தன்னை இந்துக்களின் காவலர் என்று மார்தட்டிய மோடியின் பொய்கள் எல்லாம் அம்பலப்பட்டுவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் மற்றும் மோடிக்கு எதிராக ஆர்எஸ்எஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- போர் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்த வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கு எதிராக வலதுசாரிகள் தொடர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. விக்ரம் மிஸ்ரி அரசாங்கத்தின் கொள்கை என்னவோ அதன்படிதான் செயல்பட்டிருப்பார். ஒரு அரசு அலுவலரை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் அபத்தமான விஷயமாகும். வலதுசாரி அரசியலிலே அது ஒரு கேடுகெட்ட அரசியலாகும். இந்த நாட்டில் அதிகார வர்க்கம், நீதித்துறை, ராணுவம் எல்லாம் பல்வேறு முனைகளில் இருந்து நாட்டை பாதுகாக்கிற விஷயம்தான். ஒரு அரசு அதிகாரியை வெளிப்படையாக தாக்குகிறார்கள் என்றால், அதன் நோக்கம் அரசின் தோல்விகளை மறைப்பது தான். தற்போது திசை திருப்புகிறார்கள் தானே.

விக்ரமுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் திரளும்போது அவர் மீது எதிர்க்கட்சி ஆதரவாளர் என்கிற முத்திரை வந்துவிடும். நாளை அவரது இடத்திற்கு வரும் நபரும் தனது கருத்துக்களை பேச தயங்குவார். ஒரு ராணுவ நடவடிக்கையில் ராணுவ அதிகாரிகளுக்கு தான் கள நிலவரம் தெரியும். அவர்கள் எடுப்பதுதான் முடிவு. ஏனென்றால் அவர்கள் தான் உயிரை பணயம் வைத்து போராடுகிறார்கள். அதற்கு நேர் பின்னால் இருக்கும் கட்டுப்பாட்டு மையம் என்பது அதிகாரிகள்தான். அரசியல் தலைமை என்ன விரும்புகிறது என்று அதிகாரிகள் தான், களத்தில் உள்ளவர்களுக்கு சொல்ல வேண்டும். அப்படி உள்ளபோது நடுவில் உள்ள அதிகாரிகளை பலவீனப்படுத்துவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பிரதமர் பதவியில் இருந்து மோடியை மாற்ற ஆர்.எஸ்.எஸ். விரும்புவதாகவும், இதற்காக பெரு முயற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. மோடிக்கு தற்போது 75 வயதாகிறது. ஆர்எஸ்எஸ் விதிகளின்படி வரும் செப்டம்பர் மாதம் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும். முதலில் இருந்தே மோடி, தன்னை முன்னிலைப்படுத்துவதில் தான் இருந்தார். பகல்காம் தாக்குதலுக்கு முன்பாக எத்தனையோ தீவிரவாத தாக்குதல்கள் இருந்துள்ளன. ஆனால் பகல்காம் அளவுக்கு அந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவத்தை நாட்டின் அரசியல் தலைமை கொடுத்துள்ளதா? என்றால் கிடையாது. பகல்காமை ஒரு களமாக கொண்டு இதை பெரிதுப்படுத்தியாகி விட்டது. நல்லது. இத்துடன் பாகிஸ்தான் வாலாட்டாதபடி ஒரு புவிசார் அரசியல் கட்டுமானம் வந்திருக்க வேண்டும்.
பகல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாம் பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரில் பெய்த கனமழையால் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளோம். சிந்து நதி நீரை எப்படி நீங்கள் தடுக்க முடியும். காவிரி டெல்டாவில் கனமழை பெய்தால், கர்நாடகா தடுத்து நிறுத்துமா? அது எப்படி சாத்தியம்?. அது இயற்கை. அதை தடுத்த நிறுத்த முடியாது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது அரசியல் ரீதியான ஷோதான். அப்படி நதி நீரை கட்டுப்படுத்துவதும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். அதனால் அவர்கள் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தார்கள். அந்த சிம்லா ஒப்பந்தத்தில் தான் அனைத்து போர் நிறுத்த ஒப்பந்தங்களும் இருக்கின்றன. சிந்து நதி நீரை என்னதான் நிறுத்திவைத்தாலும் வெள்ளம் வந்தால் திறந்துவிட்டு விடுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
அப்போது இயல்பாகவே இந்த செயல்கள் மோடியின் அரசியல் தலைமை மார் தட்டுவதற்குதான் பயன்படுகிறது. இந்துக்களின் உரிமைகளை நாங்கள் தான் பாதுகாப்போம் என்று எப்படி இங்கே மார் தட்டினார்களோ, அப்படிதான் சர்வதேச அளவிலும் மார் தட்டினார்கள். ஆனால் இதில் மோடி உடைய பொய்யும் அம்பலப்பட்டு விட்டது. டொனால்டு டிரம்பின் பொய்யும் அம்பலப்பட்டு விட்டது. இருவரும் பயங்கரமான நண்பர்கள். அதாவது பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்தவர்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்