மக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் “ஹெல்த் வாக்” திட்டம் மேலும் 38 இடங்களில் விரிவு படுத்தப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
மக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் “ஹெல்த் வாக்” திட்டம் விரிவு பெறுகிறது. வேளச்சேரி – தரமணி எம்.ஆர்.டி.எஸ் சாலையில், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் இணைந்து “GET FIT CHENNAI” என்ற கருப்பொருளில் நடைப்பயணம் (Walkathon) மற்றும் மிதிவண்டி பயணம் (Cyclithon) நடைபெற்றது. சிறுவர்கள் முதல் மூத்தோர் வரை 200-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“முதல்வர் மு.க. ஸ்டாலினின் முன்முயற்சியால் மக்களிடையே நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி 38 மாவட்டங்களில் ‘ஹெல்த் வாக்’ திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 8 கி.மீ நீளமான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
இந்த நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு, மரங்கள் நடுதல், இருக்கைகள், செல்ஃபி பாயிண்டுகள், விழிப்புணர்வுப் பலகைகள் போன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் இங்கே ஆரோக்கிய முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
தற்போதுள்ள 38 இடங்களுக்கு மேலாக, மேலும் 38 இடங்களில் “ஹெல்த் வாக்” திட்டம் விரைவில் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார். வேளச்சேரி–பெருங்குடி இணைப்பு சாலையில் 3.4 கி.மீ நீளத்துக்கு நடைபாதைகள் மேம்படுத்தப்பட்டு, தெருவிளக்குகள் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ‘பசுமை வேளச்சேரி’ திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன.
மொத்தம் 6.8 கி.மீ (சென்று திரும்புதல்) நீளமான நடைபாதை, ரூ.15.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.
மேலும், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ”வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் நிலையில், சுகாதாரத்துறை அவசரகால நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றின் படி, அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணி தாய்மார்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் அவசர மருந்துகள், தடுப்பூசிகள், படுக்கைகள் போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
24 மணி நேர மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவும், ஜெனரேட்டர்கள் சீராக இயங்கும் நிலையில் வைத்திருக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மற்றும் இறந்த விலங்குகளை உடனடியாக அகற்ற, சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான படுக்கைகள், சுத்தமான கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தண்ணீரில் குளோரின் பவுடர் கலக்கப்படுகிறதா என்பதை சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். பிளீச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகள் உள்ளாட்சித் துறையின் மூலம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேங்கிய நீரில் கொசு புழுக்கள் உருவாகாமல் தடுக்கும் நோக்கில் புகை தெளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு, மலேரியா போன்ற நோய்களைத் தடுக்க தேவையான உபகரணங்கள், பணியாளர்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பொது சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.
எனது அடுத்த பட அறிவிப்பு இந்த மாதத்தில் தான் வரும்…. அஜித் பகிர்ந்த தகவல்!


