சிவகார்த்திகேயனின் பராசக்தி பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ‘மதராஸி’ திரைப்படம் வெளியானது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, சிதம்பரம், இலங்கை, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் 2025 அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

‘பராசக்தி திரைப்படத்தில்’ சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.