திமுகவுக்கு போட்டி என்பது அதிமுக தான் என்றும், விஜய், தவெக – திமுக இடையே தான் போட்டி என்று பொய்யான பிம்பத்தை கட்டமைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


துணை முதலமைச்சர் உதயநிதி நேர்காணல், அமித்ஷா தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்களுக்கு போட்டி என்பது அதிமுக உடன் தான் என்று கூறியுள்ளார். உண்மையும் அதுதான். கட்டமைப்பு ரீதியாக அதிமுக தான் பெரிய கட்சி. விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று நேரட்டிவ் செட் செய்ய முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமி 170 தொகுதிகளுக்கு மேலாக பிரச்சாரம் மேற்கொண்டுவிட்டார். ஆனால் விஜய், அதிமுக களத்தில் இல்லை என்று சொல்கிறார். விஜய்க்கு ரசிகர்கள் கூடத்தான் செய்வார்கள். ஆனால் அது அரசியல் ஆகுமா? அரசியல் பலன் தருமா? விஜயின் அரசியலை புரிந்துகொண்டவர் செல்லூர் ராஜுதான். நயன்தாராவை கூட்டிவந்தால், விஜயை விட அதிக கூட்டம் வரும் என்று அவர் சொல்கிறார்.
விஜய், மக்களை வைத்து அரசியல் செய்யவில்லை. அவர் ஸ்ட்ராட்டஜிக் அரசியல் செய்கிறார். ஆனால் அதிமுக உடன் கூட்டணி அமைத்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். விஜய்க்கு பெண்கள் ஆதரவு உள்ளது என்று கட்டமைத்தார்கள். கரூர் சம்பவத்திற்கு பிறகு அந்த பிம்பம் உடைந்துவிட்டது. தற்போது வெறும் ரசிகர் மன்றம் மட்டும்தான். அதை வைத்து அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈரோடு நிகழ்ச்சிக்கு பிறகு வேறு எதுவும் நடைபெறவில்லை.

அதிமுக, தவெக கூட்டணிக்கு எதிர்பார்க்க காரணம், அவர்களின் பலவீனம்தான். அதிமுக – பாஜக கூட்டணி மிகவும் பலவீனமானது. விஜயின் ரசிகர் மன்ற வாக்குகள் விழுந்தால் தங்களுக்கு ஒரு பூஸ்ட் ஆக இருக்கும் என நினைக்கிறார்கள். அதிமுக – பாஜக கூட்டணிக்கு 41 சதவீதம் வாக்குகள் இருந்தால், ஏன் விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என்கிறார்கள். அருண்ராஜ், ஒருபோதும் திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது என்று சொல்கிறார். ஆனால் கொள்கை எதிரிகள் தான் உச்ச நீதிமன்றத்தில் அவர்களுக்கு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
அதிமுக – பாஜக கூட்டணி பெரிய அளவில் எதிர்பார்ப்பது பாமகவை தான். அதேபோல தேமுதிகவை எதிர்பார்க்கிறார்கள். அதுமட்டுமின்றி விஜயையும் எதிர்பார்க்கிறார்கள். விஜயும் மாற வாய்ப்பு உள்ளது. பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னவர், எதற்காக அவர்கள் களத்தில் இல்லை என்று சொல்கிறார். விஜய் குறித்து ஊடகங்கள் பிம்ப கட்டுமானம் செய்கிறார்கள்.

பாஜகவை பொருத்தவரை எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் 30 எம்எல்ஏ-க்கள் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அதிமுகவை கபளீகரம் செய்து, அந்த இடத்திற்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு விஜய் தடையாக உள்ளார். எனவே விஜயை எப்படி கூட்டணிக்கு கொண்டுவரலாம் என்கிற படலம் போய்க் கொண்டு இருக்கிறது. பீகாரில் தேர்தலுக்கு முன்பாக ரூ.10 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றார்கள். தமிழ்நாட்டிற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அமித்ஷா, தமிழ்நாட்டிற்கு திட்டத்தோடு வருகிறார். அதற்கான வேலைகளை செய்யப் போகிறார்.
பாஜக தமிழ்நாட்டில் தேர்தலுக்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுக்க வாய்ப்புகள் இல்லை. காரணம் அவர்களுக்கு திருப்பரங்குன்றம் மக்களிடமே ஆதரவு கிடையாது. இது தமிழர் பிரச்சினை. இந்து பிரச்சினை இல்லை என்று மோகன் பகவத்தே கைவிட்டு போய்விட்டார். அவர்களுக்கு கொளுத்துவது என்றால் தெரியும். தீபம் என்றால் என்ன என்று தெரியுமா? அவர்களுக்கு கூட்டணிக்கு பலம் வேண்டும். அதற்காக விஜயை இழுக்க முயற்சிக்கிறார்கள். திமுக – அதிமுக இடையே 5 சதவீதம் தான் வாக்கு வித்தியாசம் என்றால் அதை வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து ஏமாற்றி விடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


