சென்னை செனாய் நகர் பூங்காவில் மரங்களை நட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டாயுதபாணி செனாய் நகர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுமார் 300 மரங்களுக்கும் மேலாக உள்ள செனாய் நகர் பூங்காவானது (திரு வி க பூங்கா) பசுஞ்சோலையாக காணப்பட்டது என்று கூறினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த பூங்காவில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி இருப்பதாக கூறி மெட்ரோ நிர்வாகம் கையில் எடுத்தது. இந்நிலையில் மெட்ரோ பணிகள் நிறைவடைந்தும் பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை 300க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதுடன் மிக ஆழமான வேர்கள் கொண்ட மரங்களை பூங்காவில் நட இயலாது உள்ளிட்ட பல்வேறு புகார் உடன் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவசுப்பிரமணியம் என்பவர் புகார் அளித்தார்.
இதே நேரத்தில் சென்னை வடபழனியில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில் அங்கு விரிவாக்கம் செய்வதற்காக இடங்களை மெட்ரோ எடுக்க முயன்ற போது அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் செனாய் நகர் பூங்காவை முறையாக பராமரிக்காத மெட்ரோ நிர்வாகம் எந்த நம்பிக்கையில் தனியார் இடத்தை கொடுப்பது என வழக்கு தொடுத்தவர்கள் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டாயுதபாணி செனாய் நகர் பூங்காவை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை செனாய் நகர் பூங்காவில் மெட்ரோ நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அப்போது பூங்காவில் மேலும் அதிகமான மரங்களை நடக்கோரி மெட்ரோ நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் மற்றும் மழைநீர் சேகரிக்கும் இடங்களையும் பூங்காவை சுற்றிலும் அமைக்குமாறும் மெட்ரோ அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய செனாய் நகர் பூங்கா பாதுகாப்பு சங்க செயலாளர் சிவகுமார், செனாய் நகர் பூங்காவில் நிலத்தடி நீரானது மெட்ரோ பணிகள் மேற்கொள்வதற்கு முன்பாக 60 முதல் 80 அடியில் கிடைத்தது தற்போது 200 அடிக்கும் கீழாக சென்று விட்டதாக கூறினார்.
மேலும் பூங்காவில் மெட்ரோ பணிகள் மேற்கொண்டதில் பல விதிமுறை மீறல் இருப்பதாகவும் தெரிவித்தார். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மரங்களை நடுதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டாயுதபாணி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுருத்தியதாக அவர் தெரிவித்தார்.