spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

-

- Advertisement -

எஸ்.ஆனந்தி -சூர்யா

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

1925ஆம் ஆண்டு, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் – சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சுயமரியாதை போன்ற பகுத்தறிவு மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்கைகளைத் தமிழ்நாடு முழுவதும் பரவச் செய்து, மிகப்பெரிய சமுதாயப் புரட்சியை உருவாக்கியது நம் எல்லோரும் அறிந்த ஒன்று.

we-r-hiring

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்களான சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, ஆணாதிக்க ஒழிப்பு, பாலியல் சுதந்திரம் போன்றவற்றை நடைமுறைப்படுத்த பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்களை 1928ஆம் ஆண்டில் இருந்து நடத்திவந்துள்ளனர்.

இத்தகைய திருமணங்களை ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்றழைத்த பெரியார், இத்தகைய திருமணத்தில் பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை, தான் நடத்திய அத்தனை திருமணங்களிலும், திருமணச் சட்டம் குறித்து எழுதும்போதும் வலியுறுத்திவந்துள்ளார்.

இது குறித்து பெரியார் பேசுகையில் குறிப்பிடுவதாவது:

“பெண்களின் நலனை உத்தேசித்து, ஆறறிவு பெற்ற மனித சமுதாயத்தின் சரி பகுதி மக்களின் நல்வாழ்வுக்காகவும் அவர்கள் ஆண்களைப் போல எல்லா உரிமைகளையும் அடைய வேண்டும்; இந்த உலகிற்குப் பயன்பட வேண்டும் என்று கருதியே இந்த மாறுதல் திருமணத்தைத் துவக்கினோம்.” (விடுதலை 01.08.1972) மேலும், சுயமரியாதைத் திருமணத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பெரியார் குறிப்பிடுவதாவது:

‘மணமக்கள் இருவரும் ஒரு பொதுவாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டதற்கு அவர்களுக்குள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்திற்கு சுயமரியாதைத் திருமணம் ஒரு சாட்சியமே தவிர, நமக்கு இதில் வேறு வேலை இல்லை. சுயமரியாதைக் கல்யாணம் என்பதின் முக்கியத்துவம் கூட்டுவாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ இல்லை என்பதும் சகல துறைகளிலும் சம சுதந்திரம் `(விடுதலை

இந்து மதம் முன்வைத்த குலம், கோத்திரம், ஜாதி, வகுப்பு ஆகியவற்றை முக்கியமாய்க் கொண்டுள்ள வைதீக புராண கல்யாண’த்தில் பெண்ணுக்கும் ஆணுக்குமுள்ள பொருத்தங்களைப் பார்க்காததால் ஏற்படும் தீங்குகள் பல’ என்று எடுத்துரைக்கும் பெரியார், தமிழர் (திராவிடர்) திருமணம்  என்ன என்பதையும் பெண்ணியப் பார்வையில் விளக்குகிறார்:

‘புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும் புருஷனுக்கு உள்ள உரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள, ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனுநீதி இல்லாமல், வாழ்க்கையில் கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்புமுறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் திருமணமாகும்.’ (விடுதலை 14.03.1950)

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

தீவிர சுயமரியாதைக் கருத்துகளை உள்ளடக்கிய சுயமரியாதை திருமணங்கள் 1928ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சாதி, மதம் சார்ந்தவர்களிடையே பின்பற்றப்பட்டு வந்தது, இச்சீர்திருத்த இயக்கத்தின் வெற்றியைக் குறிப்பதாகும்.

சுயமரியாதைத் திருமண முறையைப் பின்பற்றிய பெண்கள் பலர், பொதுவெளியில் திராவிட இயக்க புரட்சிக் கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதில் முனைப்பாகச் செயல்பட்டனர். 1929ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட சிவகாமி சிதம்பரனார் (சாதி மறுப்பு மற்றும் விதவைத் திருமணம்), நீலாவதி – ராமசுப்பிரமணியம் (சாதி மறுப்பு திருமணம்), குஞ்சிதம் – குருசாமி போன்றோர் சுயமரியாதைத் திருமணத்தின் அவசியம் குறித்து பேசுவதும் இத்தகைய திருமணங்களை முன்னின்று நடத்திவைத்து பெண்களிடையே சுயமரியாதை, பெண்ணுரிமை, மதச்சார்பின்மைக் கருத்துகளைக் கொண்டுசேர்ப்பதிலும் முனைப்பாகச் செயல்பட்டனர்.

இத்தகைய சீர்திருத்தத் திருமணங்கள், முக்கியமாகப் பல்வேறு சாதியைச் சார்ந்த இந்துக்களிடையே, 20 அல்லது 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுவந்தாலும் இத்திருமணங்களை அங்கீகரிக்கக்கூடிய சட்டங்களோ அல்லது இவற்றிற்கு இந்து மத சட்டத்தில் (1955) அங்கீகாரம் கொடுப்பதற்கோ மத்திய இந்திய அரசு மறுத்தது.

சீர்திருத்தத் திருமணங்கள் என்று இந்து மத சட்டத்திற்குள் அளிக்கப்பட்ட அங்கீகாரம்… பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு மட்டுமே. இத்தகைய சீர்திருத்தத் திருமணங்களில் கடைப்பிடிக்கப்பட்ட ‘இந்து’க்களின் வழமையான சடங்குகள் ஒரு சில தொடர்ந்து பின்பற்றியதாலும், இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படுவோர் திருமணங்களில் கடைப்பிடிக்கவேண்டிய மனுநீதி சார்ந்த சில சடங்குகளைச் சீர்திருத்தத் திருமணங்களிலும் பின்பற்றியதாலும் மேற்கொண்டவை இந்து திருமணங்களே என அங்கீகரிக்கப்பட்டன.

ஆனால், சுயமரியாதைத் திருமணம் மதம் கடந்த வாழ்க்கை ஒப்பந்தத்தைச் சீர்திருத்தமாக அறிமுகப்படுத்தியதுடன், இந்து சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அக்னி வலம்வருதல், தாலிகட்டுதல், புரோகிதர் தலைமை போன்ற சடங்குகளைப் பின்பற்றாததால், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் மறுக்கப்பட்டது.

இதற்கு உதாரணமாக அமைந்தது, 28 ஆகஸ்ட் 1953 தெய்வானை VS சிதம்பரம் செட்டியார் வழக்கின் தீர்ப்பு சிதம்பரம் செட்டியாரின் சுயமரியாதைத் திருமணம் (ரங்கம்மாளுடன்) இந்து சாஸ்திரங்கள்படி நடைபெறவில்லை. சப்தபதி என்ற ஏழு அடி எடுத்து வைத்தல், ஓமம் வளர்த்தல், அக்னி சாட்சியாகவும் நடைபெறவில்லை. இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் மரபுவழி திருமணமும் (customary marriage) அல்ல.

தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒரு தற்காலிக ஏற்பாடாகச் சேர்ந்து வாழ்தலில் பிறந்த பிள்ளைகளைச் சட்டபடி பிறந்ததாகக் கொள்ள முடியாது என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சத்யநாரண ராவ் மற்றும் ராஜகோபாலன் தெளிவாகக் குறிப்பிட்டது என்னவெனில், இரண்டு இந்துக்களிடையே நடைபெறும் ‘சுயமரியாதைத் திருமணங்கள்’ செல்லுபடியாகாது என்பதுதான். ஏனெனில், அவை இந்து சட்டத்தில் வரையறுக்கப்பட்ட திருமண முறைகளைப் பின்பற்றவில்லை. இத்தீர்ப்புக்கு அடிப்படை ஆதாரங்களாக நீதிபதிகள் காட்டியவை பராசர் ஸ்மிருதிகள், யாக்ஞவல்கியர் போன்றோர்.

இத்தகைய தீர்ப்பினால் தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்பட்டதுடன், சுயமரியாதைத் திருமணம் செய்வோர் இனியாவது இந்து சட்டத்தின்படி திருமண முறையைக் கைக்கொள்ள வேண்டும் என்ற நிலைமையை உயர் நீதிமன்றம் உருவாக்க முனைந்தது.

ஆனால், இத்தகையத் தீர்ப்பையும் மீறி பல்வேறு சுயமரியாதைத் திருமணங்கள் தொடர்ந்து நடந்துவந்தன. சாதி எதிர்ப்பு மணங்களாகவும் மூடப் பழக்கவழக்கங்கள், இந்து மதச் சடங்குகள் ஒழித்த, புரோகித மறுப்பு திருமணங்களாகவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. இது குறித்து 25.12.1959 முரசொலி தலையங்கம் எழுதியதாவது.

“கால் நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னால் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்வது புதுமையாகக் கருதப்பட்டது; புரட்சியாக எண்ணப்பட்டது! ஆனால் இன்றோ… நாடு நகரமெங்கும் பட்டிதொட்டியெங்கும் இந்த முறை திருமணங்களை நாம் எண்ணற்ற அளவில் சந்திக்கிறோம். இந்த முறையை முதன் முதலில் புகுத்திய சுயமரியாதை இயக்கத்தினரான திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ மட்டும்தான் நடத்துகிறார்கள் என்றில்லை என்ற நிலை. இன்று, கட்சி வேறுபாட்டையும் கடந்து அவைகள் நடைபெறுகின்றன.”

ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பு இத்தகைய சுயமரியாதைத் திருமணங்களை அவமதிக்கும் நோக்குடனும் அமைந்தது. இந்து மத சடங்குகளை உள்ளடக்கிய இந்து மதக் கோட்பாடுகளே, இந்திய தேசியத்தின் வரையறை என்று புரிந்துகொண்ட காங்கிரஸ் ஆட்சியாளர்களும் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்படி ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

1958ஆம் ஆண்டு, மற்றொரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றங்களின் இத்தகைய போக்கு மீண்டும் தெளிவாயிற்று. ராசாத்தி-செல்லையா இணையருக்குச் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், மணவாழ்வு முறை மீட்பு மனுவை ராசாத்தி என்பவர் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ராசாத்தி – செல்லையா இணையருக்கு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தையே கேள்விக்குள்ளாக்கி, 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி அதை அங்கீகரிக்க மறுத்தது.

ஓர் இளம் பெண்ணின் மணவாழ்வு மீட்பு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாத அவலநிலையைச் சுட்டிக்காட்டி, சுயமரியாதை இயக்கத்துக்குக் கண்டனம் தெரிவித்தது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

இவ்விவாத கருத்துகள், பிராமணியத்தையும் தேசியவாதத்தையும் இந்து மத சடங்குகளையும் முன்னிறுத்தி, சீர்திருத்தத் திருமணங்கள் மேல் தவறான அபிப்பிராயத்தைத் தோற்றுவித்தன.

ராசாத்தியின் சுயமரியாதைத் திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த உயர் நீதிமன்றம், கணவனின் சொத்தில் அவருக்குப் பங்கு இல்லையென்று கைவிரித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக, 1967ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டுவந்து, சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. அதனால்தான், 1969ல் மேல் முறையீடு செய்த ராசாத்தியின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்கு மணவாழ்வு மீட்பளிப்பு உரிமை வழங்கப்பட்டது.

சாதி மறுப்பு, புரோகிதர் மறுப்பு, பெண்ணுரிமை கோரும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் மறுக்கப்பட்டதின் பின்னணி, 1940-களிடையே துவங்குகிறது.

1940-களில், சென்னை மாகாணம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்து சட்ட மசோதாவால் பெரும் சிக்கல் வலுத்திருந்தது. 1944ல் பி.என்.ராவ் தலைமையிலான இந்து சட்ட அமைப்புக் குழுவினர் (Hindu Law Committee) இந்தியாவின் பல தரப்பட்ட பகுதிகளுக்கும் சென்று மசோதா தாக்கல் செய்வதற்கான அடிப்படை தரவுகளைத் திரட்டினார்கள்.

அப்போது, பி.என்.ராவுக்கு உதவியவர், சென்னை உயர் நீதி மன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.ஆர்.வெங்கடராம் சாஸ்திரி என்பவர்.

இந்தக் குழு, சென்னை மாகாணத்தில் ஆறு நாட்களில் வக்கில்கள், மதத் தலைவர்கள், இந்து மகாஜன சபா உறுப்பினர்கள், பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சுயமரியாதை இயக்கத் தலைவர்கள்,  முதலியோரை சந்தித்து தகவல்கள் சேகரித்தனர்.

இந்து திருமணத்தின் புனிதத்தன்மையைக் காப்பாற்றவே இந்து திருமண சட்டம் தேவை என்று வாதிட்டோரின் மத்தியில், சுயமரியாதை இயக்கச் செயல்பாட்டாளர்கள் வாய்மொழியாகவும். எழுத்துபூர்வமாகவும் சொன்ன தகவல்கள் முக்கியமானவை. மற்ற எல்லாவற்றையும் தாண்டி, ‘பெண்களுக்கு சரிசமமான சட்ட உரிமை வழங்குவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதைத் தவிர்த்து, இந்து மதத்திற்குள், திருமண முறைகளில் மாற்றங்கள் எங்களுக்கு வேண்டாம்’ என்று குறிப்பிட்டனர்.

சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த திருமதி குஞ்சிதம் குருசாமி, ‘இந்து’ என்கிற மதம் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்று அச்சட்ட வரைவின் போதாமையை எடுத்துச்சொன்னார். இந்து மதத்தைப் பின்பற்றாதவர்களும் சமயச் சடங்குகளுக்கு மாறாகத் திருமணம் செய்பவர்களும் சட்டத்துக்கு உட்படும் வண்ணம் வரைவைப் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

ஆனால், கெடுவாய்ப்பாக குஞ்சிதம் குருசாமியின் கோரிக்கைகளை ராவ் – சாஸ்திரி குழுவினர் நிராகரித்தனர். 1947ல் வெளியான அக்குழுவின் அறிக்கையில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர் கருத்துகள், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் வீர சைவம், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரார்த்தன சமாஜம் போன்ற அமைப்புகளின் இந்து சீர்திருத்தத் திருமண முறைகளுக்கு மட்டுமே இந்து திருமண சீர்திருத்தச் சட்டத்தில் (1955) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, மேற்சொன்ன இயக்கங்களின் சீர்திருத்த திருமணங்கள் மட்டுமே முறையான திருமணங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்து திருமண மசோதா குறித்த விவாதங்கள் குறிப்பாக, இந்து சட்டத் தொகுப்பு மசோதா குறித்த விவாதங்கள், பல்வேறு கட்டமாக நடைபெற்றபோதிலும், அம்பேத்கர் அவர்கள் 1941-47 ஆண்டுகளில் இந்து திருமண மசோதாவை முற்றிலும் கைவிட வேண்டும் என்று கூறியபோதும், நேருவின் காங்கிரஸ் ஆட்சி மூன்றாம் கட்டமாக 1951-1956ல் இந்து திருமண சட்டத்தைக் கொண்டுவந்து, எல்லா இந்துக்களையும் கட்டுப்படுத்தும் ஒரு பொது சிவில் சட்டம் என்று அறிமுகப்படுத்தியது.

1955ஆம் ஆண்டு, இந்து திருமண சட்டத்தின் 7-வது பிரிவின்படி, இந்து மத சம்பிரதாயங்களில் குறிப்பிடப்படும் ‘சப்தபதி’ வலம்வருதல், “தாலி’ கட்டுதல் போன்ற சடங்குகளை முறையாகப் பின்பற்றும் திருமணங்களே ஏற்றுக்கொள்ளப்படும். அதை மீறி மந்திரங்கள் இல்லாத, புரோகிதர்கள் சுலந்துகொள்ளாத திருமணங்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது. மொத்தத்தில் 1955ஆம் ஆண்டு, இந்து திருமணச் சட்டமும் திருமணம் தெய்வீகத்தன்மை பொருந்தியது (Sacrosanct), புனிதமானது என்ற இந்து மத சம்பிரதாயங்களின் தேவையையும் ‘இந்து பழக்க வழக்கங்களையும்’ பின்பற்றுவோருக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் வகையில் வழிவகை செய்தது.

இதனால்தான், 1951ல் விடுதலையில் தலையங்கம் எழுதிய பெரியார், இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை அரைகுறை மசோதா என்று விமர்சித்ததுடன், ‘இந்து மகா சபை மனப்பான்மையுடன்’ தான் காங்கிரசும் இம்மசோதாவை அணுகியுள்ளது என்று சாடுகிறார். இந்து சட்டத் தொகுப்பினால் பெண்களுக்குத் திருமணம் மற்றும் குடும்ப உரிமைகளை நிலைநாட்டுவது என்பதைவிட இந்துக்களின் திருமண புனிதத் தன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் காங்கிரசாருக்கும், வருணாசிரம தர்மிகளுக்கும் இந்து மகாசபை சனாதனிகளுக்கும் பெரியதாக வேறுபாடு இல்லை என்றும் பெரியார் குறிப்பிட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஒட்டி (1953) சுயமரியாதைத் திருமணங்களை 1954ஆம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்டத்தில் (Special Marriage Act) பதிவுசெய்யுமாறு நாடாளுமன்றமும் சட்டமன்றமும், நீதிமன்றமும் ஒருமித்த குரல்கொடுத்தன. இதை வலியுறுத்தியே சென்னை கீழ் சட்டசபையில் 1954ல் சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்க இந்து மத சட்டத்தில் மாற்றங்கள் தேவை இல்லை என்று காங்கிரஸ் அமைச்சர் சி.சுப்ரமணியம் வாதாடினார். சீர்திருத்த திருமணங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா கைவிடப்பட்டது என்று அறிவித்தார்.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், 1953ஆம் ஆண்டு சென்னை காங்கிரஸ் அரசாங்கம், ‘இணக்கமற்ற இந்து திருமணப் பதிவு மசோதா 1954-ஐ அறிமுகப்படுத்தத் தீர்மானித்தது. அந்த மசோதா மீதான விவாதங்கள் எழுந்த நிலையிலும், காங்கிரஸ் இம்மசோதாவைக் கைவிட்டதன் பின்னணி, இந்து மத சட்டத்தில் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்ற நோக்கமே.

இதனால், 1959ல் தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.எம்.அண்ணாமலை, மெட்ராஸ் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி மசோதாவைப் பின்னோக்கு விளைவுடன் சட்டபூர்வ அங்கீகாரத்துக்குக் கொண்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் இந்த மசோதாவிற்கும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நடுநிலையாக மௌனம் காத்ததால், மசோதா தோல்வி அடைந்தது.

1965ல் தி.மு.க இந்த மசோதாவை மீண்டும் கொண்டுவர முயன்றது இம்முறை எஸ்.மாதவன் என்பவர் மசோதாவைத் தாக்கல்செய்தார். சுயமரியாதைத் திருமணத்தை இந்து சட்டத்துக்குள் கொண்டுவந்து, அதனை செல்லுபடியாக்க வைப்பதற்கான சட்டப் போராட்டம் தொடர்ந்தது. இத்திருமணங்களை அங்கீகரிக்க மறுத்தால், இதன்படி திருமணம் செய்த பெண்களின் எதிர்கால வாழ்க்கை மோசமாகிவிடும் என தி.மு.க, வாதாடியது. இந்து சட்டத்தின் கீழ் ஒப்புதல் கிடைத்துவிட்டால், சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட பெண்கள் பெண்கள் விவாகரத்து பெறவும், பலதார மணம் புரிந்த கணவர்களிடமிருந்து விடுதலை பெறவும், இத்திருமணம்மூலம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு சட்டப்படி செல்லுபடியாகும் சொத்துரிமையையும், சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத்தரவும் வழி ஏற்படும் என்று எண்ணினார்கள். ஆனால், பலகட்ட முயற்சிக்குப் பின்னரும் மசோதா சட்டமாக நிறைவேறவில்லை.

1967ஆம் ஆண்டு, பெரும் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக உருவெடுத்த பிறகுதான் இந்த மசோதா 74 என்ற பிரிவின் கீழ் (இந்து திருமண சட்டம் 1955) தமிழ்நாடு திருத்த சட்டமாக அறிமுகப்பட்டது. இச்சட்டத்தின்மூலம் சடங்கில்லாத ‘சீர்திருத்த திருமணங்கள்’ (இந்துக்கள் மத்தியில் நடைபெறும் அனைத்து சீர்திருத்தத் திருமணங்களும்) அங்கீகரிக்கப்பட்டன. இதனால், இந்து பாரம்பரிய பிராமணியவழித் திருமணங்கள், சாதிசார்ந்த திருமண முறைகள் மட்டுமே இந்து திருமணம் என்ற கட்டுப்பாடு தமிழ்நாட்டில் தகர்ந்தது.

இந்த சட்டத்தினால் ஏற்பட்ட சமுதாய மாற்றம் தமிழ்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதாவை ஆதரித்து சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா பேசுகையில், இச்சட்டம் நிறைவேறுவதற்காகத் திராவிட இயக்கத்தினர் நடத்திய போராட்டம், அதன் முக்கியத்துவம் குறித்து இவ்வாறு விளக்குகிறார்.

‘கடந்த 30 ஆண்டுக்காலமாக, 35 ஆண்டுக்காலமாகத் திருமண முறையிலே ஒரு மாறுதல் ஏற்பட்டுக்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற ஒரு புதிய முறைக்கு இப்பொழுது நாம் ஒரு சட்ட வடிவம் கொடுக்கிறோமே தவிர, இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அனைவரும் சுயமரியாதைத் திருமணம்தான் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லும் சட்டம் அல்ல இது. It is a permissive legislation… இதை நாங்கள் மிகச் சாதாரண சீர்திருத்தம் என்று கருதவில்லை. எத்தனையோ ஆண்டுகளாக எங்கள் உள்ளத்திலே உறங்கிக்கொண்டிருந்து, எத்தனையோ இரவுகள், எத்தனையோ பகல்கள் இப்படி ஒரு சட்டத்தை உருவாக்க முடியுமா, முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்த எங்கள் எண்ணத்திற்கு மதிப்பு அளிப்பீர்களானால், இப்படியெல்லாம் நிறைவேற்றப்பட முடியும் என்ற நிலைமை தோன்றாத நாட்களில், இந்த விதமான திருமண முறையில் பல்லாயிரக்கணக்கான திருமணம் செய்துகொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இச்செய்தி ‘செந்தேனாகப் பாயும்.

[அறிவியல்பூர்வமாக] வளர்ந்து இருக்கிற இந்த நாட்களில், அக்கினி சாட்சியாக வைத்த திருமணம்தான் செல்லும் என்று சட்டம் இருக்குமானால், எங்களுக்கு அது பிடிக்கவில்லை. இது சமூகத்திற்குக் கட்டளையிடுகிற சட்டம் அல்ல. அல்லது உணவு நெருக்கடியை உத்தேசித்து ஆளுக்கு இவ்வளவுதான் கொடுக்கப்படும் என்று சொல்லுகிற சட்டமும் அல்ல. யாரும் எந்த விதத்தில் வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

சட்டமன்றத்திற்கு வெளியே, தி.மு.க. இச்சட்டத்திற்கு ஆதரவாகப் பல போராட்டங்களை நடத்தியது. கோரிக்கைகளை முன்வைத்தது. தி.மு.க வின் 2-வது பெண்கள் மாநாடு (1950) இந்து சட்டத்திருத்த பெண்கள் மாநாடாகக் கூட்டப்பெற்று, பலதார மணங்கள் எதிர்ப்பு, பெண்களுக்கு சொத்துரிமை முதலியவற்றை இந்து திருமணச் சட்டத்திற்குள் கொண்டு வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.

1956ல் இரண்டாவது தி.மு.க. மாநில மாநாடு தீர்மானம் 21: சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்குதல், சுயமரியாதைக் கொள்கை அடிப்படையில் இதுவரை நடைபெற்றுள்ள திருமணங்களையும் இனி நடைபெறவிருக்கும் திருமணங்களையும், சட்டபூர்வமாக அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கோரியது.

1961ல் கோவையில் கூடிய தி.மு.க பொதுக்கூட்டத்தில், தேர்தல் சிறப்பு மாநாட்டில் சீர்திருத்த திருமணச் சட்டம் நிறைவேற்றவேண்டிய முக்கியத்துவம் திருமணங்கள் அனைத்தையும் பதிவுசெய்ய வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேறி, அது தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் (1962) கொணரப்பட்டது.

இச்சட்டத்திருத்தத்தால் ஒன்றிய அரசும், நீதித் துறையும் கலக்கமடைந்தன என்பதில் வியப்பில்லை. (சமீப காலத்தில் இக்கலக்கம் பல்வேறு விதமாக வெளிப்பட்டுக்கொண்டு வருகிறது). இத்திருத்தம் (அதுவும் இந்து சட்டத்திற்குள்) முறையானது அல்ல என்றும், சாதி மறுப்புத் திருமணங்கள் சம்பிரதாயத்துக்கு எதிரானதென்றும் புதிய சிவில் சட்டம்மூலம் மற்ற மதச் சட்டங்களை ஒடுக்குவது குறித்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சீர்திருத்தச் சட்டத்தை இன்றும் சிலர் எதிர்த்துக் கொண்டிருப்பதைப் பின்வரும் நிகழ்வு ஒன்றே நமக்கு விளக்கும்.

2017ஆம் ஆண்டில், சமூக நீதி – அதிகாரமளித்தல் துறை சார்பாக நடத்தப்பட்ட கலப்புத் திருமண தம்பதிகளுக்கான விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பங்கள் யாவும் (தமிழ்நாடு திருத்தப்பட்ட சட்டம் 7A-வைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டன. இந்து திருமணச் சட்டம் 1955 உடன் இத்தகைய திருமணங்கள் பொருந்தாது என்று காரணம் கூறப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையிட்டால், தமிழ்நாட்டிற்கென உள்ள இந்து சீர்திருத்தச் சட்டத்தை நினைவுறுத்தி (சீர்திருத்தத் திருமணங்களின் அங்கீகாரம்) இந்த விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

சுயமரியாதைத் திருமணங்களின் செல்லுபடி தன்மை குறித்து இந்திய உச்ச நீதிமன்றமும் (மற்றொரு வழக்கில்) சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒரு நினைவூட்டல் தொடுத்திருக்கிறது. இத்திருமணங்கள் வழக்கமான சமயச் சடங்குகளோ ஆள் அதிகமுள்ள கூட்டங்களோ இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஒப்புதலின் பேரில் நடைபெற்றவை. சீர்திருத்தத் திருமணம் என்று இந்து சட்டத்திற்குள் அங்கீகாரம் பெற்றவை.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருமணச் சட்டம், பின்னர் ஏற்பட்ட பல்வேறு முற்போக்கு சட்டங்களுக்குப் பாதை வகுத்தது என்பதில் ஐயமில்லை. பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சம உரிமை, திருநர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் போன்ற சில இந்து திருமணச் சட்டம்சார்ந்த சீர்திருத்தங்களைத் திராவிட அரசு பின் வரும் காலங்களில் அறிமுகப்படுத்தியது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

MUST READ