மதுக்கூர் இராமலிங்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நெருங்கிய கூட்டாளிகள். இவர்கள் இரு வரையும் இணைப்பது தீவிர வலதுசாரி கருத்தியலாகும். டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை ஜனாதிபதியானவுடன் முதலில் வாழ்த்துச் சொன்னவர் மோடிதான். இதை டிரம்ப் பெருமையாகச் சொன்னார்.நரேந்திரமோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது அந்த நாட்டில் இருந்த சில இந்தியர்களைச் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று முத்திரை குத்தி கையில் விலங்கு பூட்டி, கால்களைச் சங்கிலியால் பிணைத்து அமெரிக்காவின் போர் விமானத்தில் ஏற்றி குப்பையைப்போல இந்தியாவில் தள்ளிவிட்டுப் போனது டிரம்ப நிர்வாகம். இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி கண்டித்துப் பேசவில்லை. அந்தப் பயணத்தின்போது இந்தியா இறக்குமதி செய்யும் அமெரிக்க விஸ்கிக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்று டிரம்ப் சொன்னவுடனேயே அதை நிறைவேற்றி மனம் குளிர வைத்தார் நம் பிரதமர்.
சமூக ஊடகங்கள் கூட விஸ்வகுரு இப்படி விஸ்கி குரு ஆகிவிட்டாரே என்று கிண்ட லடித்தன.

ஆனாலும் கூட இந்தியாவைத் தொடர்ந்து மிரட்டி வருகிறது டிரம்ப் நிர்வாகம், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். அத்துடன் இல்லாமல் தற்போது அந்த வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இதற்குக் காரணமாக அமெரிக்கா சொல்வது ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் உக்ரைனுக்கு எதிராகப் போரிடும் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்பதாகும்.உண்மையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலுக்குக் காரணம் அமெரிக்காவும், அதன் தலைமையிலான நேட்டோ கூட்டணி நாடுகளும்தான். உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் வழங்குகிறது அமெரிக்கா. அந்தப் போர் நீடிப்பதற்கு காரணமே அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும்தான். ஆனால் நீங்கள் தான் போர் நீடிப்பதற்குக் காரணம் என்று இந்தியா மீது வீண்பழி சுமத்துகிறது.
தேர்தலுக்கு முன்பே முடிவாகும் தேர்தல்: பாஜகவின் புதிய இரகசிய ஆயுதம் SIR!
இத்தனைக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் சுதந்திர இந்தியா பாரம்பரியமாகப் பின்பற்றி வந்த சுயேச்சையான அயல்துறை கொள்கையை கைகழுவிவிட்டனர். பாலஸ்தீன மக்களைப் பட்டினிபோட்டு கொலைசெய்து கொண்டிருக்கும் இஸ்ரேலைக் கூட இந்தியா வன்மையாகக் கண்டிப்பதில்லை. மாறாக, அமெரிக்காவின் கண்ஜாடைக்கேற்பவே ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் கைதூக்குகிறது ஒன்றிய அரசு.இருந்தாலும் இந்தியாவை மேலும் மேலும் மிரட்டிப் பணிய வைக்க அமெரிக்கா தொடர்த்து முயல்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளில் இத்தகைய ஓர் அயல் துறை நெருக்கடி இதுவரை இருந்ததில்லை.
ஒரு நாட்டின் அயல்துறைக் கொள்கைக்கும் பொருளாதாரக் கொள்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சுயசார்பு பொருளாதாரத்தை கைவிடும் போது, அயல்துறைக் கொள்கையிலும் பெரும் மாற்றம் ஏற்படும். மோடி அரசின் “இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முழக்கமும் கூட வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பதாகவே உள்ளது.
ஜிஎஸ்டி போன்ற கொடூர வரி விதிப்பு முறையால், உள்நாட்டுத் தொழில்களும் குறிப் பாக, சிறு, குறு தொழில்கள் மூச்சுத் திணறி நிற்கின்றன.
உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற மும்மயக் கொள்கை 1990களில் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, உலகமே ஒரு சந்தையாகிவிட்டது. எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வர்த்தகம் செய்யலாம். முதலீடு செய்யலாம். தடையே இருக்காது என்று முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் கூச்சலிட்டனர். அது எந்த அளவு போலித்தனமானது என்பதை அமெரிக்க வல்லரசு அதீத வரி விதிப்பு அம்பலப்படுத்திவிட்டது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியாவைவிட கூடுதலாக சுச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு சீனா. ஆனால், அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல்கள் அந்த நாட்டிடம் எடுபடவில்லை. சில அரிய மண் வகை தனிமங்களுக்கு அமெரிக்கா, சீனாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் தயாராகும் சிப்களில் 80 சதவீதம் சீனாவினால் வாங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான சிப்களை தர அமெரிக்கா மறுத்த நிலையில், சீன நிறுவனங்களே அவற்றை உற்பத்தி செய்து, இப்போது சிப் இறக்குமதியை முற்றாக நிறுத்திவிட்டது.
ஆனால் இத்தகைய பொருளாதாரத் துணிச்சல் நம்மிடம் இல்லை என்பதுதான் வேதனை. மோடி நிர்வாகத்தின் வாய்ப்பந்தலால் நிழல்தர முடியாது. இதில் கொடுமை என்னவென்றால், ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் வாங்கப்பட்ட கச்சா எண்ணெயால் இந்திய வெகு மக்களுக்குப் பெரும்பாலும் லாபம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்தக் கச்சா எண்ணெய் தரப்படுவதும் இல்லை, தன்னுடைய கார்ப்பரேட் கூட்டாளிகளான அம்பானி அதானி போன்ற பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்கு இந்த கச்சா எண்ணெயை மோடி அரசு கொடுக்கிறது. அவர்கள் அதைச் சுத்தி கரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி, அதற்காக ஊக்கத்தொகையும் பெறுகிறார்கள்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பினால் திருப்பூரின் பின்னலாடை தொழில் உட்பட கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரும். தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்வதிலும் சிக்கல் வரும். ஆனால் இந்தியா, அமெரிக்காவிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் நாடாக இருக்கிறது. இதை நிறுத்துவோம் என்று சொல்லக் கூட மோடி அரசு தயாராக இல்லை.
அமெரிக்கா வரி விதிப்போடு நிற்கவில்லை. அந்த நாட்டின் மரபணு மாற்ற விளை பொருள்களுக்கு இந்தியச் சந்தையை முற்றாகத் திறந்துவிட வேண்டும் என்றும் நிர்பந்திக்கிறது. இது இந்திய விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் அடாவடியாகும்.
பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடை யிலான மோதலை நான்தான் தலையிட்டு நிறுத்தினேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப 40 முறை சொன்ன போதும், அவருடைய பெயரை ஒருமுறை சொல்லக்கூட பிரதமர் மோடி தயாராக இல்லை. இருந்தாலும், தனது இனிய நண்பருக்கு இரக்கம் காட்ட டிரம்ப் தயாராக இல்லை.
அமெரிக்காவின் சவாலைச் சந்திப்பது சிரமமான காரியமல்ல. அமெரிக்கா தவிர்த்த ஏனைய நாடுகளிடம் வர்த்தக உறவைப் பெருக்க வேண்டும். உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த வேண்டும். தன்னுரிமை பெற்ற இந்தியா, யாரிடம் என்ன வாங்கவேண்டும் என்று உத்தரவிடும் உரிமை அமெரிக்கா உட்பட யாருக்கும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குட்டக் குட்ட குனிந்த நிலையில், நிமிர வேண்டிய நேரம் இது. இனியும் குனிந்தால், தரைக்குள் புதைவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகும்.
உறவாடி கெடுத்த டிரம்ப்! தலையில் கை வைத்த ஏற்றுமதியாளர்கள்! திருப்பூரில் மட்டும் இவ்வளவு பாதிப்பா?