ஓபிஎஸ் என்டிஏவில் கூட்டணி அமைத்தால் அவரால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது. அதேவேளையில் துரோக பட்டம் சூட்டினாலும் திமுகவில் இணைந்தால், ஒபிஎஸ் தரப்பில் மக்களிடம் நியாயம் கேட்க முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- என்.டி.ஏ கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் மற்ற அரசியல் தலைவர்களை போல அல்ல. அவர் மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். மற்றவர்களை போன்று திடீரென ஒரு கட்சிக்கு போய், கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவரால் முடியாது. அதில் சிரமம் உள்ளது. மற்றொன்று அவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என்றும், பி பார்மில் கையொப்பம் போடுவது நான் தான் என்று எடப்பாடியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார். அதிமுகவில் இன்னும் தனக்கு பங்கு உள்ளதாக போராடி வருகிறார். இந்த சூழலில் ஓபிஎஸ் மாற்றுக்கட்சியில் போய் இணைந்தால், அவர் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது. மற்றவர்களுக்கு இல்லாத தடைகள் அவருக்கு உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை நூறு சதவீதம் ஓபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார். அதே வேளையில் ஓபிஎஸ்-ஐ என்டிஏவுக்குள் இணைந்து போட்டியிடலாம் என்று எடப்பாடி சொல்லிவிட்டார். என்டிஏவில் ஓபிஎஸ் சென்றாலும், அவர் கடந்த முறை போன்று சுயேட்சையாக தான் போட்டியிட வேண்டும். அப்போதும் எத்தனை இடங்கள் கிடைத்தாலும் ஒரே சின்னம் அவருக்கு கிடைக்காது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளதால் தான் ஓபிஎஸ் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார். இன்னும் சில நாட்களில் அது முடிவுக்கு வரும். ஓபிஎஸ் உடன் இருந்த எல்லோரும் வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்ட நிலையில், எம்.பி. தர்மனும் எடப்பாடி பழனிசாமியுடன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காரணம் தர்மனுக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. வேறுகட்சிக்கு செல்லும்பட்சத்தில் அவருடைய பதவி காலியாகிவிடும். எனவே தனது எம்.பி., பதவியை தக்க வைப்பதற்காக அதிமுகவிலே தொடர திட்டமிட்டு உள்ளார். இன்றைக்கு டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக சேர்ந்து செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று ஒரு மாதத்திற்கு முன்பு யார் சொல்லியிருந்தாலும், யாரும் நம்பி இருக்க மாட்டோம். ஆனால் இன்று சந்தித்துள்ளனர். இது தான் அரசியல்.

ஓபிஎஸ்க்கு கூட்டணி செல்வதற்கு இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது. தற்போது என்டிஏவில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ் அந்த கூட்டணி இல்லாவிட்டால் தவெக அல்லது திமுகவிடம் தான் சென்றாக வேண்டும். அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், திமுகவுக்கு போகலாமா? அப்படி போனால் அவருக்கு என்ன பதவி கொடுப்பார்கள்? என்கிற நெருக்கடி உள்ளது. அதேபோல், விஜய் கட்சிக்கு செல்கிறபோது அவருக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று தெரியாது. ஓபிஎஸ் விஜயை சந்தித்து பேச முடியுமா? அல்லது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு கீழே அவரால் பணியாற்ற முடியுமா? என்பது கேள்விக்குறியாகும். இவற்றை ஆராய்ந்து தனக்கு தகுதியான இடத்திற்கு செல்வார்.
விஜய், ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று முதன் முதலில் அறிவித்த நிலையில், யாரும் அவருடன் கூட்டணிக்கு வரவில்லை. காரணம் அதற்கான கதவுகளை அவர்கள் திறந்து வைக்கவில்லை. கூட்டணி வைக்க விரும்புபவர்கள் வந்து தாங்கள் அமைத்துள்ள குழுவிடம் வந்து பேசுங்கள். அவர்கள் என்னிடம் அழைத்து வருவார்கள் என்று அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை. விஜய் தரப்பில் சில இடங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால் அவர்கள் விஜயிடம் கேட்டு சொல்கிறோம் என்று சொன்னதால் ஒன்றும் எடுபடவில்லை.

செங்கோட்டையன் வந்த பிறகு அவருக்கு மரியாதை அளித்து, அவர் தலைமையில் ஒரு பேச்சுவார்த்தை குழுவை அமைத்து, பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் அரசியல் கட்சிகளிடையே நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். ஆனால் விஜய் அதை செய்யவில்லை. நமபகத்தன்மையை விஜய் உருவாக்காததே அவரிடம் மற்ற கட்சிகள் செல்லாததற்கு காரணமாகும். எனவே திமுகவுக்கு செல்வதை விட தவெகவுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகும். அதேவேளையில் திமுகவுக்கு செல்கிறபோது சில பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அதை வெகு விரைவில் மக்கள் கடந்து சென்று விடுவார்கள். ஓபிஎஸ் தரப்பில் திமுக உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவே சொல்கிறார்கள். அதன் காரணமாகவே சேகர்பாபு சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கி என்டிஏ உடன் கூட்டணி வைத்தாலும், அவருக்கு அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது. திமுக உடன் கூட்டணி வைத்தாலும், அவரை துரோகி என்றுதான் சொல்வார்கள். எனவே அவர் என்டிஏ-வில் கூட்டணி வைப்பதை விட திமுகவில் சேர தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையை வீழ்த்த தனக்குவேறு வழியில்லாததால் திமுகவில் இணைந்ததாக ஓபிஎஸ் சொல்லலாம். அதற்கான நியாயம் அவரிடம் உள்ளது. அதனை ஏற்று மக்களும் வாக்களிப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


