பாஜக, திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தீவிர அரசியல் பேச தொடங்கியுள்ளனர். இனி அவர்கள் தவெக குறித்து பேச மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- நெருக்கடியில் இருக்கும் தவெகவுக்கு பொதுச்சின்னம் கிடைத்திருப்பதால் அவர்கள் 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடலாம். தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி தவெக விடுத்த கோரிக்கையை ஏற்று விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய், விசில் வெற்றியின் வெளிப்பாடு என்று கூறியுள்ளார். விசில் சின்னம் கிடைத்த பிறகும் இன்னும் விஜய் வெளியே வந்து, விசில் சின்னத்தை பிரபலப்படுத்தாதது ஏன்? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். அவருக்கு கேமரா வைத்து, லைட்டிங் போட்டால் தான் கூச்ச சுபாவம் போகும். பொதுமக்களிடம் பேசுவதாக இருந்தாலும் அவருக்கு கூச்ச சுபாவம்.
விஜயை பொருத்தவரை அவர் அரசியல் கட்சி நடத்தவில்லை. இன்னும் ஒரு நற்பணி மன்றமாக தான் இருக்கிறது. விஜய் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதை அவர் தான் வெளியிட்டாரா? அல்லது ஏ.ஐ. வெளியிட்டதா? என்று சந்தேகம் எழுகிறது. பரிசுப்பெட்டி சின்னம் வழங்கியபோது டிடிவி தினகரனும், முரசு சின்னத்தை பிரபல படுத்த விஜயகாந்த்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். புதிதாக கட்சி தொடங்கினால், சின்னத்தை பிரபலப்படுத்த கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் விஜய் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

விஜய் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்று சொன்னது மிகப்பெரிய அறிவிப்பு. அதை கேட்டும் யாரும் அவரிடம் கூட்டணிக்கு வராததற்கு காரணம், அவர்களுக்கு விஜய்க்கு ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்பது தெரியும். செங்கோட்டையன், தவெக செல்வதற்கு காரணம் அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்த முடிவுக்கு தள்ளப்பட்டார். ஆனால் மற்ற அரசியல் கட்சிகளுக்கு அப்படி இல்லை. அவர்களுக்கு எங்கு போதிய இடங்கள் கிடைக்கிறதோ? அங்கே தான் செல்வார்கள். நீங்கள் விஜயிடம் கூட்டணி சென்றால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்களா?
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவரை அடிக்கடி சந்திக்க முடியுமா? தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் விஜயை நம்பவில்லை. அவரை ஏற்றுக்கொள்ள வில்லை. காங்கிரஸ் கட்சி விஜய்க்கு நல்ல ஆசை வார்த்தை கூறி, திமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டது. டிடிவி தினகரன், விஜய் நல்லா வருவார் என்று சொல்லிவிட்டு, விட்டுவிட்டு போய்விட்டார்.

ஓபிஎஸ் நிலைமை என்பது சற்று பரிதாபத்திற்குரியதாகும். ஓபிஎஸ்க்கு வேறு வழியில்லை. அவரும் தினகரன் போன்று கட்சி தொடங்கி என்டிஏவில் இணைந்து விடலாம். இல்லாவிட்டல் சுயேட்சையாக தனிச் சின்னத்தில் போட்டியிடலாம். இல்லாவிட்டால் பாஜகவிலே சேரலாம். மற்றொருபுறம் அவர் திமுகவில் இணைந்து விடலாம். விஜய் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காத போதே மௌமான இருக்கிறார். இன்னும் கைது நடவடிக்கை, சொத்துக்கள் முடக்கம் செய்தால் என்ன செய்வார்?
விஜய்க்கு ஸ்டாலின் அங்கிள் என்று சொல்ல முடிகிறது. மோடி அங்கிள் என்று சொல்ல முடியாதா? விஜயின் முதல்வர் கனவு என்பது 2026ல் தகர்க்கப்படும். தேர்தல் நாளில் விஜய் முதலமைச்சர் ஆவேன் என்று கட்சியினரிடம் கூறிவரும் கட்டுக்கதைகள் உடைக்கப்படும். அண்ணா, பெரியார், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை சொல்லி, அவர்களின் வாக்குகளை வாங்கிவிட வேண்டும். சொந்தமாக உழைக்க வேண்டும் என்கிற எண்ணமே கிடையாது.

விஜய், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தபோதும் ஒரு அரசியல் கட்சிக்கூட அவர்களிடம் வரவில்லை. விஜயை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள வில்லை. அது அவருக்கு தெரியவில்லை. நான் திமுகவை எதிர்க்கிறேன், மோடியை எதிர்க்கிறேன் என்று விஜய் அவர் பாட்டிற்கு கதை விட்டுக்கொண்டிருந்தார். பிரதமர் மோடி வருகையின்போது விஜய் குறித்து ஒரு வார்த்தை இல்லை. பாஜகவோ, திமுகவோ, அதிமுகவோ இனி விஜய் குறித்து பேசவே மாட்டார்கள். காரணம் அவர்கள் எல்லாம் தீவிரமான அரசியல் செய்கிறார்கள். இந்த சட்டமன்றத் தேர்தலை விஜய் புறக்கணிப்பாரா? அல்லது வேறு யாராவது சொல்லி புறக்கணிப்பாரா? என்று தெரியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


