சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் ஒன்று சாலையோர செருப்பு தைக்கும் கடையின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
சென்னை அம்பத்தூரில் இருந்து அயப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடியது. அயப்பாக்கத்தில் சாலையோரம் இருந்த செருப்பு தைக்கும் கடையின் மீது பாய்ந்த கார் அங்கிருந்த கம்பத்தின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி லேசான காயமடைந்த நிலையில் கம்பம் தடுத்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் காயமடைந்த செருப்பு தொழிலாளியை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் வெங்கடராமனை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். மேலும், காரிலிருந்து தப்பி ஓடிய மற்றொரு போதை ஆசாமியையும் விரட்டி பிடித்து, இருவரையும் திருமுல்லைவாயில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, போலிசார் கார் ஓட்டுநர் வெங்கட்ராமன் மீதும் உடன் இருந்தவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அயப்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.