ரோபோ சங்கரின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையிலும் கால் பதித்து பெயரையும் புகழையும் பெற்று ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர் ரோபோ சங்கர். இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்டம்பர் 18) இரவு 9.05 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். துணை முதலமைச்சர் ஸ்டாலின், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் ரோபோ சங்கரின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கர், சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.