Homeசெய்திகள்சினிமாபாரதிராஜா கண்ட பவளக் கொடி.. ஆதர்சனநாயகி ராதா பிறந்தநாள் சிறப்புப் பதிவு!

பாரதிராஜா கண்ட பவளக் கொடி.. ஆதர்சனநாயகி ராதா பிறந்தநாள் சிறப்புப் பதிவு!

-

தென்னிந்திய திரை உலகின் பிறப்பிலா நடிகை ராதா அவர்களின் 58வது பிறந்தநாள் இன்று.

ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நடிகைகள் இளைஞர்கள் மனதை ஆட்கொண்டு கனவுக் கன்னிகளாக திகழ்வர். அப்படி 1980-களின் கனவுக் க ன்னிகளில் முக்கியமானவர் ராதா. அவர் மட்டுமல்ல ராதாவின் சகோதரி அம்பிகா இருவருமே அன்றைய இளைஞர்களின் கனவு கன்னிகளாக திகழ்ந்தவர்கள் .

இயக்குனர் பாரதிராஜா அறிமுகத்தில் வந்து திரை உலகை ஆட்கொண்ட நடிகைகள் பலர். பாரதிராஜா நடிகையை அறிமுகப்படுத்தும் போது அவர்களின் இயற்பெயரை மாற்றி புதிய பெயர் கொடுத்து தான் அறிமுகம் செய்வார். அப்படி தான் உதய சந்திரிகா என்ற இளம் பெண்ணை ராதா என்ற நடிகையாக திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

பாரதிராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆனார் ராதா. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு அறிமுக நடிகை தன் கனவிலும் எதிர்பார்த்திராத வெற்றி.
அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு தமிழ் சினிமாவில் பல ஸ்டார் நடிகர்களுடன் நடிக்க சிவப்பு கம்பளம் விரித்தது. சிவாஜி, ரஜினிகாந்த், விஜய்காந்த், கமல்ஹாசன், சத்யராஜ்,பிரபு, மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

தமிழில் கொடிகட்டி பறந்த ராதா மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தன் இருப்பை பதிவு செய்தார். ராஜாதி ராஜா, காதல் பரிசு, மெல்ல திறந்தது கதவு , முதல் மரியாதை, இதய கோவில் ,பாயும் புலி, ஜப்பானில் கல்யாணராமன், கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றி படங்கள் கொடுத்துள்ளார்.

மேலும் ராதா, நடிக்க ஆரம்பித்து ஆறு வருடங்களிலேயே 100 படங்களில் நடித்தவர் என்ற சாதனை படைத்தார். 10 வருடங்களில் அந்த எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது.

நடிகை ராதா நடிப்பதில் மட்டுமல்லாமல் நடனம், வசனம் போன்றவற்றிலும் ஆர்வம் உள்ளவர். அதுமட்டுமில்லாமல் இவர் ஏஆர்எஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். கடந்த 2013 ஆம் ஆண்டு இது உணவக வளாகமாக மாற்றப்பட்டது.

இவர் 1991 இல் பிரபல தொழிலதிபர் ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களும் ஓரிரு படங்களில் நடித்துள்ளனர்.

நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகை ராதா ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 மற்றும் 7 நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பொறுப்பேற்றார். அந்நிகழ்ச்சியில் இவர் ‘அடி தூள்’ என்று கூறும் கமெண்ட்களுக்கு இன்றைய வரையிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

திரையுலகின் ஆதர்சனநாயகியான நடிகை ராதாவின் பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வோம்.

MUST READ