ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் எடப்பாடியை எதிர்க்கும் மனநிலையில் இல்லை. அதனை எடப்பாடி புரிந்துகொண்டு பெருந்தன்மையோடு ஒன்றிணைந்த அதிமுகவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு, இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாக அதிமுகவில் 10 முக்கிய நிர்வாகளை அழைத்து, இதுதான் நடந்தது. ஆட்சியில் பங்கு என்று நான் சொல்லவில்லை. தவறாக சொல்லிவிட்டார்கள். நீங்கள் சிலர் இந்த கருத்தை அழுத்தமாக சொல்லிவிட்டு நிறுத்திவிடுங்கள் என்று எப்பாடி ஆலோசித்தாரா? எனக்கு தெரிந்து இந்த நிமிடங்கள் வரை நடைபெறவில்லை. இன்னும் சென்னைக்கு வராதவர்கள் உள்ளனர். சட்டப்பேரவை முடிந்து போய் சந்திக்காமல் இருப்பவர்களும் உள்ளனர். செயற்குழுவில் தான் முதன்முறையாக முகத்தை பார்த்துக்கொள்ள போகிறார்கள். அந்த செயற்குழுவையாவது எடப்பாடி முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். கோப தாபங்கள், எதிர்க்கருத்துக்கள் எந்த இயக்கத்திலும், எந்த முடிவுக்கும் இருக்கும். இதற்கு அதிமுக விதி விலக்கு அல்ல. எந்த சூழலில் இந்த முடிவை எடுத்தேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கில்லை என்று தெளிவுபடுத்தி விட்டேன் என்று சொல்லி, எதிர்க்கருத்துக்கள் வரவிட்டு அவர்களை சமாதானப்படுத்துபவர்தான் தலைவன். அதை எடப்பாடி சரியாக செய்தால் அவருக்கும் நல்லது. அதிமுகவுக்கும் நல்லது.
எடப்பாடி பாஜகவை பேச விடாமல் அமைதியாக்கிவிட்டார். சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொன்னார். எதற்காக எடப்பாடி மறுக்கிறீர்கள் என்று அவர்களும் கேட்கவில்லை. அப்போது அவர்களும் பதுங்குகிறார்கள். அப்போது 2 விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஒன்று நிஜமாகவே எடப்பாடி சொல்லாமல், அமித்ஷா ஒரு ஆர்வத்தில் சொல்லி இருக்கலாம். அல்லது ஒத்துக்கொண்ட விஷயத்தை மறுக்கிறாயா, உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று அவர்கள் சில திட்டங்கள் போடலாம். பிளான் பி செங்கோட்டையன் மூலம் ரெடியாக உள்ளது. செங்கோட்டையன் தற்போது மியாவ் என்று பதுங்கிவிட்டார். எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறார். அவருக்கு சூழல் புரிகிறது. அரசியல் புரியாதவர் அல்ல செங்கோட்டையன்.
பாஜகவிடம் இருந்து எடப்பாடிக்கு ஒத்துழைப்பு கொடுக்க அறிவுறுத்தி இருக்கலாம். தற்போதைய பாஜகவின் நோக்கம், அதிமுகவை உடைப்பது அல்ல. அதை வலிமையாக வைத்திருப்பதுதான். வலிமையான குதிரையில் சவாரி செய்ய வேண்டும் என்கிற சுயநலன் தான் அதற்கு காரணமாகும். பாஜக தற்போது பதுங்குகிறார்கள். அது நியாயமான மவுனமாக இருந்தால், தாங்கள் செய்த தவறை அவர்கள் உணர்ந்துவிட்டனர். தேர்தலுக்கு முன்பாக கூட்டணியை அறிவித்தால், அது பலவீனமாகும். விஜய் போன்ற புதுவரவுகள் சொல்லலாம். என்ன செய்தாவது அவர்கள் ஜெயிக்க நினைப்பார்கள். சீமான் இன்றுவரை நான் தனியாக நிற்பேன். தனியாக ஆட்சி அமைப்பேன் என்று சொல்கிறபோது, இவ்வளவு பெரிய இயக்கம் ஆட்சியில் பங்கு தருவேன் என்று சொல்வது அவர்களது பலவீனத்தை முன்கூட்டியே காட்டுகிறது. அதை எப்படியோ தம்பிதுரையை சொல்லவைத்து முடித்து விட்டார்.
அதிமுக – பாஜக கூட்டணியை டிசம்பர் அல்லது ஜனவரியில் அறிவித்திருக்க வேண்டும். அதிமுக வீணாக பாஜகவை தூக்கி சுமக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு முதலில் அதிமுக ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்ட அதிமுகவால் பாஜகவை தூக்கி சுமக்க முடியும். ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறபோது அதில் சில முரண்பாடுகள் இருந்தால், அந்த முரண்பாடுகள் களைய கொஞ்சம் காலம் எடுக்கும். ஒரு கட்சி என்று சொல்கிற அதிமுகவே இங்கே மூன்றாக கிடைக்கிறது. நாலு பேர் கூட இல்லை என்று சொல்கிற தினகரன் அதிமுகவை டெபாசிட் போக வைத்தார். ஓபிஎஸ் எல்லாம் ஒரு ஆள் இல்லை என்று சொன்னார்கள். அவர் பலாப்பழம் சின்னத்தை கொண்டு வந்து இரட்டை இலையை டெபாசிட் போகச் செய்தார். இந்த இரண்டு பேரும் தாங்கள் யார் என்று நிருபித்துவிட்டனர். அப்படி பட்டவர்கள் வேண்டும். முக்குலத்தோர் சமுதாயம் அதிமுகவை விட்டு விலகிப்போய்விட்டது. டெபாசிட் போன 7 தொகுதிகளில் 4 தொகுதிகள் தெற்கில் உள்ளது. அப்போது அந்த சமுதாயத்தை இழுக்க என்ன வழி உள்ளது. இவற்றை எல்லாம சரிசெய்துவிட்டு தான் நீங்கள் இன்னொரு வீட்டிற்கு சென்று கூட்டணி வைக்க வேண்டும்.
என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ், தினகரன் இருக்க எடப்பாடி பழனிசாமி சம்மதித்துள்ளார். அதிமுகவை நீங்கள் உற்சாகப்படுத்தினால் அந்த கெமிஸ்ட்ரி, உற்சாகம் வேறு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது நடந்துவிட்டால், திமுகவுக்கு பதற்றம் தொடங்கிவிடும். தொடங்க வேண்டும். ஏன் என்றால் ஒன்றுபட்ட அதிமுக – பாஜக என்றால் பாமக தயங்காமல் வருவார்கள். தேமுதிக வேறு ஆப்ஷனை பற்றி யோசிக்காமல் வருவார்கள். மிக நிச்சயமாக அது மிக வலுவான அணியாக இருக்கும். அது எப்படி என்றால் எடப்பாடி தன்னுடைய பெருந்தன்மையை இன்னும் கொஞ்சம் காட்ட வேண்டும். இன்னும் கொஞ்சம் துணிச்சல் வேண்டும். எடப்பாடி சேட்டை செய்யவும்தான் செங்கோட்டையனை வைத்து மிரட்டினார்கள். பாஜக அணிக்கே வந்துவிட்டார். இனி அதை எல்லாம் காட்ட மாட்டார்கள். இரட்டை இலை வழக்கு இனி எவ்வளவு சுமுகமாக போகும் என்று பாருங்கள். இதை எல்லாம் புரிந்துகொண்டு எடப்பாடி எதற்காக பயப்பட வேண்டும். தினகரனும், ஒபிஎஸ்-ம் அவரை எதிர்க்கும் மனநிலையில் இல்லை. இதை புரிந்துகொண்டு எடப்பாடி இன்னும் கொஞ்சம் பெருந்தன்மை காட்டினால் ஒன்றுபட்ட அதிமுக சாத்தியம் தான்.
ஒன்றுபட்ட அதிமுக என்றால் சீட்டிற்கே பிரச்சினை இல்லை. என்.டி.ஏவில் இருக்கிறார்கள் அது ஒற்றுமை இல்லையா? என்று கேட்கிறீர்கள். ஒருவர் குக்கர் சின்னத்தில் நிற்பார். இன்னொருவர் வேறு ஒரு சின்னத்தில் நிற்பார். இதற்கு பெயர் ஒற்றுமையா? அதிமுக தொண்டர்கள் என்ன முட்டாளா? இரட்டை இலை சின்னம் இருக்கும்போது அவர்களுக்கு எதற்கு சுயேட்சை சின்னம் கொடுத்தீர்கள் என்று கேட்பார்கள். அதனால் எடப்பாடி, அவர் நலனுக்காக கொஞ்சம் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் முதலமைச்சராக வேண்டுமானால், அதற்கு அதிமுக ஒன்றுபடாவிட்டால் சாத்தியமே இல்லை. ஸ்டாலின் கால்மேல் கால்போட்டு ஈசியாக ஜெயிப்பார். பார்க்கத்தானே போகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.