விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், அண்மையில், சமூகப் பணி இரண்டாம் ஆண்டு படிக்கும் அஸ்லம், சயீத், நஹல் இப்னு என்ற மூன்று மாணவர்களை இடைநீக்கம் செய்தது. தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்பாக கல்லூரி நிர்வாகம் மூன்று பேரையும் இடைநீக்கம் செய்தது. விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்றும் “சுதந்திர பாலஸ்தீனம்” என வாக்கியங்களை எழுதியது தேச விரோதமான செயல்கள் என்றும், விடுதியின் சுவர்களை சேதப்படுத்திவிட்டார்கள் என்றும் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடை நீக்க உத்தரவை எதிர்த்து மாணவர்கள் மூன்று பேரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நடைபெற்றது.
மாணவர்கள் தரப்பில் வழக்கறிஞர் பி. மோகன் ஆஜராகி சஸ்பெண்ட் உத்தரவு உள்நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், கல்லூரி நிர்வாகத்தில் உள்ள உதவி பதிவாளர் அவினவ் தாக்கூர் என்பவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அதன் காரணமாக பழிவாங்கும் நோக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வாதிட்டார். மேலும் உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மாணவர்களின் நடத்தையில் சில குறைபாடுகள் இருந்தாலும் மற்ற சூழ்நிலைகளை கருதி சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடத்த வேண்டும் என்றும், ஆய்வு திட்டத்தை மாணவர்கள் தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2 நாட்கள் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
