நடிகர் கார்த்தியின் புதிய பட அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது மார்ஷல், சர்தார் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இது தவிர வருகின்ற டிசம்பர் மாதம் இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் கார்த்தி பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது தவிர இயக்குனர் சுந்தர்.சி-யுடனும் கூட்டணி அமைக்கப் போவதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் கார்த்தி ஹிட் 4 படத்திலும், சிரஞ்சீவியுடன் இணைந்து புதிய படத்திலும் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி, பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது தற்போது சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 46’ படத்தை தயாரிக்கும் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் கார்த்தியின் புதிய படம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தை ‘மேட்’ படத்தின் இயக்குனர் கல்யாண் சங்கர் இயக்க இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


