நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக இருந்து சினிமா சிம்மாசனத்திற்கு வந்து தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்பவர் ரஜினிகாந்த். இவர் திரையில் தோன்றினாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். சிகரெட்டை பிடிக்கும் ஸ்டைல், கண்ணாடி மாட்டும் ஸ்டைல், வேகமாக பேசும் வசனம், நடை, உடை என அனைத்திலும் அவர்தான் தனி பிராண்டு. அந்த அளவிற்கு ரஜினி என்ற பெயர் சொன்னாலே வயது பார்க்காமல் அனைவரும் உற்சாகமாகி விடுவார்கள். இவ்வாறு 50 ஆண்டுகளாக சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி மக்கள் மனதில் நிலைத்திருக்கும் ரஜினி இன்றுடன் தனது 50 ஆண்டுகால திரை உலக பயணத்தை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக ரஜினிக்கு கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், இளையராஜா, வைரமுத்து என பல திரைப் பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் இந்நாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். எனது 50 ஆண்டுகால திரை உலக பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.