டாஸ்மாக் விவகாரத்தில் துணை முதலமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, அவரது பெயரை கெடுக்க வேண்டும் என பாஜக விரும்பியது. ஆனால் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்து, நீதிமன்றம் அவர்களின் தலையில் கொட்டு வைத்திருக்கிறது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வழக்கின் பின்னணி குறித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ், தொழிலதிபர் ரவீந்திரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை நடத்தவும் கூடாது என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தொடர்புபடுத்தி, எப்படியாவது அவரது பெயரை களங்கப்படுத்தி விடலாம் என்று பாஜகவினர் நினைத்தனர். 2ஜி வழக்கில் செட் செய்தது போல இதிலும் செய்யலாம் என்று நினைத்தனர். ஆனால் இன்றைக்கு நீதிமன்றம் தலையில் கொட்டியுள்ளது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பி இருந்தது. டாஸ்மாக் விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் சோதனை நடத்தி, வீட்டிற்கு சீல் வைக்கிறார்கள். அவரது ஓட்டுநரை மிரட்டி கையெழுத்து வாங்குகிறார்கள். இதனை எதிர்த்து ஆகாஷ் நீதிமன்றத்திற்கு செல்கிறார். அங்கு தான் திரைப்படங்கள் எடுப்பதாகவும், தனக்கும் டாஸ்மாக் விவகாரத்திற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் அறிக்கை நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த நீதிபதிகள், அமலாக்கத்துறையின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று சொன்னார். ஆகாஷ் வீட்டில் சோதனை நடத்தியதற்கான போதிய ஆதரங்கள் இல்லை. நாளை ஆதாரங்களுடன் வாருங்கள் என்று சொல்லிவிட்டார்.
போதிய ஆதாரங்கள் இல்லாதபோது ஆகாஷின் வீட்டை சீல்வைத்தது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். அப்போது, அந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. ஆகாஷ் தரப்பு வழக்கறிஞர், டாஸ்மாக் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக சொல்லப்படும் கால கட்டம் 2014 முதல் 2021 வரையிலான கால கட்டமாகும். அதாவது அதிமுக ஆட்சிக்காலம். அதிமுக ஆட்சிக்காலத்தில் 34 எப்.ஐ.ஆர்.களும், திமுக ஆட்சிக்காலத்தில் 7 எப்.ஐ.ஆர்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முறைகேட்டில் ஆகாஷுக்கு தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை சொல்கிறது. ஆனால் அந்த கால கட்டத்தில் ஆகாஷ் பள்ளி மாணவராக இருந்தார் என்று கூறியுள்ளார். அதற்கு பதில அளிக்க முடியாமல் அமலாக்கத்துறை விழிபிதுங்கி நின்றுள்ளது. வழக்கை முழுமையாக விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதித்து உள்ளது. இது நீதிக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகும்.
டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெறவில்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால் அதிமுக காலத்தில் நடைபெற்ற ஒரு விஷயத்திற்கு திமுக அரசு மீது வழக்கு தொடுப்பது சரியானதா? மத்திய பாஜக அரசு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானாவில் கவிதா போன்றவர்களை கைது செய்துவிட்டோம். அதுபோல தமிழ்நாட்டு மக்களிடம் டாஸ்மாக், ஊழல் என்று சொன்னால் எளிதில் நம்பிவிடுவார்கள் என நினைத்து சொன்னார்கள். அதற்கு ஒரு நேரட்டிவ் செட் செய்தனர். ஆயிரம் கோடி ஊழல் என்று சொன்னார்கள். அமித்ஷாவை விட்டு 30 ஆயிரம் கோடி ஊழல் என்று சொன்னார்கள். இப்படியாக திட்டமிட்டு உள்ளே இறங்கினார்கள். இதை வைத்து ஸ்டாலினுக்கு குறிவைக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது பாஜக விரித்த வலையில், அவர்களே சிக்கிக் கொண்டார்கள்.
பாகிஸ்தானுடைய ராணுவ தளபதியை அழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்து கொடுக்கிறார். அப்போது நமது வெளியுறவு கொள்கையில் எவ்வளவு சிக்கல் உள்ளது. இது குறித்து அவர்கள் பேச மாட்டார்கள். எல்லை பாதுகாப்பு குறித்த எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் இல்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலம் படிப்பவர்கள் விரைவில் வெட்கப்படும் காலம் வரும் என்று சொல்கிறார். ஆனால் அவரது மகன் ஜெய்ஷா ஆங்கிலத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இதனை அடுத்து, அந்த வீடியோவை ஏ.என்.ஐ இணையத்தில் இருந்து நீக்குகிறார்கள்.
பாஜக அமைச்சர்களின் பிள்ளைகள் வெளி நாடுகளில் உயர் கல்வி ஆங்கிலத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் மக்களை ஆங்கிலம் படிக்காதீர்கள் என்று சொல்கிறார்கள். அப்படி ஆங்கிலம் படித்ததால் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது. இவை எல்லாம் இன்றைக்கு நாட்டில் பேசு பொருளாக இருக்க வேண்டும். ஆனால் என்ன பேசுகிறார்கள். முருக பக்தர்கள் மாநாடு. அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து வைத்திருக்கிறீர்களே. இதை ஆகம விதிகள் ஏற்குமா? அப்போது உங்கள் அரசியலுக்கு நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதற்கு ஆகம விதிகள் எல்லாம் பிரச்சினை கிடையாது.
திருமாவளவன், திருநீற்றை அழித்துவிட்டார். அவர் இந்து விரோதி என்று சொல்கிறார்கள். வடகலை, தென்கலை பிரச்சினை செய்கிறார்கள். அதெல்லாம் இந்து விரோதம் இல்லையா? பிரதமர் மோடி ஷு காலுடன் சென்று சாமி கும்பிட்டார். அது இந்து விரோதம் இல்லையா? திடீரென்று தமிழ்க்கடவுள் முருகன் என்று சொல்கிறார்கள். கீழடி அகழாய்வுக்கு ஏன் அங்கீகாரம் தர மறுக்கிறது மத்திய அரசு. அதை பேச வேண்டும். இவற்றை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்துவிடக் கூடாது. அதனால் திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். நாட்டில் அதிகமான மதுக் கடைகளை திறந்துள்ள மாநிலம் உ.பி.,
தமிழ்நாட்டில் சீமான் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். ஆனால் இதே கள் இறக்குகிற போராட்டத்தை ஏன் ஜெயலலிதா இருக்கிறபோது சீமான் செய்யவில்லை. பழனியிலும், மருதமலையிலும் தமிழில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.. திருச்செந்தூரிலும் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதெல்லாம் கிடையாது என்று தற்போது சீமான் பொங்குகிறார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எத்தனை கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. அதில் ஒரு கோவிலில் ஆவது தமிழில் குடமுழுக்கு நடைபெற்றதா? அப்போது அவர்கள் அனைவரும் பொய்யை சொல்லி, மக்களை எப்படியாவது திசை திருப்பி தமிழகத்தில் திமுகவை வீழ்த்திவிட வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.