ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹிப் ஹாப் ஆதி ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். அதன் பின்னர் இவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி அரண்மனை, ஆம்பள, தனி ஒருவன் என பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து பெயரையும் புகழையும் பெற்றார். அதன் பின்னர் நடிப்பிலும் ஆர்வமுடைய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.
அந்த வகையில் இவர் கடைசியாக ‘கடைசி உலகப் போர்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி தானே தயாரித்து, இயக்கி, நடித்தும் இருந்தார். அதற்கு முன்னதாக இவர், கடந்த 2017 இல் வெளியான ‘மீசைய முறுக்கு’ எனும் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த படமானது ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது.
இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி, மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை இயக்குகிறாராம். முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்தையும் ஹிப் ஹாப் ஆதி மற்றும் சுந்தர். சி ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


