Homeசெய்திகள்கட்டுரைமாற்றத்தை நோக்கி திருநங்கைகள்

மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்

-

மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்

சமுகத்தில் ஆண், பெண் என்ற தனித்தனி அடையாளங்கள் இருந்தும் மனித இனம் வாழ்வதற்கு போராடி வருகிறது. ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக இருக்கும் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகளை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.

அவ்வளவு பிரச்சனைகளையும் மீறி ஒரு சிலர் தங்களுடைய சொந்த முயற்சியினால் படித்து, தங்களுடைய தனித் திறமைகளினால் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அப்படி தன்னுடைய தனித்திறமையால், உழைப்பால் முன்னேறி கொண்டிருக்கும் திருநங்கையர் சரோஜாவிடம் நாம் பேசும்போது எழுந்த கேள்வியும், அவர் அளித்த பதிலும் பார்ப்போம்.

திருநங்கையரை பற்றி மற்றவர்கள் பார்க்கும் விதம் எப்படி தோன்றுகிறது?

திருநங்கையரை பார்பவர்கள் இந்நாள் வரை எங்களை கேவளமாக தான் பார்கின்றனர் சிலர்.ஆனால் நான் திருநங்கையராக இருப்பதை நினைத்து மிகவும் பெருமையாக தான் நினைக்கிறன்.

எங்கள் இனத்தவர்கள் கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சேர இடம் கேட்டால் கொடுக்க யோசிக்கிறார்கள். சில கல்லூரியில் மட்டுமே எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு படித்து முன்னேறி வருகிறோம். என்றார்

எங்களில் பலர் பொது இடங்கள் மற்றும் இரயில்களில் இன்றும் கை தட்டி காசு கேட்கிறார்கள் அதை நான் மறுக்கவில்லை. மாறாக ஒரு திருநங்கை இரயில் இன்ஜினியராகவும் சாதனை புரிகிறார். நாங்கள் சாதனையாளராகவும் திகழ்வது ஏன் புரியவில்லை.

அது மட்டுமில்லாமல், நாட்டிய ஆசிரியர், பத்திரிக்கையாளர் என்று பல துறைகளில் நாங்கள் சாதனை புரிந்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்றார்.

நீங்கள் திருநங்கையராக மாறிய சம்பவம்:

நான் திருநங்கையாக மாறிய கனம்:

என்னிடம் இந்த மாற்றத்தை உணர்ந்தவுடன் என் பெற்றோரிடம் தெரிவித்தேன். முதலில் என்னை அடித்து இது எல்லாம் தவறு உன்னை நீ மாற்றிக்கொள் என்றார்கள், சில மாற்றங்களை என்னால் மாற்றிக்கொள்ள முடியாத சூழ்நிலை, அதை என் வீட்டார் யாரும் புரிந்துக்கொள்ளவில்லை.

உனக்கு ஒரு அக்கா மற்றும் தங்கை இருக்கிறார்கள். நீ இப்படி இருந்தால் அவர்கள் வாழ்கையும் சேர்த்துதான் பாதிக்கும், எங்கள் பேச்சை கேட்பதாக இருந்தால் வீட்டில் இரு, முடியாது என்றால் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடு என்று சொல்லிவிட்டார்கள்.

நான் வீட்டை விட்டு வெளியேறிய பொழுது எனக்கு 16 வயது இருக்கும். பெண்ணாகவே மாறிதான் வீட்டை விட்டு வெளியேறினேன். வெளியேறிய பின் பல இன்னல்களை சந்தித்தேன்.

ஒரு வேலை உணவு கூட  எனக்கு தர மறுத்தார்கள். பிச்சை எடுத்து தான் சாப்பிட்டேன். இரவில் தெரு ஓரத்தில் படுத்து உறங்க வேண்டியிருக்கும். அந்த நொடியில் கூட சிலர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்கள்.

பின்னர் அடைக்கலம் தேடி ஒரு விடுதியில் விசாரித்தேன் ஆனால் அங்கு  என்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து அருகில் இருந்த ஒரு கோவிலில் படுப்பதற்க்காக ஒரு சிறிய இடத்தை அமைத்துகொண்டேன்.

எனக்கு அங்காளம்மன் என்றல் மிகவும் பிடிக்கும் நான் கோவிலில் தங்கியிருந்த போது,  என்னை சாமி தரிசனம் கூட செய்ய விடமாட்டார்கள்.

இதை எல்லாம் நினைத்து நான் பலமுறை அழுதிருக்கிறேன். ‘அன்று நான் நினைத்தது ஒன்று மட்டும்தான், நம்மை இந்த சமுதாயம் ஒதுக்கிவைக்கிறது என்றால் அதை நினைத்து நாம் வருத்தப்படுவதால் எந்த பலனும் இல்லை.

என்னை ஒதுக்கியவர்கள் முன் ஒரு சிறந்த வாழ்கையை வாழ்ந்து காட்ட வேண்டும். என்று நினைத்து, முதற்கட்டமாக  தினமும் தெருவில் இருந்த காகிதம், இரும்பு, செம்பு,  பிளாஸ்டிக் போன்றவற்றை சேகரித்து காயிலான் கடையில் கொடுத்து,  அதிலிருந்து பெற்ற காசை வைத்து எனது ஜீவனத்தை பார்த்துக் கொண்டேன்.

பின்னர் பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து வைத்து ஒரு பூக்கடை ஒன்றை தொடங்கினேன். அதன் பின் சிறு ஹோட்டல் ஒன்றையும் ஆரமித்தேன்,

பிறகு சொந்தமாக வீடு கட்டினேன். அதில் என்னை போன்ற ஆதரவற்ற  பல திருநங்கையர்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்.

இன்று எங்களுக்கு சொந்தமாக வீட்டிற்க்கு வெளியே பெரிய அங்காளம்மன் கோவில், பூக்கடை, ஹோட்டல், மற்றும் வீட்டில் தயார் செய்யும் அப்பளம், வத்தல், போன்ற பல தொழில்களை செய்துக் கொண்டிருகிறோம்.

இன்று நான் நல்ல நிலையில் இருக்கிறேன், என்னை போன்ற ஆதரவற்ற  திருநங்கைகளுக்கு அடைக்கலமோ உதவியோ தேவைப்பட்டாள் என்னால் இயன்ற உதவியை கட்டாயம் செய்வேன் என்றார்.

திருநங்கையர் தினம் :

ஏப்ரல் மாதம் 15ம் தேதி உலக திருநங்கையர் தினமாக கொண்டப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஏப்ரல் 15ம்-தேதி சிறந்த திருநங்கையர்களுக்கு விருதும் வழங்க இருக்கிறார்கள் இதை பற்றி உங்கள் கருத்து?

சுதந்திர தினம், குடியரசு தினம், மகளிர் தினம், அன்னையர் தினம், நண்பர்கள் தினம், காதலர்கள் தினம், இது போன்ற கொண்டாடப்படும் பல தினங்களை  பற்றி கேட்டால் உடனே அனைவரும் விளக்கம் அளிப்பார்கள்.

ஆனால் திருநங்கையர் தினம் என்ற ஒரு நாள் இருக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது காரணம் எங்களுக்கான விளம்பரம் கிடையாது,

ஆனால் இப்பொழுது தமிழக அரசு, திருநங்கையர் தினம் என அறிவித்ததற்கும் கெளரவித்து விருதுகள் வழங்கி கொண்டிருப்பதற்கும் நன்றி.

“மாற்றம் ஒன்றே மாறதது என்பார்கள்” ஆனால் சில உடல் ஹார்மோன் மாற்றத்தால் மாறிய எங்களை உலகம் பார்க்கும் விதம் எங்களுக்கு சில நேரம் வறுத்தமாக தான் இருக்கும். அதே நேரத்தில்

என் தொழில் தொடர்பாக என்னை தேடி வந்து வாழ்த்துபவரை நினைத்து நான் அதிக மகிழ்ச்சியும் அடைவேன் என்றார். இதுவரை எங்கள் வாழ்க்கை முறைய பற்றி கேட்டதற்கு நன்றி எனக் கூறி விடை பெற்றுக்கொண்டார்.

MUST READ