அன்புமணிக்கு மாற்றாக தனது மகள் காந்திமதியை ராமதாஸ் அரசியலில் களமிறக்கி உள்ளார். இதனால் அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டிருக்கும் காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையே சண்டை தீவிரமடைந்துள்ளது. மக்கள் மனநிலையும் சரி, தொண்டர்கள் மனநிலையும் சரி மூன்று விதமாக உள்ளது. முதலாவதாக இருவரும் சண்டை போடுவது போல போடுவார்கள். தேர்தல் நேரத்தின்போது ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பது ஒரு கருத்தாக உள்ளது. இரண்டாவது மருத்துவர் ராமதாசின் மனம் மிகவும் புண்பட்டிருக்கிறது. மகளை அரசியலில் இறக்கும் அளவுக்கு அவர் இறங்கிவிட்டார். அன்புமணியை உண்டு இல்லை என்று பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டார். ராமதாஸ் இருக்கும் வரை அரசியலில் அன்புமணி தலை தூக்க முடியாது. அதை எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும் என்று சொல்கின்றனர். மூன்றாவது தரப்பினர், பாமகவை பாஜக கபளீகரம் செய்துவிடும். கத்தியை காட்டி மிரட்டுவது போல அன்புமணியை மிரட்டி வைத்துள்ளார்கள். இல்லாவிட்டால் அவரை திகார் சிறையில் அடைத்துவிடுவார்கள். மேலும், அன்புமணியின் மனைவி சௌமியாவை கவர் செய்து வைத்திருக்கிறார்கள். அவரை வைத்துதான் பாஜக காய்களை நகர்த்துகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில், தந்தை – மகனுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்க பல்வேறு வழிகளில் கட்டப் பஞ்சாயத்து செய்கின்றனர். ஆடிட்டர் குருமூர்த்தியை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மருத்துவர் ராமதாஸ், மிகப்பெரிய அரசியல் ராஜதந்திரி ஆவார். கலைஞர், ஜெயலலிதாவுக்கு பிறகு இன்றைய சூழலில் இருக்கக்கூடிய மூத்த அரசியல்வாதிகளில் துல்லியாக திட்டமிட்டு, அரசியல் காய்களை நடத்தக்கூடியவர். பாஜக தரப்பில் சமரசமாக செல்வதற்கு பேரம் பேசினார்கள். ஆனால் முடியாது. அன்புமணியை இறங்கி போகச் சொல்லுங்கள் என்றார். அன்புமணிக்கு அரசியல் அரசியல் நாகரிகம் தெரியவில்லை. சின்ன வயதில் தெரியாமல் அரசியலுக்கு கொண்டுவந்துவிட்டேன் என்று சொல்லி அவர்களை விரட்டி அடித்துவிட்டார். அதிமுக தப்பிலும் சமாதானம் பேசினார்கள். அதற்கும் ராமதாஸ் ஒத்துவரவில்லை. திமுகவை தவிர, அனைவரும் பேசினார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது நீதிபதியின் செயல்பாடு மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்த வேண்டும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு, தீர்ப்பு சொல்வதுதான் நீதிபதியின் பணியாகும். ஆனால் நீதிபதி, ராமதாசையும், அன்புமணியை வாங்க பேசலாம் என்று அழைப்பு விடுத்தார். பலரும் இதுஒரு கட்டப் பஞ்சாயத்து போல இருக்கிறது என்று விமர்சித்தனர். நீதிபதி அழைப்பை ஏற்று அன்புமணி உடனடியாக சென்றுவிட்டார். ஆனால் ராமதாஸ் வரவில்லை. இது யார் மூலமாக வருகிறது என்று பார்த்து அவர் ஒரு கணக்குபோட்டு, நான் ஆன்லைனில் ஆஜராகிறேன் என்று சொல்லிவிட்டார். இதனால் அந்த முடிவு பின்வாங்கப்படுகிறது.
அடுத்த நாளில் அன்புமணி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வருகிறது. அவரும் பொதுக்குழுவை நடத்தினார். ஆனால் மக்கள் வாக்களிக்க வேண்டும் அல்லவா? அன்புமணி எங்கே சென்று, யாரை உதவிக்கு அழைத்து வந்தாலும் மக்கள் வாக்களிக்க வேண்டும் அல்லவா? பாமகவை ஆதரிப்பவர்கள் பெரும்பாலானோர் மருத்துவர் ராமதாசை தான் ஆதரிக்கிறார்கள். அன்புமணியை, ஒருதரப்பு ஆதரிக்க காரணம் பதவி வெறியாகும். ராமதாசுக்கு பிறகு கட்சி அன்புமணியிடம் தானே வரப் போகிறது என்கிற எண்ணமாகும். ஆனால் மக்கள் செல்வாக்கு மருத்துவர் ராமதாசுக்கு தான் இருக்கிறது.
எப்பாடி பஞ்சாயத்து செய்தாலும், கடைசியில் அன்புமணிக்கு கடும் நெருக்கடியை ராமதாஸ் கொடுக்கிறார். தீவைத்து எரிக்கிறார். வயசாகிவிட்டது. அவருடைய மூளை மழுங்கிவிட்டது என்று நினைத்திருந்த அன்புமணிக்கு, பழுக்க காய்ச்சிய கம்பியால் வாரம் வாரம் சூடு சூடு வைத்துக்கொண்டிருக்கிறார். அன்புமணி நீதிமன்றத்திற்கு சென்றால், ராமதாஸ் தனது மகளை களத்திற்கு கொண்டுவருகிறார். ராமதாசின் பதிலடியால் அன்புமணி, சௌமியா ஆகியோர் புழுவாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ராமதாஸ் கடைசி வரைக்கும் விடமாட்டார் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
ஏற்கனவே கட்சியின் சின்னம் போய்விட்டது. தற்போது பாமகவை இரண்டாக உடைத்து, யார் உண்மையான கட்சி? என்கிற கேள்வி வரும். தேர்தல் ஆணையத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. அவர்கள் தேர்தல் ஆணையம் மூலமாக மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு கொடுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கொடுத்தாலும் மக்கள் ராமதாசை தான் ஆதரிப்பார்கள். பாமகவிற்கு விழும் 100 சதவீத வாக்குகளில், 70 சதவீதம் அன்புமணிக்கு சென்றாலும், எஞ்சிய 30 சதவீத வாக்குகள் ராமதாசுக்கு போய்விடும். அவர் புதிய சின்னத்தில் போட்டியிட்டு, 30 – 40 சதவீத வாக்குகளை பிரித்தாலும் கூட, அன்புமணியால் தேர்தலில் வெல்ல முடியாது. அப்போது, அன்புமணியை கூட்டணியில் சேர்ப்பவர்களுக்கும் அது பலன் அளிக்காது.
இந்நிலையில், ராமதாஸ் தனக்கு பிறகு அன்புமணிதான் என்று சொல்லி வந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போதுதான் தான் அவர் டிரெண்டை மாற்றி மகளை களத்தில் இறக்கி உள்ளார். தற்போதுதான் அன்புமணியின் ஆதரவாளர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். எனக்கு பிறகு அன்புமணி அல்ல. என் மகள் காந்திமதி தான் என்று அறிவித்துள்ளார். அடுத்த கூட்டத்தில் அன்புமணி பின்னால் செல்வதா? காந்திமதியின் பின்னால் செல்வதா? என்று பதவியில் உள்ள நிர்வாகிகளுக்கு அச்சம் ஏற்படும். எனவே ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் இன்னும் தீவிரமடைந்துள்ளது. அன்புமணி தனக்கு வேண்டியவர்கள் என கூறி பாஜகவினரையும், அரசியல் தரகர்களையும் ஒவ்வொருவராக களத்தில் இறக்குகிறபோது, ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்துகொண்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார். எனவே இறுதி வெற்றி ராமதாசுக்கு தான் இருக்கும் என்பது பாமகவினரின் கருத்தாக உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் இன்னும் சில மாதங்களில் கூட்டணி சேர்ந்தாக வேண்டும். மேலும் தேர்தல் ஆணையமும் ஏதாவது தீர்ப்பு சொல்லியாக வேண்டும். என்ன நடக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.