அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் குறித்து அவதூறு கருத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறி, சென்னையில் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.சென்னை கொளத்தூர், கபாலீஸ்வரர் கலைக் கல்லூரி அருகில் அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கலை கல்லூரிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவதூறு பேசினார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக பழனிச்சாமியை கண்டித்து கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்துக் கொண்டு பதாதைகளை ஏந்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்து பேசினர். அறநிலையத்துறை சார்பில் கல்லூரி கட்டப்பட்டது மிகவும் தேவையானதாக உள்ளதென அவர்கள் கூறினர். அழியாத செல்வம் தான் கல்வி செல்வம் என்றும் அதை வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி ஏன் சொல்கிறார் என்றும் பெற்றோர்கள் வினவினர்.ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்காக இந்த கல்லூரி கட்டப்பட்டுள்ளதாகவும் ஒரு லட்சம் இரண்டு லட்சம் கட்டி படிக்க வைக்க முடியாத சூழல் அரசு சார்பில் இது போன்ற கல்லூரிகள் கட்டப்பட்டிருப்பதை வேண்டாம் என ஏன் சொல்கிறார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். கோவில் காசை கல்விக்கு கொடுப்பது தவறு இல்லை என்றும் இப்படி பேசினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் சார்பில் மாணவர்களுக்காக கட்டித் தரப்பட்டுள்ள கல்லூரியை அகற்ற விட மாட்டோம் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் உறுதிபடத் தெரிவித்தனர்.
நீதிமன்ற அதிகாரத்தை காட்டலாமா? மாநகராட்சி ஆணையருக்கு கடும் கண்டனம்
