நடிகர் விஜய் திமுகவை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வேன் என்று கூறுவது அவர் அதிமுக – பாஜக கூட்டணி செல்வேன் என்பதை தான் மறைமுகமாக சொல்லியுள்ளார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிகள் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக அணி 47 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த வாக்குகள் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றது என்றாலும், ஒரு சட்டமன்றத் தேர்தல் போல ஸ்டாலினை முன்னிறுத்திதான் பெற்றார்கள். 2019ல் இதை விட சற்று அதிகம் வாக்குகள் கிடைத்தது. இந்திரா காந்தி குடும்பத்திற்கு என தனி செல்வாக்கு உள்ளது. ஆனால் 2024ல் விழுந்தது எல்லாம் ஸ்டாலினுக்கான வாக்குகள் ஆகும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி எதிர்ப்பு வாக்குகளை திமுக கூட்டணி அறுவடை செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் மோடிக்கு ஆதரவாக 18 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன.
அதிமுக இன்னும் எம்ஜிஆர் – ஜெயலலிதா என்கிற பிம்பத்தை விட்டு வெளியே வரவில்லை. திமுக கலைஞர் என்கிற பிம்பத்தை விட்டு பலரும் வெளிவரவில்லை. இவர்கள் இருந்தவரை தமிழக அரசியலில் சாதிய கூறுகள் ஒழிவு மறைவாக இருந்தன. அவர்களது மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் சாதிய கூறுகள் மிகப்பெரிய அளவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், பாமக இல்லாமலேயே வடமாவட்டங்களில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றது. ஆனால் 10.5 சதவீதத்தால் பாதிக்கப்பட்ட மக்களால் தேனியில் குறைவான வாக்குகளே பெற முடிகிறது. ராமநாதபுரத்தில் குறைந்த வாக்குகளை அதிமுக பெற்றது. அதிமுகவின் வாக்குகள் வெளியேறிவிட்டது. காரணம் அதிமுகவின் தன்மை மாறிவிட்டது. ஜெயலலிதா இருந்தபோது ஜெயித்தாலும், தோற்றாலும் வாக்கு சதவீதம் பெரிய அளவில் மாறுதல் இருக்காது.ஆனால் தற்போது புதுச்சேரியில் அதிமுக 4வது இடத்திற்கு சென்றுள்ளது.
எதற்காக கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் 90 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்கு அளிக்கிறார்கள். அதிமுக பாஜக எதிர்ப்பு என்கிற புள்ளியில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலேயே ஒரு சாதியின் மிரட்டலுக்கு பயந்து எடப்பாடியும், சி.வி.சண்முகமும் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தபோதே சாதிய அரசியல் வந்துவிட்டது. இதை தவறு என்று துணிவு இல்லாதவர்கள் என்னை சாதியவாதி என்று குற்றம்சாட்டுகிறார்கள். அதனால்தான், தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் எடப்பாடிக்கு எதிராக மாறினார்கள். அதுதான் 2026லும் எதிரொலிக்கும். மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வாக்களிக்கிறார்கள். 1977ல் இருந்து 2016 வரை என்றைக்காவது இப்படி அதிமுகவில் சேலத்திற்கும் நெல்லைக்கும், விழுப்புரத்தும் ராமநாதபுரத்துக்கும் இவ்வளவு பெரிய இடைவெளி வந்ததுண்டா?
10.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக அதிமுகவுக்கு வடக்கு மற்றும் கொங்கு மண்டலத்தில் நன்மைதான் நடைபெற்றுள்ளது. அதேவேளையில், இதனால் அதிமுகவுக்கு தான் நன்மை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை என்று பாமக சொல்கிறது. அதிமுக – பாமக கூட்டணி என்பது உடைந்த கண்ணாடி. அது மீண்டும் ஒட்டுகிறபோது பாமகவுக்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும். அதிமுக விக்கிரவாண்டியில் 36 சதவீத வாக்குகளை எடுத்தனர். 12 சதவீதம் வாக்குகள் பாமகவுக்கு கிடைத்தது. 23 சதவீத அதிமுக வாக்குகள் திமுகவுக்கு மாறியுள்ளது. இதுதான் ராமதாசுக்கு மாறியுள்ளது. பென்னாகரம் இடைத்தேர்தலில் 50 சதவீதத்தை தாண்டமுடியவில்லை. ஆனால் இன்றைக்கு 60 சதவீதத்தை தாண்டி போய் விட்டார்கள். அதிமுக வாக்குகள் பாமகவை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.
தவெக தலைவர் விஜய், திமுகவை வீழ்த்த நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்று சொல்கிறார். உதயநிதி ஸ்டாலின் மீதான வன்மம், காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். நாங்கள் அழிந்தாலும் பரவாயில்லை. நாங்கள் எங்களின் எதிரியான திமுகவுக்கு எதிராக அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்வோம் என்றுதான் விஜய் சொல்கிறார். டிசம்பர் மாதம் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதன் பிறகு மக்களே ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவார்கள் என்று ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். ஆனால் பலத்ததை நிரூபிக்காத விஜயை நம்பி, ஒரு சதவீத பலத்தை நிரூபித்த யாரும் வர மாட்டார்கள். இதை தாண்டி விஜய் தலைமையில் யாரும் வர வாய்ப்பு இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கமலை போன்று 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வாக்கு பலத்தை நிரூபித்தால், அதற்கு ஏற்ப முதலமைச்சராகவோ, துணை முதலமைச்சராகவே ஏற்க முன்வருவார்கள். பலம் நிரூபிக்காத விஜயை நம்பியை யாரும் வர மாட்டார்கள்.
அரசுக்கு எதிரான அலை என்பது 6 சதவீதம்தான். 1967ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டது. அதற்கு பிறகு யாருக்கும் அத்தகை நிலை ஏற்படவில்லை. அந்த அளவுக்கு ஸ்டாலின் அரசு எதுவும் செய்துவிடவில்லை. திமுக கூட்டணியில் மாற்றமோ? அல்லது கட்சிக்குள் ஏதேனும் பிளவோ ஏற்படவில்லை. அதனால் அரசுக்கு எதிரான அலை 6 சதவீதத்திற்கு கீழாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டில் 4 முனை போட்டி அமையுமா என்று கேட்டால்? எனக்கு விஜய் மீது சந்தேகம் எழுகிறது. சீமான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். ஆனால் விஜய், ரஜினிகாந்த் போல சினிமாவுக்கு திரும்பி விடுவாரா? அல்லது பாஜக – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என்று சந்தேகம் உள்ளது.
காரணம் மக்களவை தேர்தலில் கட்சி தொடங்கி 39 வேட்பாளர்களை போட முடியாதவர், 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவாரா? என்பது சந்தேகம்தான். அப்படி 234 தொகுதிகளில் போட்டியிட்டால் நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஒருவர் தனது கையில் வராத வாக்குகளை எப்படி நிருபிக்க முடியும். பவன் கல்யாண், 2019ல் 7 சதவீத வாக்குகளை நிரூபித்தார். 2024 சட்டமன்றத் தேர்தலில் அதை டிரான்ஸ்பர் செய்தார். தற்போது விஜயின் நிலை என்பது அவர் அல்லு அர்ஜுனை போன்று கூட்டம் சேர்க்கும் நபராகத்தான் உள்ளார். பலத்தை நிருபித்த பவன் கல்யாண் கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.