சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சாலையோரம் நின்ற சொகுசு கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் பாண்டியன் என்பவர் கோயம்பேட்டில் இருந்து முகப்பேருக்கு வாடிக்கையாளரை ஏற்றிச்சென்றுள்ளார். அங்கு பயணியை இறக்கிய பின்னர் வாவின் அருகில் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக சென்று உள்ளார். அப்போது திடீரென அவரது காரிலிருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. சிறிது நேரத்தில் காரில் தீப்பற்றி மளமளவென கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் கார் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பாண்டியன் மற்றும் அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.