அதிமுக சார்பில் 2026ல் ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்கிற அறிவிப்பை பிரேமலதா ஏற்காததன் மூலம் அவர் திமுகவுக்கான கூட்டணி கதவை திறந்துவிட்டுள்ளார் என்று திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்காததன் பின்னணி குறித்து, வல்லம் பஷிர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடங்கள் ஒதுக்கப்படாத நிலையில், 2026ல் ராஜ்யசபா சீட்டு வழங்குவதாக கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை என்பது அதிமுகவுக்கு வைக்கப்பட்ட செக் என்றுதான் தொடக்கத்தில் தோன்றியது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை தக்க வைப்பதற்கான ஒரு துருப்புச்சீட்டாக மாநிலங்களவை தேர்தலை பயன்படுத்தி இருக்கிறது. 2026 கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு சீட்டு உண்டு. இல்லாவிட்டால் சீட்டு கிடையாது என்பதுதான் இந்த அறிவிப்பில் இருந்து தெரிகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அதிமுக கூட்டணி தொடர்பாக எந்த நேரடி அறிவிப்பையும் வெளியிடவில்லை. அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலை கணக்கில் கொண்டே முடிவுகளை எடுக்கின்றன. அப்படிதான் எப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளார். நாங்களும் தேர்தலை கணக்கில் கொண்டு வரக்கூடிய காலங்களில் முடிவு எடுப்போம் என்று பிரேமதலா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாங்கள் கூட்டணியில் தொடர்வதும், தொடராததும் எங்களுடைய தனிப்பட்ட முடிவு. அதை அதிமுக முடிவு செய்யக்கூடாது என்று ஒரு தலைவர் என்கிற முறையில் பிரேமலதா தெரிவித்துள்ளார். மொத்தத்தில் அதிமுக கூட்டணியை பிரேமலதா உறுதி செய்வார் என்று எடப்பாடி எதிர்பார்த்த நிலையில், அதை அவர் அப்படி செய்யவில்லை. அவரது செய்தியாளர் சந்திப்பின் சாராம்சங்கள் எல்லாம் அவர் திமுகவை நோக்கி நகர்கிறார் என்று தான் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தனை நாட்களாக அரசு மரியாதை கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று நின்று கொண்டவர், விஜயகாந்துக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார். திமுகவை நோக்கி நகர்வதற்கான சமிக்ஞைகளை இன்றைக்கு வெளியிட்டு உள்ளதாகவே பார்க்கிறேன். தேமுதிக, திமுக கூட்டணிக்கு வரும்பட்சத்தில் அதற்கு இடங்களை வழங்க முடியும் என்று நினைக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி இந்த முறை தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் கொடுத்தால், சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் நம்முடன் உறுதியாக இருப்பார்கள் என்று என்ன உத்தரவாதம் உள்ளது என்று நினைத்தார். பிரேமலதா, கடந்த காலங்களில் நம்பகத்தன்மை உடைய தலைவராக நடந்துகொண்டது இல்லை. அப்படி இருக்கிறபோது 2026 தேர்தலில் ஒரு இடம் கொடுப்பதன் மூலம் அவர்களுடன் கூட்டணியை தொடரலாம் என்று நினைத்தார். பிரேமலதா அதனை ஏற்றுக் கொண்டிருந்தால் சரியாக இருக்கும். ஆனால் அவர் ஏற்கவும்வில்லை. நிராகரிக்கவும் இல்லை. அதிமுகவின் அறிவிப்புக்கு அவர் எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை. தேர்தல் கணக்கை வைத்து நாங்கள் முடிவு எடுப்போம் என்பது எந்த விதமான நிலைப்பாடு என்றால்? நாங்கள் திமுகவோடு கூட்டணி போவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்ற ஒரு கதவை திறந்துவிட்டுள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் எண்ணம் பொய்த்து போய் உள்ளது.
அதிமுக தொண்டர்களிடம் பலமான கூட்டணி அமையும் என்று சொல்லி எடப்பாடி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். எப்படி பலமான கூட்டணி அமையும்? தேர்தல் அரசியலில் நிருபிக்கப்பட்ட வாக்கு வங்கி உள்ள கட்சிகள் என்று பட்டியலிட்டால், 10ல் 9 கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கி இந்த கட்சிகளிடம் உள்ளது. நிரூபிக்கப்படாத வாக்கு வங்கி, எதோ ஒரு மாயத் தோற்றத்தை பாஜக தொடர்ச்சியாக காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த கட்சிக்கு மட்டும்தான் வாக்கு வங்கி உள்ளது போல தோன்றுகிறது. அது உண்மையா? இல்லையா? என்று இதுவரை தேர்தல் களத்தில் நிரூபிக்கப்படவில்லை. அந்த கட்சி மட்டும்தான் அதிமுக கூட்டணியில் உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து யாராவது அங்கு வர தயாராக உள்ளனரா? உங்கள் கூட்டணியில் இருந்ததாக சொல்லப்படும் பாமக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அந்த கட்சிக்குள்ளே பல பிரச்சினைகள் உள்ளன. தேமுதிக நீங்கள் கொடுத்த வாய்ப்பை ஏற்காமல் அவமதித்துள்ளனர். அப்போது நீங்கள் எப்படி வலிமையான கூட்டணி அமைப்பீர்கள்?
ஆர்.கே.நகர் தேர்தல் காலகட்டத்தில் உருவான திமுக கூட்டணி இன்றுவரை தொடர்கிறது. இதில் எந்த கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து வெளியே போகவில்லை. மாறாக புதிய கட்சிகள் தான் திமுகவுக்கு வந்துள்ளன. அப்போது திமுக அணி நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருக்கிறது. உங்களோடு இருந்த எஸ்.டி.பி.ஐ, இன்றைக்கு திமுக கூட்டணிக்கு வந்துவிட்டது. உங்களோடு கடந்த காலங்களில் இருந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ் போன்றவர்கள் திமுக கூட்டணிக்கு வந்துவிட்டார்கள். தனியரசு ஏறக்குறைய தனது ஆதரவை திமுக கூட்டணிக்கு தெரிவித்துவிட்டார். நீங்கள் நாளுக்கு நாள் பலவீனமாகி கொண்டிருக்கிறீர்கள். விஜயை வைத்து வலுவான கூட்டணியை உருவாக்கலாம். அவர் உங்களது கூட்டணியில் வலுவான கட்டமைப்பை உருவாக்க துணை நிற்பாரா? அது எடுபடுமா? பாஜகவின் பிம்பம் எப்படி ஊதி பெரிதாக்கப்படுகிறதோ அதுபோலத்தான் விஜயின் பிம்பமும் ஊதி பெரிதாக்கப்பட்டது. உங்களோடு யார் கூட்டணிக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். நீங்கள் ஏமாற்ற முடியாது. தற்போது உள்ளதை விட கூடுதலாக அதிமுக பலவீனமடைந்துள்ளது என்றுதான் நான் பார்க்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.