நடிகை திவ்யபாரதி தனக்கும் ஜி.வி. பிரகாஷுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். இவர் தற்போது பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதோடு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் பாடகி சைந்தவியை பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தார். அதன்படி இவர்கள் இருவருக்கும் கடந்த 2013இல் திருமணம் நடைபெற்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் திடீரென்று இருவரும் தங்களின் திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். மேலும் இருவரின் திருமணம் செல்லாது எனவும் தங்களுக்கு விவாகரத்து வழங்கும்படியும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கின்றனர். சூழல் எப்படி இருக்க, ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவியின் பிரிவிற்கு திவ்யபாரதி தான் காரணம் என்றும் திவ்யபாரதியும் ஜி.வி. பிரகாஷும் டேட் செய்கின்றனர் என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ஜி.வி. பிரகாஷின் குடும்ப விவகாரத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு திருமணமான ஆணுடன் நான் டேட்டிங் செய்ய மாட்டேன். ஆதாரமில்லாத வதந்திகளை நம்புவது என்னுடைய கவனத்தை ஈர்க்கவில்லை. நான் இதுவரை அமைதியாக இருந்தேன். இருப்பினும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எல்லையை தாண்டிய நிலையில் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் மறுக்கிறேன். நான் ஒரு சுதந்திரமான, வலிமையான பெண். நான் வதந்திகளால் வரையறுக்கப்பட மாட்டேன். எதிர்மறையான விஷயங்களை பரப்புவதை நிறுத்துங்கள். இந்த விவகாரத்தில் இதுவே என்னுடைய முதல் மற்றும் இறுதி அறிக்கையாக இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ், திவ்யபாரதி ஆகிய இருவரும் இணைந்து பேச்சுலர், கிங்ஸ்டன் ஆகிய படங்களில் நடித்திருக்கின்றனர்.