நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நடிகர் தனுஷ், நயன்தாராவிற்கு ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும் இது தொடர்பாக தனுஷ், நயன்தாரா மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 2025 ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தரப்பில் இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.