கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குட் நைட். இந்த படத்தின் மணிகண்டன் உடன் இணைந்து மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, ஜெகன் கிருஷ்ணன் போன்றோர் நடித்திருந்தனர். குறட்டை என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து உருவான இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இன்று வரையிலும் இந்த படம் பெரிய அளவில் பேசப்படுகிறது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்
இயக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து அவர் என்ன படம் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூன் 17) விநாயக் சந்திரசேகரனுக்கும் பிரியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே விநாயக் சந்திரசேகரன், நடிகர் சிவகார்த்திகேயனின் நேரில் சந்தித்து கதை சொல்லியதாகவும் அதற்கு சிவகார்த்திகேயன் ஓகே சொன்னதாகவும் தகவல் வெளியானது. அதன்படி இனிவரும் நாட்களில் சிவகார்த்திகேயன், விநாயக் சந்திரசேகரன் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.