கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பல தடைகளை தாண்டி ஒரு வழியாக இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படமானது 2024 ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகாது எனவும் ஜூலை மாதத்திற்கு ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதன்படி ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் டிரைலர் தயாராக இருப்பதாகவும் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ட்ரைலர் ஆக்ஷன் நிறைந்து காணப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படும் போது அதன் முடிவில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான குறியீடு வைக்கப்பட்டுள்ளதாகவும் ரிலீஸ் தேதியுடன் இந்தியன் 3 தொடர்பான அறிவிப்பை பட குழுவினர் வெளியிடுவார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -