பாகுபலி தி எபிக் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் தொடர்பாக ராஜமௌலி விளக்கம் கொடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் ஒரே படமாக பாகுபலி தி எபிக் என்ற தலைப்பில் திரையிடப்பட்டது. மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வசூல் வேட்டையும் நடத்தியது.
எனவே பாகுபலி 1 திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக ‘பாகுபலி தி எபிக்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படம் உலக அளவில் கிட்டத்தட்ட 1150 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி தற்பொழுதும் வசூலை வாரி சுருட்டி வருகிறது. ஆனால் இந்த படம் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ‘பாகுபலி தி எபிக்’ படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பிரபாஸ் – தமன்னாவின் காதல் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது தமன்னாவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக ராஜமௌலி, “பாகுபலி படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் கதை ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் முக்கியமானது. ஆனால் இதன் புதிய பதிப்பு கதை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இரண்டு பாகங்களை இணைத்துப் பார்த்தபோது அது 4 மணி நேரம் 10 நிமிடங்களாக இருந்தது. அதன் பின்னர் சினிமா மற்றும் மற்ற துறை பார்வையாளர்களுக்கு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த போது அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் காதல் காட்சி, பாடல்கள் நீக்கப்பட்டு 3 மணி நேரம் 43 நிமிடங்களாக எடிட் செய்யப்பட்டது.
இது முற்றிலும் கதை சார்ந்த படைப்பாக உருவாக்க திட்டமிடப்பட்டிருந்ததால் பிரபாஸ் – தமன்னாவின் காதல் காட்சிகளை நீக்குவது தவிர்க்க முடியாமல் போய்விட்டது” என்று தெரிவித்துள்ளார்.


