இரண்டாயிரம் பேர் அமரும் வகையிலும் 2000 வாகனங்களை நிறுத்தும் அளவிலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள பன்நோக்கு மையத்திற்கான இடத்தினை, அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிண்டி அருளாயம்பேட்டையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் வகையிலான புதிய பன்நோக்கு மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர்கள் நேரில் கள ஆய்வு செய்தாா்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, சென்னையின் தென் பகுதியில் அமைந்துள்ள கிண்டி நாகிரெட்டி தோட்டத்தில் வருவாய் துறையின் கீழ் உள்ள 7.15 ஏக்கர் நிலத்தை, மூன்று வருடங்களுக்கு முன் அமைச்சர் மா.சுப்ரமணியனுடன் ஆய்வு செய்ததாக கூறியுள்ளாா். சென்னையின் முக்கிய பகுதியில் இருக்கும் இந்த இடம், புறம்போக்கு நிலமாக இருப்பதால், இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சருடன் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியின் உதவியோடு, சமூக நல நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டிடத்தை அமைக்க, முடிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளாா். அரசாங்கத்தின் முக்கிய விதிகளுக்கு உட்பட்டு, இந்த கட்டிடத்தை கட்ட முடியுமா? என்பதை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாகவும், இந்த இடத்தில், ஒரே நேரத்தில் 2000 நபர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், கார்கள் உட்பட இரண்டாயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கான வசதிகளை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளாா்.
மேலும் வருடத்திற்கு 64 திருமண நாட்கள் ஆன்மீக வகையிலும், நேரம் காலம் பார்க்கப்படாத பகுத்தறிவு நிலையிலான திருமணங்கள் பலவற்றை சூழலுக்கு ஏற்ற வகையிலும் நிகழ்த்த வசதிகள் உள்ளதென குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த பன்நோக்கு மையத்துக்கான திட்ட மதிப்பீடுப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளாா்.
வங்கிகளை வசூல் முகவர்களாக மாற்றிய பாஜக அரசு – கார்கே கண்டனம்