சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யா மீண்டும் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘சூரரைப் போற்று’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளனர்.
மேலும் இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை அதிதி சங்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் சங்கரின் மகளான அதிதி, கார்த்தி மற்றும் முத்தையா கூட்டணியில் வெளியான ‘விருமன்’ படத்தில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனது துறுதுறு நடிப்பு மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.
சூரரைப் போற்று திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ், இந்த படத்திற்கும் பணியாற்ற உள்ளார். இன்று மாலை இப்படத்தின் தலைப்பு மற்றும் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.