சென்னை மாநகராட்சியின் அனைத்து தெருக்களும் அலங்கோலமாக இருப்பது ஏன்?- பாஜக
சென்னை மாநகராட்சியின் அனைத்து தெருக்களும் அலங்கோலமாக இருப்பது ஏன்? என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னையில் மழை நீர் வடிகால்வாய் பணி முடிந்து மாதங்கள் பல ஆகியும், அந்த பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் இன்று வரை சீரமைக்கப்படவில்லை. பெரும்பாலான சாலைகள் குண்டும்,குழியுமாகவே பல மாதங்களாக இருந்து வருவது கண்டிக்கத்தக்கது. சிங்கார சென்னை என்று மார்தட்டி கொள்ளும் தமிழக அரசு,மாதங்கள் பல ஆகியும் அலங்கோல சென்னையாகவே தொடர்நது நீடிப்பது குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? மழை நீர் வடிகால்வாய் பணி முடிந்து குழிகளை அடைத்த சில நாட்களிலேயே மின் துறை, கழிவுநீர் பணி என பல்வேறு துறை பணிக்காக மீண்டும் மீண்டும் சாலைகள் அலங்கோலப்படுத்தப்படுவது ஒருங்கிணைப்பில்லாத நிர்வாக சீர்கேட்டின் அவலம்.

சொத்து வரி, தொழில் வரி என எல்லா வரிகளையும் உயர்த்தி வருவாய் ஈட்டும் மாநகராட்சியின் அனைத்து தெருக்களும் அலங்கோலமாக இருப்பது ஏன்? எதற்காக, யாருக்காக காத்திருக்கிறது? உடனடியாக அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டியது மாநகராட்சியின் பொறுப்பு” என சாடியுள்ளார்.