விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக பிரியும். அதன் மூலம் திமுகவின் வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவி செய்வதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுக, அதிமுக கூட்டணிகள் உறுதியாகிவிட்ட சூழலில் திமுகவுக்கும், தங்களுக்கும் இடையே தான் போட்டி என்று சொன்ன விஜய தனித்துவிடப்பட்டிருக்கிறார். தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், 30 மணி நேரம் கழித்து தன்னுடைய புரொபைல் பிக்சரை மாற்றியுள்ளார். இந்த சூழலில் விஜயின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் என்பவர் குறைந்தபட்ச அரசியல் செயல்பாடுகளுடன் செயல்படக்கூடிய நபர் ஆவார். பல விஷயங்களில் அவருக்கு கருத்தே கிடையாது. கருத்து இருந்தாலும் கூற மாட்டார்.
கரூர் சம்பவத்திற்கு முன்பு வாரம் ஒரு முறை வந்து கொண்டிருந்தார். தற்போது அதுவும் நின்றுவிட்டது. 3 மாத இடைவெளிக்கு பிறகு ஈரோட்டில் கடந்த 18ஆம் தேதி கூட்டம் போட்டார். ஜனநாயகன் பிரச்சினையும், சிபிஐ சம்மனும் வந்த பிறகு அதுவும் நின்றுவிட்டது. இந்த சூழலில் இன்று தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் என்ன பேசுவார் என்று தெரியாது. அடுத்த நாள் முதல் தவெக தேர்தல் பணிக்குழுவினர் நேரடியாக மக்களை சென்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயை பற்றி எல்லோரும் பேசுகிறோம். அவரை தவிர. எந்த நெருக்கடி வந்தாலும், விஜய் பேச மறுக்கிறார். நான் ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறார்? அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அரசியல் ரீதியாக அதை அவர் எப்படி மேலே கொண்டுபோக போகிறார். தற்போது தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்துவிட்டது. அப்படி சின்னம் கிடைத்ததால் மட்டும் அவர் வெற்றி பெற்றுவிட மாட்டார். அது ஒரு கூடுதல் விஷயம். கொள்கையும் கோட்பாடும் இருந்தால், எந்த சின்னமாக இருந்தாலும் வெற்றி பெற்றுவிடலாம். அவை இல்லாமல் வெறுமனே விசிலை வைத்து ஊதிக்கொண்டு தான் போக வேண்டும்.
எனவே விசில் கிடைத்ததை ஒரு வெற்றியாக பார்ப்பது அபத்தம். 3 மாதமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருந்தவருக்கு ஒரு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. விஜய் வருகைக்கு பிறகு நான்கு முனை போட்டி என்பது உறுதி படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி வந்தால் திமுகவுக்கு தான் சாதகம். விஜய் தனித்து நிற்பதன் மூலம் திமுகவுக்கு அணுகூலமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.

விஜயின் செயல்பாடின்மை காரணமாக நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் ஒரு தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் காரணமாகவே அவரிடம் கூட்டணிக்கு செல்வதற்கு ஆட்கள் கிடையாது. விஜய் இன்றைக்கு தனி நபராக உள்ளார். அவரிடம் காங்கிரஸ் உள்ளிட்ட யாரும் போகவில்லை. போகவும் மாட்டார்கள். சிறிய கட்சிகள் கூட இன்றைக்கு பிரிந்து போய்விட்டனர். கிட்டத்தட்ட அனைத்துக்கட்சிகளும் என்டிஏ மேடையில் ஏறிவிட்டனர். மிச்சமிருப்பவர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். எஞ்சியுள்ளது தேமுதிக, ராமதாஸ், ஓபிஎஸ். இவர்களில் தேமுதிக, ராமதாஸ்க்கான இயற்கையான புகழிடம் விஜய் கிடையாது. அவர்கள் என்டிஏ அல்லது திமுக கூட்டணிக்கு தான் செல்ல வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அரசியல் ரீதியாக அனைத்தும் கிடைக்கும்.
ஆனால் தேமுதிகவுக்கு நிபந்தனைகள் அதிகமாக உள்ளதால், என்டிஏவில் கூட்டணி சாத்தியமில்லை. கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் வேண்டுமானால் போக வாய்ப்பு உள்ளது. அதுவும் திமுகவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செல்ல வேண்டி வரும். மருத்துவர் ராமதாஸ், திமுக கூட்டணிக்கு செல்லும்பட்சத்தில் கண்டிப்பாக திருமாவளவன் ஒப்புக்கொள்ள மாட்டார். 14 ஆண்டுகளாக ராமதாசை எதிர்த்து திருமாவளவன் அரசியல் செய்து வரும் நிலையில், அந்த கூட்டணி ஒருபோதும் ஜெல் ஆகாது.

விஜய் உடன் யாரும் சென்றுவிடக்கூடாது என்று என்டிஏ விரும்பியது. ஆனால் அவர்கள் கைகளை மீறி சென்றது. அவர்களின் அச்சத்திற்கு காரணம் விஜய் தனித்து நிற்பதால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் மூன்றாக பிரிகிறது. அதன் காரணமாக நான்கு முனை போட்டியில் திமுக வெற்றி பெறுவது உறுதி. அதேநேரத்தில் விஜய் வேறு முடிவுகள் எடுத்தாலோ, அல்லது அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாமல் ஒரு பகுதியில் மட்டும் போட்டியிட்டாலோ, அல்லது அவருடைய வேட்பாளர்கள் மாயமாகினார்கள் என்றாலோ என்டிஏ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு சென்றால் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ள வேண்டும்.
திமுகவுக்கு சென்றால் தற்கொலைக்கு சமம். கட்சியில் இருந்து வெளியே போன எம்ஜிஆர், வைகோ, டிடிவி தினகரன் போன்றவர்கள் தனிக்கட்சிகளை தொடங்கினார்கள். ஆனால் ஓபிஎஸ் தன்னுடைய அமைப்பு, தனிக்கட்சி இல்லை என்று சொல்கிறார்.ஓபிஎஸ் அரசியல் சண்டையை அரசியல் சண்டையாக நடத்ததால் இன்றைக்கு தனியாக நிற்கிறார். ஒருபுறம் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டு, அவருடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?

விஜய் தேர்தலில் நிற்காமல் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கசியவிடப்படுகின்றன. அதற்கு சாத்தியங்களும் உள்ளன. சிபிஐ விசாரணையின் போது விஜயிடம் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கலாம். அவை ஒருநாள் வெளியே வரும். பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு அனைத்துக் கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லக்கூடிய விஜய் எந்த கருத்தும் கூறவில்லை. விஜய் சாஃப்ட் பாஜக லைனை எடுக்கிறார். கேட்டால் இல்லாத பாஜகவை எதற்காக பேச வேண்டும்? என்று சொல்கிறார். மற்றவர்கள் எதிர்ப்பதை விட விஜய் எதிர்த்து இருந்தால் இன்றைக்கு மரியாதை அதிகமாகும். விஜயின் மௌனம் ஆபத்தானது. இன்று நடைபெறும் தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் என்ன பேச போகிறார் என்று பார்க்க வேண்டும்.
தவெக தொண்டர்கள் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து புரிதல் இல்லாத நிலையில் உள்ளனர். அதற்கு கள அரசியல் முக்கியமானதாகும். அது தவெகவில் இல்லாதபோது, அனுபவம் மூலம் பாடம் கற்றுக்கொள்வார்கள். அதற்கு எத்தனை தேர்தல்களை அவர்கள் தியாகம் செய்ய வேண்டும்? என தெரியாது. தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான முறையான வழிகளே இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி ஒருகட்சியை தொடர்ந்து நடத்த முடியாது. மக்களும், ஊடகங்களும், கட்சியினரும் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் விஜய் இருக்கிறார் என்றால்? தேர்தலை எதிர்கொண்டு பொட்டிகளை திறக்கும்போது தான் அவர்களுக்கு உண்மை தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


