spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபனையூருக்கு போகும் அமித்ஷா? அமைகிறதா அதிமுக - விஜய் கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

பனையூருக்கு போகும் அமித்ஷா? அமைகிறதா அதிமுக – விஜய் கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

விஜயை, என்டிஏ கூட்டணிக்குள் கொண்டுவர அமித்ஷா முயற்சித்து வருவதாக வெளியாகி உள்ள செய்தி என்பது, மக்களை குழப்புவதற்கான முயற்சி என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாஜக – விஜய் கூட்டணி தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தியின பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் பனையூருக்கு அருகிலேயே அமித்ஷா தங்கவைக்க பாஜகவினர் ஏற்பாடு செய்திருப்பதாகவும், விஜயை எப்படியாவது என்.டி.ஏ. கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற நோக்கத்தில் பாஜக செயல்பட போவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமித்ஷா, பனையூரில் போய் நட்சத்திர பங்களாவில் தங்குவதற்கு பதிலாக விஜய் வீட்டிலேயே தங்கலாம். ரூம் கேட்டால் விஜய் கொடுத்து விடுவார்.

ஒருவருடன் கூட்டணி பேச அவருடைய வீட்டிற்கு பக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தான் அறை எடுக்க வேண்டுமா? இந்த செய்தியின் மூலம் அந்த நாளிதழ் என்ன விதமான சமிக்ஞையை செய்தி மூலமாக கொடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மக்களை குழப்ப வேண்டும் என்பது இதனுடைய சமிக்ஞை என்று நான் நினைக்கிறேன். விஜயை பொருத்தவரை தான் முதலமைச்சர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதற்கு பிறகு அமித்ஷா எங்கே தங்கினால் என்ன? அவர் விஜயை முதலமைச்சர் வேட்பாளர் என்று ஏற்றுக்கொள்வாரா? அது எப்படி சாத்தியமாகும்.

அதே நாளிதழிலில் மற்றொருபுறம் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 50 இடங்கள் என்று செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதிமுக இந்த குழப்பங்களை யோசித்து தான் டிசம்பர் மாதம் கட்சியின் பொதுக்குழு – செயற்குழுவை கூட்டியுள்ளனர். ஆட்சியில் பங்கு உண்டா? இல்லையா? என்பதை அதிமுக விளக்கம் அளித்தாக வேண்டும். எனக்கு தெரிந்து ஆட்சியில் பங்கு இல்லை என்று அவர்கள் சொல்லி விடுவார்கள். காரணம் தம்பிதுரை வரை அதைதான் பேசி கொண்டிருக்கிறார்கள். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளபோதும், பாஜக அழுத்தம் காரணமாக சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்கினார்.

பாஜகவின் நோக்கம் என்பது, நாளைக்கு பவன் கல்யாணுடன் தனிக்கூட்டணி அமைத்து நாளை ஆந்திராவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தாகிவிட்டது. ஆனால் அவரிடம் இருந்த அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிட்டது. அதன் நோக்கம் பிகாரில் முதன்மை கட்சியாக வர வேண்டும் என்பதுதான். அப்போது நிலைமை தான் அதிமுகவுக்கும் ஏற்படும். அப்போது ஆட்சியில் பங்கு என்கிற ஏற்பாட்டிற்கு அதிமுக எப்படி சம்மதிக்கும்?

அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக அவர்கள் 150 இடங்களிலாவது நிற்க வேண்டும்.அப்போது பாஜகவுக்கு எப்படி 50 இடங்களை தர முடியும்? அதே செய்தியில் ராமதாசையும், அன்புமணியையும் ஒரே கூட்டணியில் கொண்டுவருவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ராமதாஸ், கடந்த முறை கொடுத்த 23 இடங்களை தனக்கு கொடுக்க வேண்டும் என்கிறார். அன்புமணியும் தனக்கு 23 இடங்கள் வேண்டும் என்கிறார். அப்போது இவர்களுக்கே 46 இடங்கள்  போகிறது. இவர்கள் தவிர்த்து கிருஷ்ணசாமி 5 இடங்கள் கொடுத்தாலும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிறார். தேமுதிக 2 ராஜ்யசபா சீட், 25 எம்எல்ஏ தொகுதிகள் கேட்கிறார்கள்.

இவர்கள் கேட்கிற இடங்களை கொடுத்தால் அதிமுக 100 இடங்களுக்கும் குறைவாக தான் நிற்க முடியும்? அதிமுக வைக்கப்போகிற செயல் திட்டம் என்பது தனிப் பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் போட்டியிடுவோம். தனி பெரும்பான்மை கிடைத்தால், நாங்கள் ஆட்சி அமைப்போம் என்பதுதான். திமுகவும் இதே செயல் திட்டத்தைதான் முன்வைப்பார்கள். காங்கிரசுக்கு அதிகபட்சமாக 25 இடங்கள் தான் கொடுக்க முடியும். கூட்டணி விவகாரங்களை பொருத்தமட்டில் திமுக என்ன முடிவு எடுக்கிறதோ? அதுதான் அதிமுகவின் திட்டமாகும்.

தவெகவின் பார்முலாவும் இதுவாக தான் இருக்க முடியும். விஜயை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதற்கு டிடிவி தினகரன் தயாராக உள்ளார். மொத்தமாக பார்க்கிறபோது 4 அணிகளாக தான் போகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 அணிகள் ஆகிறது. இந்த அணிகளில் இடம் கிடைக்காவிட்டால் 5வது அணி உருவாகும். 1977 சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் 33 சதவீதம் வாக்குகளை தான் வாங்கினார். எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட்டன. 4 அணிகளாக போட்டியிடுகிறபோது டெபாசிட் வாங்க முடியாது. டெபாசிட் வாங்கவே 16.6 சதவீதம் வாக்குகளை வாங்க வேண்டும். ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் வாக்குகள் இருந்தால்தான் 16.6 சதவீதம் வாக்குகள் வரும். எந்த கூட்டணியாக இருந்தாலும் உண்மையிலேயே 20 சதவீதம் வாக்குகள் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் நிறைய தொகுதிகளில் டெபாசிட் போய்விடும்.

இப்படி பிரித்து பார்க்கும்போது உண்மையிலேயே ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சி திமுக மட்டும் தான். 35 சதவீதம் வாக்குள்ள கட்சிக்கு தான் ஆட்சி கனவே இருக்க வேண்டும்.  விஜய், தன்னை புரமோட் செய்ய வேண்டும் என்றால் அவர் உழைக்க தொடங்கலாம். அப்படி செய்தால் அடுத்த அடுத்த தேர்தல்களில் பார்க்கலாம். சிரஞ்சீவியை போன்று ஒதுங்காமல் நிலைத்து இருந்தால் அடுத்த தேர்தல்களில் விஜய்க்கு வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுக்கான வாய்ப்பு அறவே கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ