ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 25000 பேர் டிஆர்பி நடத்தும் போட்டி தேர்வு எழுதினர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2,457 ஆசிரியர்களுக்கு பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தை பெற்ற ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் இன்று பணி நியமனம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சரின் வாழ்த்து செய்தியை வாசித்துக் காண்பித்தார். அதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு தானே நேரில் பணிநியமன ஆணை வழங்க காத்திருந்தேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் எனது எண்ணம் எல்லாம் உங்களை நினைத்து உள்ளது. புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பதை ஆசிரியர்கள் அறிவீர்கள். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டுவருகிறது. ஆசிரியர்களுக்கான திட்டங்களை குறையின்றி நிறைவேற்றி வருகிறோம்.

மாணவர்கள் நலனையும் ஆசிரியர்கள் நலனையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை இரண்டு கண்களாக பார்க்கிறது. புதிதாக பணியிட்டிருக்கும் இடைநிலை ஆசிரிய பெருமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மருத்துவமனையில் முதலமைச்சர் ஓய்வு பெற்றிருக்கும் பொழுது நானும் துணை முதலமைச்சர் இருவரும் அவரை சந்தித்தோம். 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஆசிரியர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சிக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நீங்கள் வந்து பணி நியமன ஆணை கொடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தோம்.
பணி நியமன ஆணை பெறுவதற்காக ஆசிரியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் காத்துக் கொண்டிருப்பார்கள். என்னால் அது தடைப்பட வேண்டாம் துணை முதலமைச்சர் வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொள்ளுங்கள் என முதலமைச்சர் தெரிவித்தாக கூறினார். என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆசிரியர்களை பார்த்தாலே எனக்கு பதட்டம் வந்துவிடும். ஒன்று இரண்டு ஆசிரியர்களை பார்த்தாலே பதட்டம் வரும். இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்துள்ளனர் அதனால் பதட்டமாக உள்ளது. பள்ளியிலும், கல்லூரியிலும் நான் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட். நான் என்ன சொல்கிறேன் என உங்களுக்கு புரியும். ஆசிரியர்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரம்பப் பள்ளி கல்வி பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஆசிரியரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மலைப்பகுதிகளில் காலி பணியிடங்கள் இல்லை. இந்தியாவில் தொடக்க கல்வியில் 100% இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான். இது மத்திய அரசின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டது. மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்காமல் நிதிச் சுமையை ஏற்படுத்திய சூழலிலும் தமிழகத்தில் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற முறையில் கூறுகிறேன். குழந்தைகளுக்கு விளையாட்டு நேரங்களை கொடுங்கள், என வேண்டுகோள் விடுத்தார்.
பணி நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் கூறும்போது, தங்களின் 12 ஆண்டு கால காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளதாகவும் திமுக அரசு அமைந்தால் ஆசிரியர்களுக்கு நல்லது நடக்கும் என்று கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சர் இருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினாா்கள்.
கோலிவுட்டில் ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ்… தனுஷின் படமும் ரீ- ரிலீஸ்…