பிரம்மாண்டமான பிரச்சனையைக் கையாள்வதற்கான எளிய வழி, அதை மிக அருகிலிருந்து பார்ப்பதுதான் – சக் பலஹ்னியுக்
பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்திலும் பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த நேரத்திலும் எத்தனைத் தொழில்கள் தொடங்கப்பட்டன. என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஃபார்ச்சூன் பத்திரிகை, 1929ம் ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுத் தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டது.
ஃபெட்எக்ஸ் கூரியர் நிறுவனம் 1973 எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டது.
1929ல் வால்ட் டிஸ்னி நிறுவனம் தொடங்கப்பட்டுப் பதினொரு மாதங்களுக்குள் ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.
ஹியூலெட்பேக்கார்டு நிறுவனம் 1935ல் பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டது.
ராக்கஃபெல்லரின் ‘ஸ்டான்டர்டு எண்ணெய் நிறுவனம்’ அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தபோது 1965ல் தொடங்கப்பட்டது.
ரெவ்லான் நிறுவனம் 1932ல் பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 1907ல் பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டது.
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 1929ல் பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் 1973-75ல் பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டது.
லிங்க்டுஇன் நிறுவனம் 2002ல் இணைய நிறுவனங்களின் பெருவீழ்ச்சிக் காலகட்டம் முடிந்தவுடன் தொடங்கப்பட்டது.
இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு, தாங்கள் பெரும் பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்தில் இருந்தோம் என்ற உணர்வு துளிகூட இருக்கவில்லை. ஏன் அப்படி? ஏனெனில், அவற்றைத் தொடங்கியவர்கள் நிகழ்கணத்தில் உலவிக் கொண்டிருந்தனர், தாங்கள் கையாண்டு கொண்டிருந்த பிரச்சனைகளில் தங்களுடைய முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தனர். பொருளாதார நிலை மேலும் மோசமடையுமா அல்லது மேம்படுமா என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்டிருந்த காரியத்தில் குறியாக இருந்தனர், தாங்கள் நம்பிக்கை வைத்திருந்த ஒரு தனித்துவமான யோசனை தங்கள் வசம் இருந்ததை அறிந்திருந்தனர்.ஆனால், ஒரு விஷயத்திற்குப் பின்னால் என்ன உள்ளது, அது நியாயமானதா, மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் போன்ற விஷயங்களை நாம் மீண்டும் மீண்டும் அலசிக் கொண்டிருக்கிறோம். அதன் பிறகு, நம்முடைய பிரச்சனைகளைக் கையாள்வதற்குத் தேவையான ஆற்றல் நம்மிடம் ஏன் இல்லை என்று நாம் யோசிக்கிறோம்.
வணிக உலகம் குறித்த நம்முடைய புரிதல் கட்டுக்கதைகளுக்குள் புதையுண்டு கிடக்கிறது. நாம் தனிமனிதர்கள்மீது நம்முடைய கவனத்தைக் குவிப்பதால், உண்மையான கதையைத் தவறவிட்டுவிடுகிறோம். ஃபார்ச்சூன் 500 என்று அழைக்கப்படுகின்ற தலைசிறந்த 500 பெருநிறுவனங்களில் பாதிக்கு மேற்பட்டவை பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவையே.
பெரும்பாலான மக்கள் சாதகமற்ற நிலையிலிருந்துதான் தங்களுடைய தொழிலைத் தொடங்குகின்றனர். ஆனால் தாங்கள் அப்படிச் செய்கிறோம் என்ற உணர்வுகூட அவர்களுக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை. அதுதான் பரவலாக இருக்கிறது. அப்படித் தொடங்குபவர்களில் வெற்றியடைபவர்கள், தங்களுடைய கவனத்தை அன்றாட நிகழ்வுகளில் குவித்தனர். அதுதான் அவர்களுடைய வெற்றி இரகசியம்.
நிகழ்கணத்தில் கவனத்தைக் குவியுங்கள். உங்கள் வழியில் ஒருவேளை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ள பெரும் முட்டுக்கட்டைகளின்மீது உங்களுடைய கவனத்தைக் குவிக்காதீர்கள். அவை குறுக்கிடாமல்கூடப் போகலாம்.
ஒரு தொழில், தன்னைச் சுற்றியுள்ள எதார்த்த நெருக்கடிகளைத் தவிர்ப்பது முடியாத காரியம் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, அச்சூழலில் தான் எப்படி வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். தொழில்முனைவுத் துடிப்பு இருப்பவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள். சூழல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க நேரமோ அல்லது ஆற்றலோ இல்லாதிருக்கின்ற வரம் பெற்றவர்கள் அவர்கள்.
மனிதர்களைத் தவிர மற்ற விலங்குகள் அனைத்தும், சூழல்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படி அவற்றை ஏற்றுக் கொள்கின்றன. மனிதர்களாகிய நாம் மட்டும்தான் விஷயங்கள் ஏன் அப்படி இருக்கின்றன என்று ஆராய்ந்து கொண்டும் அவற்றுக்கான அர்த்தத்தைத் தேடிக் கொண்டும் இருக்கிறோம். இதை எமர்சன். “நாம் வெறும் விளக்கங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டு நம்முடைய நாளைக் கழிக்க முடியாது,” என்று அழகாகக் கூறியிருக்கிறார்.
இது வாழ்வதற்குச் சிறந்த காலகட்டமா இல்லையா என்பதோ, வேலை தேடுவதற்கு உகந்த காலகட்டமா இல்லையா என்பதோ, நீங்கள் எதிர்கொண்டிருக்கின்ற முட்டுக்கட்டை பயமுறுத்துகின்ற ஒன்றா அல்லது எளிதில் கடந்து போகப்படக்கூடிய ஒன்றா என்பதோ ஒரு பொருட்டல்ல. இக்கணம்தான் இங்கு முக்கியம்.
ஒரு முட்டுக்கட்டையின் பின்விளைவுகள் கோட்பாட்டுரீதியானவை. அவை கடந்தகாலத்தில் அல்லது எதிர்காலத்தில் இருப்பவை. ஆனால் நாம் நிகழ்கணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை நாம் எந்த அளவு ஏற்றுக் கொள்கிறோமோ அந்த அளவு அத்தடையை எதிர்கொள்வதும் அதைக் கடப்பதும் எளிதாக இருக்கும்.
நீங்கள் இப்போது கையாண்டு கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையை எடுத்துக் கொண்டு, நிகழ்கணத்தில் கவனத்தைக் குவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எதிர்கொண்டுள்ள சூழ்நிலையை அலட்சியம் செய்துவிட்டு, அக்கணத்தில் நடந்து கொண்டிருப்பவை குறித்துத் திருப்தி கொள்ள வேண்டும்.
உங்களுக்குச் சிறப்பாகப் பலனளிக்கக்கூடிய ஒரு வழியை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். கடுமையான உடற்பயிற்சி, ஒரு பூங்காவில் காலாற நடத்தல், தியானம், ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடுதல் போன்றவற்றுக்கு, உங்களை நிகழ்கணத்தில் இருத்தி வைக்கும் ஆற்றல் உண்டு. நிகழ்கணத்தில் இருப்பது எவ்வளவு இனிமையானது என்பதை நமக்கு நினைவுபடுத்தக்கூடியவை அவை.
ஒன்று மட்டும் உறுதி. வெறுமனே “நான் இக்கணத்தில் வாழ்வேன்,” என்று கூறுவது எந்தவிதத்திலும் பலனளிக்காது. அதற்காக நீங்கள் உழைக்க வேண்டும். அது தறிகெட்டு அலையும்போது அதற்குக் கடிவாளம் இட வேண்டும். உங்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்துகின்ற எண்ணங்களின் கழுத்தை நெறிக்க நீங்கள் தயங்கக்கூடாது. விஷயங்களை அவற்றின் போக்கில் விட்டுவிட வேண்டும்.
இக்கணம் என்பது உங்களுடைய வாழ்க்கையல்ல. அது உங்களுடைய வாழ்க்கையிலுள்ள ஒரு கணம் மட்டும்தான் என்பதை நினைவில் வையுங்கள். இப்போது உங்கள் முன் இருப்பதன்மீது மட்டுமே உங்கள் கவனத்தைக் குவியுங்கள். அது எதைப் பிரதிநுதப்படுத்துகிறது என்பதைப் பற்றியோ, அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றியோ அல்லது அது ஏன் உங்களுக்கு நிகழ்ந்தது என்பதைப் பற்றியோ கவலையே படாதீர்கள்.


