3 நாட்களில் ரூ.2.2 கோடி மதிப்பிலான 4.28 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 3 நாட்கள் மேற்கொண்ட சோதனைகளில் ரூ.2.2 கோடி மதிப்புள்ள 4.28 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தோஹாவிலிருந்து நேற்று (18.05.2023) சென்னை வந்த விமானத்தில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை செய்த போது, ரூ.28.13 லட்சம் மதிப்புள்ள 524 கிராம் தங்கத்தை பசை வடிவத்தில் மறைத்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரிடம் மேற்கொண்ட பரிசோதனையின் போது ரூ.18.89 லட்சம் மதிப்புள்ள 352 கிராம் தங்கத்தை பசை வடிவில் கடத்திக் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் ரூ.20.29 லட்சம் மதிப்புள்ள 378 கிராம் தங்கத்தை பசை வடிவில் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மட்டும் மொத்தம் ரூ.67.32 லட்சம் மதிப்புள்ள 1.254 கிலோ கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கனவே 16.05.2023 அன்று துபாய், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களில் மூன்று பயணிகளிடம் தனித்தனியாக மேற்கொண்ட சோதனைகளின் போது ரூ.96.80 லட்சம் மதிப்புள்ள 1.803 கிலோ கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் 11.05.2023 அன்று துபாய், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களில் இரண்டு பயணிகளிடம் மேற்கொண்ட சோதனைகளின் போது ரூ.64.65 லட்சம் மதிப்புள்ள 1.225 கிலோ கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரு நாட்களில் சுமார் ரூ.1.61 கோடி மதிப்புள்ள 3.03 கிலோ கிராம் கடத்தல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 நாட்கள் மேற்கொண்ட சோதனைகளில் ரூ.2.2 கோடி மதிப்புள்ள 4.28 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.