2023-ம் ஆண்டில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் தலா ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது என்றால், அது ஷாருக்கானின் படங்கள் தான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷாருக்கான் பாலிவுட்டின் கிங் காங் என்று அழைக்கப்படுபவர். பாலிவுட் பாஷா என்றும் கிங் ஆஃப் ரொமான்ஸ் என்றும் ரசிகர்களால் குறிப்பாக ரசிகைகளால் கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை.
டெல்லியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஷாருக்கானின் ஆரம்பகால வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை. பெற்றோர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட சகோதரியை கவனித்துக்கொள்ளும் கடமையும் ஷாருக்கானுக்கு இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் ‘தில் டரியா’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
அந்த காலத்தில் நடிகர்களுக்கு உண்டான முகவெட்டு உள்பட எந்த அம்சமும் இல்லாத ஷாருக்கானுக்கு, சினிமா என்பது பெருங்கனவாக இருந்தது. ஆனால் அடுத்து அவர் நடித்த ஃபவுஜி என்ற தொலைக்காட்சி தொடருக்கு கிடைத்த நல்ல விமர்சனங்கள் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தது. பள்ளிக்காலத்தில் ஹாக்கி மற்றும் கால்பந்து விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட ஷாருக்கானுக்கு தான் ஒரு விளையாட்டு வீரனாக வேண்டும் என்பதே கனவாக இருந்தது.
மும்பை வந்த ஷாருக்கானை ‘தில் ஆஷ்னா ஹை’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார் நடிகை ஹேமமாலினி. அன்று தொடங்கிய ஷாருக்கானின் திரைப்பயணம் 32 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவரை முன்னிலையில் வைத்துள்ளது. 90 களில் பெரும்பாலான படங்களில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த அவரை ரசிகைகள் தங்களது காதலனாகவே கொண்டாடினார்கள். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தாலும் அவர் வெளிப்படுத்திய உடல் மொழி, முகபாவனைகள் ரசிகர்களை கட்டிப்போட்டன. தனக்குத் தெரிந்ததை திரைமொழியாக்கி வசூலில் சாதனை படைப்பதில், அதிக கவனம் செலுத்திய ஷாருக்கான் பாலிவுட்டின் தவிர்க்க முடியாக ஹீரோவாக மாறினார்.
அர்ப்பணிப்புடன் தனது கதாபாத்திரத்தை அணுகும் ஷாருக்கான் சினிமாவில் மட்டுமன்றி, தொழிலதிபராகவும் தன்னை நிரூபித்துக் காட்டியவர். தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் என இரண்டிலும் வெற்றி கண்டார். இவர் தொகுத்து வழங்கிய கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஷாருக்கானுக்காகவே ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.
2005-ம் ஆண்டு பத்மபூஷண் விருது பெற்ற பாலிவூட் கிங் கான் ஃபிலிம்வேர் விருதிற்கு 30 முறை பரிந்துரைக்கப்பட்டு 15 முறை விருதுகள் பெற்று இருக்கிறார். 58 வது வயதில் அடியெடுத்து வைக்கும் ஷாருக்கானுக்கு, உலகம் முழுவதும் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.