பாடகி கல்பனா நான் உயிருடன் இருப்பதற்கு என் கணவர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
பாடகி கல்பனா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அந்த வகையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. அதன்படி காவல்துறையினரும் கல்பனாவின் வீட்டின் கதவை உடைத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு பாடகி கல்பனா நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதேசமயம் கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கு அவருடைய கணவர் பிரசாத் பிரபாகர் காரணமாக இருக்கலாம் என போலீசார் அவரை கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. பின்னர் பாடகி கல்பனா, அவருடைய மகள் தயா பிரசாத் கேரளாவில் இருப்பதால் அவரை ஐதராபாத்திற்கு அழைத்தபோது அதற்கு அவர் மறுத்துவிட்ட காரணத்தால் மனமடைந்து தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாகபாடகி கல்பனா வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “சமூக வலைதளங்களில் தவறான விஷயங்களை பரப்புகிறார்கள். நான் இப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கம் இல்லாமல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன். அதற்கு மருத்துவர்கள் சில மருந்துகளை எனக்கு பரிந்துரைத்துள்ளனர். அந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு நான் சுயநினைவை இழந்துவிட்டேன். நான் இப்போது உங்கள் முன் உயிருடன் இருப்பதற்கு காரணம் என் கணவர் தான். அவர் அந்த நேரத்தில் வெளியூரில் இருந்ததனால் அவர் என்னை காப்பாற்ற மிகவும் போராடினார். அவரால்தான் நான் உயிர் தப்பித்தேன். எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். எனக்கு தனிப்பட்ட பிரச்சனை எதுவும் கிடையாது. செய்தியாளர்கள், காவல்துறையினர், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றி” என்று தெரிவித்துள்ளார்.