கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் எதிர்காலத்தில் கையாளக்கூடிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.பி. ஆர்.ராசா பாராட்டியுள்ளாா்.
சென்னை, திருவொற்றியூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நல திட்ட உதவிகள், சமபந்தி பிரியாணி உணவு என தடபுடலாக திமுகவினர் கொண்டாடினர். திருவொற்றியூர் சன்னதி தெருவில் திமுக பகுதி அலுவலகத்தில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்கினர்.
துப்புரவு தூய்மை பணியாளர்கள் ஏழை எளிய மக்கள் பெண்கள் என ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை அடுத்து திருமண மண்டபத்தில் அனைவரையும் அமர வைத்து பிரியாணி உணவு பரிமாறினார். முன்னதாக பகுதி அலுவலகத்தில் திமுக கொடி ஏற்றிய ஆ.ராசா, “திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் இந்த மண்ணிலே மொழியை காப்பதற்கு இனத்தை மீட்பதற்கு பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்டு, கலைஞர் 50 ஆண்டுகளாக இயக்கத்தின் தலைவராக 5 முறை தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பணியாற்றினார்.
அதற்குப் பிறகு இந்தக் கொள்கை நீர்த்து போய்விட கூடாது என்பதற்காக பெரியார் கொள்கையும் திராவிட தத்துவம் இல்லை என்றால் தமிழர்களை காப்பாற்றுவதற்கு நாதியில்லாமல் போய்விடும் என்பதற்காக அண்ணா வழியில் கலைஞர் வழியில் தத்துவத்தை காப்பாற்றுகின்ற மகத்தான தலைவராக தமிழ்நாட்டில் முதலமைச்சராக இந்தியாவில் இருக்கின்ற பிற மாநிலத் முதலமைச்சர்கள் எல்லாம் வியப்புடன் திரும்பிப் பார்க்கக் கூடிய நம்பர் ஒன் முதலமைச்சராக இருக்க கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவர் கலைஞர் இருக்கும்பொழுது எப்படி இளைய தலைவரை தயார் செய்தாரோ அதேபோல தத்துவம் ஆள்வதற்கு, திராவிடம் ஆள்வதற்கு, இனம் மீட்புக்கு, சமூக நீதிக்கு, பெண் உரிமைக்கு என எல்லா உரிமைக்கும் போராடுகின்ற இயக்கம் கலைஞர் இருந்த பொழுது ஸ்டாலின் என்கின்ற மாமனிதரை கொண்டு வந்து நிறுத்தியதோ அதைப்போல நம்முடைய தலைவர் ஆட்சியினுடைய தலைவராகவும், கட்சியினுடைய தலைவராகவும் செயலாற்றுகின்ற அதே காலகட்டத்தில் அந்தக் கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் எதிர்காலத்தில் கையாளக்கூடிய இளம் தலைவராக உதயநிதி ஸ்டாலினை பார்க்கின்றோம்.

எனவே தான் பிறந்தநாள் விழா தனி மனிதருக்கான பிறந்தநாள் விழா அல்ல. தத்துவம் வாழ வேண்டும் என்பதற்காக நாம் எடுக்கின்ற விழா. திராவிட தத்துவம் வாழ வேண்டும் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக எடுக்கக்கூடிய விழா. அந்த விழாவில் உங்களுடன் சேர்ந்து ஆருயிர் இளவல் உதயநிதி ஸ்டாலின் பல்லாண்டு காலம் வாழ்த்தி இனத்திற்கு மொழிக்கும் அவர் இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டும் என வாழ்த்திகிறேன்” என்று ஆ.ராசா கூறினாா்.


