கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கினார்.
சென்னை மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மலேரியா தடுப்பு பணியாளர்கள், மயான பூமிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பொதுக் கழிவறை துப்புரவு பணியாளர்கள், மாநகராட்சியின் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பணிபுரிபவர்கள், களப்பணியில் ஈடுபடும் சாலை பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 29,461 பேர் இந்த திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்.

கோடைக்காலங்களில் உடல் வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், பணியாளர்களின் உடல் நீர்ச்சத்தை பராமரிக்கவும், உடல் வெப்பத்தை தணிக்கவும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தினமும் குளிர்ச்சியான மோர் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆவின் நிறுவனத்திடம் இருந்து 200 மில்லி லிட்டர் மோர் பாக்கெட்டுகள் ரூ.8 என்ற விலையில் கொள்முதல் செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, தூய்மை பணியாளர்களின் பணி மிக முக்கியமானது என்றும், சென்னை மாநகராட்சியை சிங்காரமாக வைத்திருக்க அவர்களின் உழைப்பே முக்கிய காரணம் என்றும் பாராட்டினார். வெயிலும் மழையும் பாராமல் நகரத்தை சுத்தமாக வைத்திருக்க அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், முதலமைச்சர் தூய்மை பணியாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் என்றும், கோடைகாலத்தில் அவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இந்த மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதனுடன், கோடைக்கால வெயிலிலிருந்து பாதுகாக்க தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி வழங்கும் திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேயர் பிரியா அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் சிலிண்டர் விலை மீண்டும்உயர்வு..! மக்கள் அதிர்ச்சி!


