நடிகர் ஜெயம் ரவி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் திரைத்துறையில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார். இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். ஜெயம் ரவி தனது முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து சதா, செந்தில், கோபிசந்த், ராதா ரவி, நிழல்கள் ரவி, நளினி போன்றோர் நடித்திருந்தனர். காதல் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. பல எதிர்ப்புகளை தாண்டி அந்த காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதை மிகவும் எதார்த்தமாக காட்டி இருந்தார் இயக்குனர் மோகன் ராஜா. படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதுமுக நடிகர்களாக இருந்தாலும் எமோஷனல் காட்சிகளும் காதல் காட்சிகளும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப் பொருத்தமானதாக அமைந்து மாபெரும் வெற்றி பெற்றது. இன்று வரையிலும் இந்த படம் பலரின் ஃபேவரிட் படங்களில் ஒன்றாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்றுடன் (ஜூன் 21) 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் சமீப காலமாக பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜெயம் படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.