வருமான வரித்துறை விதித்த அபராதத் தொகையை விஜய் கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது விஜய்க்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.


அதிமுக – விஜய் இடையே நடைபெற்று வரும் வார்த்தை மோதலின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதத்தை எதிர்த்து தவெக தலைவர் விஜய் தொடர்ந்த வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. அரசியல், சினிமா, ரியல் எஸ்டேட் துறைகளில் கருப்பு பணம் புழக்கம் அதிகமாக உள்ளது. சினிமா துறையில் முழுக்க வெள்ளை பணத்தில் தான் எடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது. அப்படி செய்தால் அந்த துறையே முடங்கி போய்விடும்.
இன்றைக்கு விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், இந்த விவகாரம் கண்டிப்பாக பேசு பொருளாகும். விஜய், நேர்மை, லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற அரசு என்று பேசிக் கொண்டிருக்கும் போது, முதலில் நீங்கள் அபராதம் கட்டிவிட்டு வாங்க என்று சொல்வார்கள். உயர்நீதிமன்ற உத்தரவு விஜய்க்கு பின்னடைவாக தான் பார்க்கப்படும். அது குறித்த விமர்சனங்கள் வரும். அதை விஜய் சந்தித்துதான் ஆக வேண்டும். அரசியலுக்கு வந்தால் இவை எல்லாம் வரும் என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வர முடிவு செய்த போதே திரைப்படங்களுக்கான சம்பளத்தை , வருமான வரியுடன் சேர்த்து பேச தொடங்கிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் என்றால், வரி ரூ.30 கோடி. விஜய் சம்பளத்துடன் சேர்த்து ரூ.130 கோடியாக பேசி, ரூ.30 கோடியை வருமான வரித்துறையில் கட்ட சொல்லி விடுவார். எதிர்காலத்தில் அரசியலுக்கு செல்லப் போகிறோம். அப்போது நெகட்டிவ் ஆக பெயர் வரக்கூடாது என்று அப்படி செய்தார். அதேபோல், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக விஜய் சில சொத்துக்களின் பரிமாற்றங்களை அவசர அவசரமாக முடித்தார் என்று ஆடிட்டர்கள் கூறுகிறார்கள்.
தான் அரசியல் கட்சி தொடங்க போவதாகவும், அப்படி தொடங்கினால் தன்னுடைய கணக்கு வழக்குகள் எல்லாம் பொதுவெளிக்கு வந்துவிடும் என்பதால் முன்கூட்டியே செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் என தகவல்கள் உள்ளது. எனவே அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே அவர் தயாராகி உள்ளார். வருமான வரித்துறை விதித்த வரியை எதிர்த்து வழக்கு யார் வேண்டுமானாலும் தொடர உரிமை உள்ளது. அதேவேளையில் அபராதத்தை கட்டித்தான் ஆக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தாவிட்டால் கட்டித்தான் ஆக வேண்டும். அதை ஒரு குறையாக சொல்லக்கூடாது.

விஜய், அதிமுகவை ஊழல் சக்தி என்று சொல்லிய நிலையில், அதிமுக தரப்பில் அவர் மீது தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. அதிமுகவினர் விஜயை தாக்கி பேசியாக வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் ஊழல் செய்து சிறைக்கு சென்றவர். அவர் குற்றவாளி என்பதால் தான் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 3 பேர் சிறைக்கு சென்றார்கள். பொதுஊழியருடன் சேர்ந்து சதி செய்ததாக தான் இவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் விஜய் ஊழல் கட்சி என்று சொன்னால், அதிமுகவினர் இதுபோன்று பதிலடி கொடுக்கத்தான் செய்வார்கள். நீங்கள் முறையாக வரி கட்டினீர்களா?
ஜனநாயகன் படத்திற்கே குரல் கொடுக்காத நீங்கள் எப்படி மக்கள் பிரச்சினைகளுக்காக பாஜகவை எதிர்த்து குரல் கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். கரூர் சம்பவத்தின்போதே திமுக அரசையும், விஜயையும் சேர்த்து அதிமுக அடித்திருக்க வேண்டும். மாறாக அரசை மட்டும் அடித்துவிட்டு, விஜயை பாதுகாப்பது போன்று பேசினார்கள். தற்போது விஜய் அதிமுகவை அடிக்கிறபோது, தங்களையே அடிக்கிறாரா? என்று விமர்சனத்தை கொட்டுகிறார்கள்.

ஊழல் அற்ற ஆட்சியை தரப்போவதாக சொல்கிற விஜய், தன்னுடைய வழிகாட்டியாக ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை தனது வழிகாட்டியாது கூறுவது முழுக்க முழுக்க அரசியலாகும். அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லிவிட்டு ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற செங்கோட்டையனை தனக்கு அருகில் அமர்த்தியுள்ளார். காங்கிரசை கூட்டணிக்கு வா வா என்று அழைக்கிறார். காங்கிரஸ் மீது போபர்ஸ் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அப்போது அதிமுக, திமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்வது பம்மாத்து வேலையாகும். அரசியலில் ஊழல் என்பது இயல்பான ஒன்று. விஜய் வந்த பிறகும் ஊழல் நடக்கப்போகிறது. இவற்றை எல்லாம் டீகோட் செய்து பார்த்தால் ஒன்றும் இருக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


