கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் என்று திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதன் மூலம், அவர் எதிரிகள் உள்ளார்கள் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இது ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்பு என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்று முடிந்த திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை குறித்தும், அதன் பின்னணி குறித்தும் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கண்ணுக்கெட்டிய தூரத்தில் தேர்தல் வருகிறபோது, அந்த நேரத்தில் நடைபெறுகிற எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் தேர்தலை மையப்படுத்திய ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் வழக்கமான பொதுக்குழுவாக கூடாமல் திறந்த அரங்கில் 3,500 பேர் இருக்க வேண்டிய இடத்தில் கூடுதலாக சிறப்பு அழைப்பாளர்கள் என்கிற பெயரில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் என்று சுமார் 7000 பேரை கூட்டுகிறார்கள். அப்படி எனில் இந்த கட்சியின் ரத்த நாளங்களாக இருக்கக்கூடிய இடைப்பட்ட நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஊட்டி அனுப்பக்கூடிய ஒரு நிகழ்வாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் நான் கவனித்தது 2 விஷயங்களாகும். முதலாவது தான் அறிவாலயத்தில் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். முதலமைச்சர் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் வரை தனது வயதை மீறி உழைக்கிறார்.ஆனாலும் தொண்டர்களுக்கும் முதலமைச்சருக்குமான இடைவெளி விழுந்தது நிஜம்தான். தொண்டர்களுக்கு மட்டுமின்றி நான் சில இடங்களில் சுட்டிக்காட்டியது போல அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்குமே இடைவெளி உள்ளது. ஆனாலும் தேர்தல் களத்தில் கீழே இறங்கி வேலை செய்யப்போகிற அந்த தொகுதி அளவிலான நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்திக்கிறேன என்கிறபோது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும். குறைந்தபட்சம் இந்த ஆண்டிலாவது அதை தொடங்குகிறார் என்கிறபோது அதை வரவேற்கலாம்.
திமுக பொதுக்குழுவில் இரண்டாவது முக்கிய அம்சம், முதலமைச்சர் சிறப்பு சிறப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவந்தார். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு உறுப்பினரையாவது சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு காரணமாக அரசின் நலத்திட்டங்கள் ஒரு வீட்டில் ஒருவருக்காவது சென்றடைந்துள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு வீட்டையும் நாம் சென்றடைந்துள்ளோம் என்கிறார். அது உண்மைதான். பள்ளி மாணவர்கள் இல்லாத வீடே இல்லாதபோது குறைந்தபட்சம் அந்த வீட்டிற்கு ஒரு திட்டம் போய் சேர்ந்துவிடுகிறது. அதேவேளையில் கடந்த 2 ஆண்டுகளில் அந்த ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கிற யாராவது ஒருவர் பாதிக்கப்படுகிற சில விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அதில் இயல்பாகவே டாஸ்மாக்கும் ஒன்றாக உள்ளது. ஜெயலலிதாவே இதை உணர்ந்துகொண்டார். அதனால் வருடத்திற்கு 500 கடைகள் வீதம் 2000 டாஸ்மாக் கடைகளை மூடிக்காண்பித்தார். திமுக ஆட்சி அமைந்த முதல் ஆண்டில் 500 கடைகள் மூடப்பட்டன. அதன் பிறகு மதுக்கடைகள் மூடப்படவில்லை. குறைந்தபட்சம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை கணக்கெடுத்து மூடியிருந்தாலே வருஷத்துக்கு 500 கடைகளை மூடி இருக்கலாம். அதை செய்யவில்லை.
பொதுக்குழு நடைபெறும் மதுரைக்கு புறப்படும் முன்பாக முதலமைச்சர், மதுரை மாநகராட்சி மேயரின் கணவரை கட்சியில் இருந்து நீக்குகிறார். பணம் வசூலிக்கிறார் என்கிற புகாரின் அடிப்படையில் அவரை நீக்குகிறார். சரி அவர் மட்டும்தான் வசூலிக்கிறாரா? தமிழ்நாடு முழுவதும் இந்த வசூல் நடைபெறுகிறது. புதிதாக கட்டிட வரைபட அனுமதி கோரி விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பாதிக்கப் படுகிறார்கள். அப்போது இத்தனை ஆண்டுகள் முதலமைச்சர் என்ன செய்கிறார்? திமுக ஆட்சி அமைந்த ஒன்றரை வருடத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி கவுன்சிலர்களை அழைத்து அறிவாலயத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்த கூட்டத்தின் நோக்கம் சரியானது. ஆனால் அந்த தவறு இன்று வரை நிற்கவில்லை. பொதுக்குழுவுக்கு முதல் நாள் நீங்கள் கட்சியை விட்டு நீக்குகிற வரை அந்த தவறு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பாதிக்கப்படுகிறபோது எப்படி மனசு வந்து அவர்கள் உறுப்பினர்களாக சேருவார்கள்? நல்ல சிந்தனையோடு அந்த தனித்தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவந்தார். அதில் உள்ள தடைக்கற்கள், சங்கடங்களை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.
பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோமாளிகள் சில பேர் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் நிறைவேறாது என்று கூறியுள்ளார். நடிகர்களை மனதில் வைத்து முதலமைச்சர், விஜயை அப்படி சொன்னாரா? என்று தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன் என்றார். அப்போது எதிரிகள் இருக்கிறார்கள் என்பதை முதலமைச்சர் புரிந்துகொண்டுள்ளார். அது ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்பு ஆகும். அதை முதலமைச்சர் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டியது இந்த பணிவுதான் என்று சொன்னார். அதை நான் வரவேற்கிறேன். அது எடப்பாடியிடம் இல்லையே என்று தான் நான் பல நேரங்களில் ஆதங்கத்துடன் சொல்லிக் காட்டியுள்ளேன். முதலில் ஒரு தோல்வி ஏற்பட்டால், முதலில் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். யாரையும் பொறுப்பு ஆக்காமல், அந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொல்பவர் தான் தலைவர் என்று நான் சொல்வதன் தொடர்ச்சியாக தான் மு.க.ஸ்டாலினின் பேச்சை பார்க்கிறேன். அது வரவேற்கத்தக்க ஒன்று.
ஆட்சிக்கு எதிராக ஊடக பலம் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது உண்மைக்கு மாறானதாகும். எடப்பாடி எப்படி ஒரு வகையில் ஊடகங்களை மறைமுகமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ, அதுபோல திமுக வேறுசில வழிமுறைகளை பயன்படுத்தி இன்றைக்கும் ஊடகங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அதையும் மீறிதான் எங்களை போன்ற சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வேக்களை பற்றி முதலமைச்சர் சொன்னார் என்று தவறு கிடையாது. இந்த ஆட்சியின் மீதான குறைகள் குறித்து முதலமைச்சர் சொன்னார் என்றால், அவர் தன்னுடைய பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். நிஜமான குறை என்றால் உளவுத்துறையை வைத்துள்ளார். தனிப்பட்ட முறையில் சர்வே எடுக்கிற டீம்களை வைத்துள்ளார். போய் விசாரித்து நடவடிக்கை எடுக்கட்டுமே? மதுரையில் இருந்து மேயரின் கணவர் மீது கடந்த 2 வருடங்களாக புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. அமைதியாக இருந்தார். தற்போது அது குறித்து விசாரித்துவிட்டுதான நடவடிக்கை எடுத்துள்ளார். அதுபோல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. சென்னையில் இதுவரை 5 கவுன்சிலர்களை நீக்கிவிட்டார்கள். வெட்கமே இன்றி 50 பேரையாவது நீக்கி இருந்தால்தான் அவர்களுக்கு பயம் வரும். கவுன்சிலரால் பாதிக்கப்பட்ட மக்கள் எப்படி திமுகவுக்கு வாக்களிப்பார்கள்?
மதுரைக்கு தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு. அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தியிருப்பார்கள். மதுரைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அண்ணன் அழகிரியை சந்தித்து பேசியதை ஆச்சரியமாக பார்க்கவில்லை. இது முதல் சந்திப்பாக இருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கலாம். அழகிரியும் கடந்த காலத்தில் தான் செய்த தவறுகளை, செய்யத் தவறி விஷயங்களை அமைதியாக இருந்த இந்த 3, 4 ஆண்டுகளில் அசைபோட்டு பார்த்திருப்பார். மேலும், அழகிரியின் மகனுக்கு நடைபெற்ற மருத்துவ ரீதியான தேவைகளை ஏற்படுத்திய நிகழ்வும், அவரை பழைய அழகிரியாக அவரது விரோதிகள் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஆகிவிட்டபோது, அவரது தம்பி எப்படி அவரை விரோதியாக பார்ப்பார்.
ஸ்டாலினுக்கு முதலமைச்சராகிற தகுதி இல்லை என்று சொன்னவர் என்று பழசை எல்லாம் நினைத்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. இன்றைக்கு அவருடைய மனநிலை, அவருடைய சூழ்நிலையை மனதில் வைத்து அவரு ஊருக்கே போயிருக்கும்போது, அழகிரியின் வீட்டிற்கு போயிருக்கிறார் என்றால் இதை சகோதர பாசமாக தான் பார்க்கிறேன். அதை தாண்டி இதில் அரசியல் கிடையாது. திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியலுக்காக புகுத்தப்பட்ட தீர்மானம் என்று நான் பார்க்கவில்லை. ஆனால் தீர்மானம் போட்டவுடன் பிரேமலதா வரவேற்றதையும், நன்றி தெரிவித்ததையும், அதே நாளில் கூட்டணி தொடர்கிறது என எடப்பாடி சொல்லியும் அதை ரசிக்காத ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியதை வைத்து பார்த்தால் ஏதோ இருப்பது போல சந்தேகப்படுவதில் வியப்பு ஏதும் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.