலமாக தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் மோடியின் பேச்சு இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.


மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டணி தலைவர்கள் கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மதுராந்தகத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரை இந்தியில் இருந்தது, தமிழ்நாடு குறித்த குறைந்தபட்ச புரிதல் கூட பாஜகவுக்கு இல்லை என்பதற்கு உதாரணமாகும். ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் சொன்னதுதான் உண்மை. நீங்கள் ஒருபோதும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லை. பிரதமர் உரையிலும் திமுக மீது பெரிய குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை.
கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது, போதைப் பொருள் விவகாரம் குறித்து திமுக மீது பிரதமர் மோடி நேரடியாக தாக்குதல் நடத்தினார். ஆனால் பிரதமர் மோடியின் உரையை அவருடைய கடந்த கால உரைகளுடன் ஒப்பிட்டு பார்க்கிறபோது முழுமையாக இலக்கு அற்றதாகவும், நோக்கம் அற்றதாகவும் உள்ளது. மற்றொருபுறம் பிரதமர் மோடியின் பேச்சில் திரும்ப திரும்ப என்டிஏ ஆட்சி என்று தான் வருகிறது. அதிமுக ஆட்சி என்று வரவில்லை. ஒரு கட்டத்தில் பாஜக – என்டிஏ கூட்டணி ஆட்சி என்று சொல்கிறார். ஒருவேளை இந்த கூட்டணி வெற்றி பெற்றால் அது கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும்.

பிரதமர் மோடியின் பேச்சில் திமுக அரசின் வீழ்ச்சிக்கான கவுன்டவுன் தொடங்கி விட்டதாக சொல்கிறார். கரப்ஷன், மாபியா, க்ரைம் என்று சொல்வது வழக்கமான அரசியல் குற்றச்சாட்டுகள் தான். ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளை பார்க்கிறபோது, திமுக மீதான தாக்குதல் இன்னும் தீவிரமாக இருந்து இருக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தை போகிற போக்கில் தொட்டுச் செல்கிறார். இந்த கூட்டத்தை என்டிஏ தலைவர்களை அறிமுகம் செய்கிற ஒரு கூட்டமாகவே நடத்தியுள்ளனர். மதுராந்தகம் கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் சிறப்பாக பேசினார்கள்.
அவர்களுடைய பேச்சின் தீவிரத்தை பிரதமர் மோடியின் உரை எடுத்துச்செல்ல தவறிவிட்டது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை பற்றி பேசுகிறபோது மோடியின் உண்மையான முகம் வெளிப்படுகிறது. அது மிகவும் ஆபத்தானது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்ததாது ஏன் என்று கேள்வி எழுப்பலாம். அதைவிடுத்து சிறுபான்மை வாக்குகளை காங்கிரஸ், திமுக முயற்சிப்பதாக கூறுவது, பாஜகவின் மதவாத அரசியலாகும்.

மதுராந்தகம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் இணைந்துள்ளது தற்காலிகமானது என்றே நினைக்கிறேன். தேர்தல் நடைபெறும் வரை இருவருக்கும் பிரச்சினை வராது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும். அதிமுக – அமமுக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி கிடையாது. இருந்தபோதும் இந்த கூட்டணி கண்டிப்பாக பலன் அளிக்கும். டிடிவி தினகரன் வந்ததால் என்.டி.ஏவுக்கு 8 முதல் 12 இடங்கள் வரை இருக்கும்.
இது ஜெயலலிதா, விஜய்காந்த் கூட்டணி போன்றதாகும். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கூட்டணிக்காக ஒரே முறை தான் சந்தித்து பேசினார்கள். அதன் பிறகு இருவரும் தனித்தனியாக தான் பிரச்சாரம் செய்தனர். திமுகவில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை வைத்தே தினகரன் என்டிஏ-வுக்கு சென்றது பலம் என்பதை அறிந்து கொள்ளலாம். என்டிஏ கூட்டணியில் முதலில் அன்புமணி, பின்னர் டிடிவி தினகரன் வந்துள்ளது கூட்டணியை வலிமையானதாக மாற்றியுள்ளது. அவர்கள் திமுக கூட்டணிக்கு, சமமான போட்டியை கொடுப்பார்கள்.

தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி வேண்டும் என்றால் என்டிஏ டபுள் என்ஜின் சர்கார் வர வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்கிறார். அப்பட்டமாக பொய் சொல்வதில் மோடி, அமித்ஷா, மோகன் பகவத்தை மிஞ்ச ஆட்களே கிடையாது. தமிழ்நாட்டில் வளர்ச்சி இல்லை என்று சொல்வதை விட பெரிய பொய் எதுவும் கிடையாது. நிதி ஆயோக் புள்ளி விவரங்களின்படி வளர்ச்சி அடைந்த முதல் 3 மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இந்த பட்டியலில் கீழ் இருந்து 3 வது இடத்தில் பாஜக ஆளுகிற உத்தர பிரதேசம் உள்ளது. வெளிப்படையாக சொல்வது என்றால் இந்த தேர்தலில் பாஜகவின் குறி தமிழ்நாடு கிடையாது.
2026 தேர்தலில் அவர்களின் குறி ஒட்டுமொத்தமாக மேற்குவங்கம் தான். அவர்களின் குறி தமிழ்நாடாக இருந்தால் பிரச்சராம் இப்படி இருந்திருக்காது. இதைவிட படுமோசமாக இருந்திருக்கும். தமிழ்நாடு அவர்களின் ரேடாரில் இல்லை. இதை நினைத்து இந்தியா கூட்டணி சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம். அதையும் மீறி எதாவது நடந்தால் அது திமுக கூட்டணியின் தவறாக தான் இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


