ஆவடி எச்.பி.எப். மைதானத்தில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமாக கொண்டு திருவள்ளூர் மாவட்ட அளவில் இரண்டாவது புத்தக கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது. மேலும் இந்த புத்த கண்காட்சி வரும் 27-ம் தேதி வரை 11 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல் பி ஜான் வர்கீஸ் தலைமையேற்று ஆவடி மாநகராட்சி ஆணையர் தற்பகராஜ் வரவேற்புரை ஆற்றுகிறார். இப்புத்தகத் திருவிழாவை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைக்கிறார், மற்றும் திமுக பிரமுகர்கள் டி. ஆர். பாலு, ஜெகத்ரட்சகன் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இப்புத்தகத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் பிரம்மாண்டமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் அவர் கூறியதாவது: தற்போதைய நிலையில் பல்வேறு காரணங்களால் புத்தகம் வாங்குவதும், வாசிப்பு பழக்கமும் குறைந்துள்ளது. இதைத் கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
தற்போது பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆவடி, எச்.பி.எப். மைதானத்தில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றார்வாறு ருபாய் 10 முதல் ருபாய் 1000 வரை புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களுக்கும் புத்தக விலையில் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி நாள்தோறும் மாலை நேரங்களில் சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் தமிழ் பண்பாட்டை சேர்ந்த பேச்சாளர்கள் சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.