Homeசெய்திகள்சென்னைஅனைத்து துறைகளும் தயார்.. காற்று, மழையின் போது வெளியே வராதீங்க - சிவ்தாஸ் மீனா வேண்டுகோள்..

அனைத்து துறைகளும் தயார்.. காற்று, மழையின் போது வெளியே வராதீங்க – சிவ்தாஸ் மீனா வேண்டுகோள்..

-

மிக்ஜம் புயல்
புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், காற்று- மழை அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மிக்ஜம் புயல் சென்னையை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலையத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, “தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், இந்த மாவட்டங்களில் அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம். அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினரை தயார் நிலையில் வைத்துள்ளோம்.

சூறைக்காற்று

மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதால் பெரிய அளவில் மழையினால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. பாதிப்பு எந்தெந்த இடங்களில் ஏற்படுகிறது என்பதனை கண்டறியவும், பாதிப்புகளை உடனடியாக சரி செய்யவும், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் ஏரிகளின் நீர்மட்டம், எவ்வளவு நீர் வெளியேற்ற வேண்டும் என்பது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காற்று மழை அதிகமாக இருக்கும் பொழுது பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் வெளியே வரக்கூடாது.” என்றும் கேட்டுக்கொண்டார்.

MUST READ